என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முகநூலில் நீதிபதி குறித்து அவதூறு பதிவு: த.வெ.க. நிர்வாகிக்கு அக்.24-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
- முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
- நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என த.வெ.க.வினர் கோஷமிட்டனர்.
கரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் குறித்து சில கருத்துக்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டியை சேர்ந்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளரான நிர்மல்குமார் (வயது 35). இவர், முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது.
இதைத்தொடர்ந்து சாணார்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து, நிர்மல்குமாரை கைது செய்தனர்.
த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டு பல மணி நேரமாகியும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருவதாக அக்கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என த.வெ.க.வினர் கோஷமிட்டனர். காவல்துறையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட த.வெ.க.வினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களை விடுதலை செய்தனர்.
இந்நிலையில் ஜே3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட திண்டுக்கல் தெற்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல்குமாருக்கு வரும் 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.






