என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
    • சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ்.

    கொடைக்கானல்:

    இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திர கிரகணமான அரிய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் இந்த முழு சந்திரகிரகணத்தை கண்டு ரசிக்க ராட்சத தொலை நோக்கிகள் அமைத்து விளக்க உரையுடன் ஆராய்ச்சியாளர்கள் முழு சந்திர கிரகணத்தை பற்றி எடுத்துரைக்க உள்ளனர்.

    மேலும் வான் இயற்பியல் ஆய்வகத்தில் நுழைவு கட்டணமின்றி இன்று இரவு மட்டும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆராய்ச்சியாளர் கிறிஸ்பின் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இன்று நடைபெற உள்ள முழு சந்திர கிரகணமானது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தென்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ். இதில் 2 விதமாக காட்சியளிக்கிறது. இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் சூரியனில் இருந்து வரும் கதிர்கள் ஒன்று விலகி செல்லுதல், குறுகி செல்லுதல் இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் அழைக்கப்படுகிறது.

    இன்று இரவு 8:57 மணிக்கு எக்லிப்ஸ் தொடங்கும் 10 மணி அளவில் டார்க் ஷேடோ தொடங்கி 12 மணிக்கு வரை நடைபெறுகிறது. இறுதியாக 2 மணிக்கு நிறைவடையும். 11:40 மணிக்கு சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் வளிமண்டல பகுதியில் பட்டு எதிரொலிக்கும் அலைநீள கதிர்கள் நிலவு மீது சிவப்பு கதிர்கள் பிரதிபலிக்கும்போது ரெட் மூனாக காட்சியளிக்கிறது. இதனை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம். அதே போல இன்று இரவு விமானத்தில் செல்பவர்கள் எளிதாக காணலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை.
    • கமிஷன், கரப்ஷன் ஆகிய பணிகளை மட்டுமே திமுக சரியாக செய்கிறது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதயில் பிரச்சாரம் செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு திமுக அரசால் ஊதியம் வழங்க இயலவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி அதிமுக.

    ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை.

    ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை கொடுக்க வைத்ததே அதிமுக தான்.

    கமிஷன், கரப்ஷன் ஆகிய பணிகளை மட்டுமே திமுக சரியாக செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கி உள்ளார்.
    • எஸ்.பி.வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.

    செங்கோட்டையன் விதித்த கெடுவை அடுத்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் நிலையில், எஸ்.பி.வேலுமணி, முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. 

    • பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது.
    • நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறுகிறார். அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார். அவரது முடிவுதான் எங்களது கருத்து. பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்று கருத்து கிடையாது.

    நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம். மூத்த அமைச்சர்கள் 6 பேர் சென்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒன்றிணைய வேண்டும் என கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தது உண்மையா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. செங்கோட்டையன் முடிவை அவர் தெரிவித்துள்ளார்.

    எங்களது முடிவு பொதுச்செயலாளர் அறிவிக்கும் முடிவை பொறுத்து இருக்கும் என்றார். 

    • 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • வேலைநிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 359 நபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுகந்தி, நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் விக்னேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகா அலுவலகங்களில் புதிதாக துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்டின் கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறுகிய கால அவகாசத்தில் அதிகமாக நடத்தப்படுகிறது. குறிப்பாக வாரத்தில் 5 நாட்கள் நடத்தப்படுவதால் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு 2 முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும். இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 359 நபர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
    • அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 365 நாய்கள் இதில் பங்கேற்றன.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்பதிறன், பராமரிப்பு முறை, உரிமையாளர்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த போட்டியில் நாய்களின் சாகச திறமைகளை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்த இங்கிலீஸ் ஷட்டர் வகை நாய் தட்டிச்சென்றது. அந்த நாயுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது.
    • அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் சேலம் அருள் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் பதில் அளித்திருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் 9 பேருடன் இன்று தைலாபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் 9 நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு கட்சியின் நிறுவன தலைவர் ராமதாசிடம் ஒப்படைத்த பின்னர் அவர் முடிவு செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வரும் என்று கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, டாக்டர் ராமதாஸ் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம். அவர் எந்த கூட்டணியில் அங்கம் வைக்க முடிவு செய்கிறாரோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும். அவர்கள் தான் அடுத்து ஆட்சி அமைப்பார்கள். மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை ராமதாஸ் வைப்பார் என தெரிவித்தார்.

    அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் வெகு விரைவில் அது நடைபெறும் என அருள் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    • கொடைக்கானலில் நேற்று நாய் கண்காட்சி தொடங்கியது.
    • நாய் கண்காட்சியை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வாரவிடுமுறை தினமான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கொடைக்கானலில் குவிந்தனர். நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்த போதும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நட்சத்திர ஏரியை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், மோயர்பாய்ண்ட், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட், அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர்.

    தொடர்ந்து மழை பெய்த போதும், அதில் நனைந்தபடியும், குடைபிடித்த படியும் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.

    கொடைக்கானலில் நேற்று நாய் கண்காட்சி தொடங்கியது. இன்று 2-வது நாளாக நடைபெற்ற கண்காட்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான நாய்கள் கொண்டு வரப்பட்டது. ஜாக்ரசல் பேஷன்சி, அமெரிக்கன் ஸ்டாப்ட், டெரியர், கெய்ன் கார்ஷோ, பர்னிஷ், மவுண்டன், கார்ட்டன் ஹெட்டர், பாஷான் பிரிஸ், ஆஸ்திரேலியா செப்பேடு, அஸ்கர், பொம்மேரியன் மற்றும் தமிழ்நாட்டு நாய் வகைகளான சிப்பிபாறை, ராஜபாளையம், கன்னி உள்பட 40 வகையான நாய்கள் பங்கேற்றன.

    கண்காட்சியில் நாய்களின் குணாசதியங்கள், கட்டளைக்கு கட்டுப்படுதல், பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தி வெற்றி பெறும் நாய்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நாய் கண்காட்சியை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை பகுதிகளுக்கும் சென்றனர். அங்கு எழும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை, சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். மேலும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டுகள், கேரட் உள்ளிட்ட காய்கறிகளையும் வாங்கிச் சென்றனர். 

    • சுற்றுலா தலம் மட்டுமின்றி கொடைக்கானல் ஆன்மீக நகராகவும் விளங்கி வருகிறது.
    • சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட வணிக வரியை அதிகப்படுத்தியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை வழிபட்டு அங்கு நடந்த சதுர்த்தி விழாவில் அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுற்றுலா தலம் மட்டுமின்றி கொடைக்கானல் ஆன்மீக நகராகவும் விளங்கி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இது போன்ற நகரில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தி பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

    எனவே இங்குள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மேல்முறையீடு செய்ய வேண்டும். நட்சத்திர ஏரியில் ரூ.33 கோடியில் நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அது முறையாக நடக்காததால் நடை பயிற்சி செல்பவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    மேலும் சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட வணிக வரியை அதிகப்படுத்தியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொடைக்கானலில் போதை பொருட்களை ஒழிக்க தீவிரம் காட்டி வந்தபோதிலும் கஞ்சா காளான் விற்பனை அவ்வப்போது நடந்து வருகிறது.

    கொடைக்கானல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது. தேச விரோதிகளின் புகழிடமாகவும் உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற விநாயகரை வழிபட்டு பிரார்த்தனை செய்தோம். விண்வெளியில் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைத்து இஸ்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது போல அயன் டோம் அமைத்து ராணுவத்தினர் எதிரிகள் வீசிய ஏவுகணைகளை தகர்த்தனர். இந்திய ராணுவம் சர்வதேச அரங்கில் தலைசிறந்த ராணுவமாக மாறியுள்ளது.

    தமிழகத்தில் வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தி.மு.க.வை வீழ்த்த ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணையும். த.வெ.க. ஒரு அரசியல் கட்சி இல்லை. அது தி.மு.க.வின் ஏ டீமாக செயல்பட்டு வருகிறது. தற்போது தி.மு.க.வை எதிர்த்து பேசுகிறார்கள். அந்த கட்சியின் கொள்கையைதான் பின்பற்றுகிறார்கள். அவர்கள் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல. ரசிகர்கள் மாநாடு. ஆனால் மாநாட்டில் கலந்து கொண்ட ரசிகர்கள்தான் பாவம். விஜய்யை பார்க்க வந்த ரசிகர்களை பவுன்சர்கள் மூலம் தூக்கி வீசுவதுதான் அரசியல் நாகரீகமா? அவர்களுக்கு ரசிகர்கள் மீது அக்கறையும் இல்லை. கருணையும் இல்லை. எப்படி மாநாடு நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக விஜய்யின் மாநாடு இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூம்பாறை செல்லும் சாலையில் அந்த மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று கிடந்தது.
    • பெட்ரோல் இருக்கும் வரை பைக்கை ஓட்டி விட்டு பின்னர் சாலையோரம் அந்த வாலிபர் நிறுத்திச் சென்றுள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஏரிச்சாலையில் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை நடத்தி வரும் லிபு என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்தார். இரவு வந்து பார்த்தபோது அது திருடு போயிருந்தது. இதனையடுத்து தனது கடையில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது உணவு அருந்த வருவது போல வந்த ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை நைசாக சிறிது தூரம் தள்ளிச் சென்று திருடிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதனையடுத்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளையும், அதனை திருடிய வாலிபரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை செல்லும் சாலையில் அந்த மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று கிடந்தது.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு நின்றிருந்தது ஓட்டல் உரிமையாளர் லிபுவின் பைக் என தெரிய வந்தது. பெட்ரோல் இருக்கும் வரை பைக்கை ஓட்டி விட்டு பின்னர் சாலையோரம் அந்த வாலிபர் நிறுத்திச் சென்றுள்ளார். 4 நாட்களுக்கு பிறகு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட நிலையில் அதனை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அவ்வப்போது திருடப்பட்டு வரும் சூழலில் ஓட்டல் உரிமையாளரின் பைக் திருடப்பட்ட சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்து முன்னணியினர், போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
    • விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் 2234 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். இதற்கிடையே திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகின்றனர். ஆனால், இந்து அமைப்புகள் சார்பில் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதை ஏற்காத இந்து முன்னணியினர், போலீசாரின் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ், நகர் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்து முன்னணி நகர தலைவர் ஞானசுந்தரம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன் மற்றும் இந்து முன்னணியினர் மேளதாளம் முழங்க வேனில் 3½ அடி விநாயகர் சிலையை குடைப்பாறைப்பட்டிக்கு கொண்டு வந்து அங்குள்ள காளியம்மன், பகவதியம்மன் கோவிலில் வைத்தனர். பின்னர் அந்த சிலையை கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதையடுத்து கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இந்த விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலைக்கு வந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட செயலாளர் வீரதிருமூர்த்தி மற்றும் 24 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அதேநேரம் இந்து முன்னணியினரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் சரக்கு வாகனத்தில் கொண்டு சென்று மேற்கு தாசில்தார் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் கோட்டைக்குளத்தில் பூஜைகள் செய்து கரைத்தனர். இந்த சம்பவத்தால் குடைப்பாறைப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் வினோத்ராஜ் நிருபர்களிடம் தெரிவிக்கையில், குடைப்பாறைப்பட்டியில் இந்துக்கள் தான் அதிகம் உள்ளனர். ஆனால் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச்செல்ல போலீசார் அனுமதி மறுக்கின்றனர். ஊர்வலம் செல்பவர்களை கைது செய்கின்றனர். இந்த பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகமோ, போலீசாரோ நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்து முன்னணி சார்பில் தினமும் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச்செல்வோம் என்றார்.

    • தனது மனைவியின் குடும்பத்தினரிடம் ஜான்சன் பாபு நியாயம் கேட்டார்.
    • வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை தங்களிடம் வழங்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கோகினூர் பங்களா அருகே உள்ள தனியார் பங்களாவில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தவர் ஜான்சன் பாபு (வயது 36). இவர் கொடைக்கானலைச் சேர்ந்த சசிரேகா என்பவரை காதலித்து கடந்த 10 வருடங்ளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் 3 பேரும் அந்த தனியார் பங்களாவில் வசித்து வந்துள்ளனர்.

    இந்த பங்களாவில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப்பணிகள் நடந்து வந்துள்ளது. அப்போது பணிக்கு வந்த ஆதேஷ ஆண்டனி என்பவருடன் சசிரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சசிரேகாவை கேட்டும் அவர் விடாமல் ஆண்டனியுடன் பழகி வந்துள்ளார். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு செய்துள்ளார். இந்த சூழலில் கள்ளக்காதலனுடன் சசிரேகா நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் அவர்கள் இடையே பேசிய உரையாடல் குறித்த குரல் பதிவு ஆகியவை கணவர் ஜான்சன் பாபுவுக்கு கிடைத்துள்ளது.

    இதனை வைத்துக் கொண்டு தனது மனைவியின் குடும்பத்தினரிடம் ஜான்சன் பாபு நியாயம் கேட்டார். ஆனால் அவர்கள் அந்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை தங்களிடம் வழங்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதனால் உயிருக்கு பயந்த ஜான்சன் பாபு தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதற்கு முன்பாக தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு வாட்ஸ்அப்பில் தற்கொலைக்கான காரணம் குறித்த செய்தியை பதிவிட்டு அனுப்பிய பின் தற்கொலை செய்துள்ளார்.

    ஜான்சன் பாபு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்ததும் உறவினர்கள் ஏராளமானோர் அவரது வீட்டு முன்பு திரண்டனர். கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஜான்சன் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சசிரேகாவின் உறவினர்கள் மிரட்டலால்தான் ஜான்சன் பாபு தற்கொலை செய்து கொண்டதாகவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. மதுமதி, வட்டாட்சியர் பாபு மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×