search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராக்கெட் தயாரிப்பு தொழில்நுட்பம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று - இஸ்ரோ விஞ்ஞானி பெருமிதம்
    X

    ராக்கெட் தயாரிப்பு தொழில்நுட்பம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று - இஸ்ரோ விஞ்ஞானி பெருமிதம்

    ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கூறினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை சார்பில் சமூக அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் முன்னிலை வகித்தார்.

    இன்னர்வீல் சங்கத் தலைவி நர்மதா ரஞ்சன் குத்துவிளக்கு ஏற்றினார். மாணவர் அறிவியல் பேரவை நிறுவனர் வாசன் வரவேற்றார். பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது: -

    விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆக்கப்பூர்வ செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் மாணவர் அறிவியல் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. உண்மையை தேடும் முயற்சியே விஞ்ஞானம். விஞ்ஞான தொழில்நுட்பத்தை தனக்கு மட்டும் என்றோ, குறிப்பிட்ட துறைக்கு என்றோ உரிமை கொண்டாட முடியாது.

    சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும்போது விஞ்ஞானம் உயிர் பெறுகிறது. இயற்கை வளம் சுரண்டல், தனி நபர் ஏகபோகமாக அனுபவிக்க விஞ்ஞானம் பயன்படுவதை அனுமதிக்கக் கூடாது. ஆக்க பூர்வ செயல்களுக்கு விஞ்ஞானத்தை பயன்படுத்த மாணவர்கள் மூலம் சமூக மாற்றம் கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாணவர் அறிவியல் பேரவையின் நோக்கமாகும்.

    விண்வெளியில் செயற்கை கோள் ஏவும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிற நாடுகளின் துணையின்றி ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுள்ளது.

    செவ்வாய் கிரகம் மட்டுமின்றி அண்டைய கோள்களை காணும் தொலைநோக்கு பார்வை என இந்தியா விண்வெளி சாதனையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

    இயற்கை வளம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற வருத்தம் உள்ளது.

    விஞ்ஞானிகள் இதை இன்றைய தலைமுறையினரிடம் சொல்லமால் சென்றுவிட்டால் எதிர்கால சந்ததிகள் நிலை குறித்து கவலையும் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளம் விஞ்ஞானி சிவகாசி மாணவர் ஜெயக்குமாருக்கு பரிசு வழங்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு) சிவசுப்ரமணியன், பிரண்ட்ஸ் சப்போர்ட் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், டாக்டர் சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவர் அறிவியல் பேரவை செயலர் சக்திவேல் நன்றி கூறினார்.
    Next Story
    ×