என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போலி மருத்துவர்களால் கருக்கலைப்பு செய்தபோது மாணவி உயிரிழப்பு- போலீசார் விசாரணை
    X

    போலி மருத்துவர்களால் கருக்கலைப்பு செய்தபோது மாணவி உயிரிழப்பு- போலீசார் விசாரணை

    • வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் போலி மருத்துவர்கள் நடமாடி வருகின்றனர்.
    • கிராமப்புறத்தை சேர்ந்த மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 24ம் தேதி உடல் நலக்குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததும், உள்ளூரிலேயே கருக்கலைப்பு செய்ய முயன்றதும், அதனால் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மாணவிக்கு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அதனால் கர்ப்பமடைந்ததாகவும், இதனை அவர் வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் மறைக்க முடியாது என்பதால் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் மாணவிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் போலி மருத்துவர்கள் நடமாடி வருகின்றனர். இவர்கள் இதுபோன்ற கருக்கலைப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறத்தை சேர்ந்த மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போலி மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எனவே மாணவிக்கு கருக்கலைப்பு செய்த நபர்கள் யார் என்பது குறித்தும், இதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மற்றும் அவருடன் பழகிய வாலிபர் குறித்தும் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×