என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • 2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது.
    • தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 54 பயனாளிகளுக்கு, ரூ. 54 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக ஸ்கூட்டர்களை அமைச்சர் இ.பெரியசாமி இன்று வழங்கினார். இதில் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நகர் ஊரமைப்பு துறை சார்பில் ரூ. 4.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை மாற்று திறனாளிகள் நலத்துறை உள்பட ஆறு துறைகள் சார்பில் 257 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 87 லட்சத்து 10 ஆயிரத்து 885 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு சேம நிதியிலிருந்து முதலமைச்சரால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 400 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் 100 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

    ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. எந்த காலத்திலும் இப்படி வழங்கப்படவில்லை. இந்த அரசுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார். மிகச் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக பழைய பென்ஷன் திட்டம் நிறைவேற்றப்படாததால் வருகிற தேர்தலில் இப்பிரச்சினை எதிரொலிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த எதிரொலியும் வராது. காரணம் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நம் முதல்வர் மீதும். ஆட்சி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு என்றுமே தி.மு.க. பாதகமான முடிவை எடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கஞ்சா, லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
    • விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாநில பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் போலீஸ் உயர் அதிகாரிகளே பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் குறைந்த அளவே குற்றங்கள் நடைபெற்றது.

    திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கஞ்சா, லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இது முதலமைச்சருக்கு தெரிந்தபோதும் போலீசார் கண்டுகொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

    ஓ.பி.எஸ். ராமநாதபுரத்திலும், டி.டி.வி.தினகரன் தேனியிலும் பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வி உள்ளனர். இதிலிருந்து அவர்களது பலம் வெளிப்பட்டுள்ளது. இருவரும் மண் குதிரைகளாகி விட்டனர். அவர்களை நம்பி செல்பவர்கள் ஆற்றில் மூழ்க வேண்டியதுதான். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு தயாரித்து வந்த இளைஞர் உயிரிழந்தார்.
    • சடலத்தின் அருகில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு தயாரித்து வந்த இளைஞர் உயிரிழந்தார்.

    கேரளாவை சேர்ந்த சிபு என்ற இளைஞரின் உடல் தனியார் எஸ்டேட்டில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடல் அருகில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர்
    • அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்த வழக்கில், அப்போதைய எஸ்.ஐ உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்னே ஆடைகளைக் களைந்து போலீசார் மானபங்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்த அப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றால். ஆனால் ஊர் மக்கள் அவரை மீட்டனர்.

    பின்னர் சில நாட்கள் கழித்து அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன தேவர் (69) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பான வழக்கில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். 24 ஆண்டுகளாக நடந்த வழக்கில் திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

    ரங்கசாமி, வீரத்தேவர், சின்னத்தேவர் ஆகிய மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.36,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

    • வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரிக்கும்.
    • இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வாடிக்கையாகும். இவை தவிர வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரிக்கும்.

    இந்நிலையில் வார விடுமுறை நாட்கள் முடிந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை காணப்படுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் அதிகமான உற்சாகத்துடன் தங்கள் சுற்றுலாவை கொண்டாடும் விதமாக நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதற்காக குவிந்தனர்.

    நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றில் இருந்து சாரல் மழை போல் பரவும் நீர் தங்கள் மேல் படும்படியாக செயற்கை நீரூற்றை சுற்றி வந்து மகிழ்ந்தனர். கொடைக்கானல் நகராட்சி மூலம் நட்சத்திர ஏரிக்குள் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றிலிருந்து வெளிவரும் நீர் சாரல் மழை போல் பொழிவதால் அந்த உற்சாகத்தை ரசிக்க அதன் அருகில் சென்று படகை செலுத்துவதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

    வழக்கமாக மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் சமயத்தில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வார நாட்களிலும் கொடைக்கானலுக்கு வந்து தங்கள் பொழுதை உற்சாகமாக கழித்து வருகின்றனர். 

    • காலங்காலமாக பழனி மலை முருகனுக்கு குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து வருகின்றனர்.
    • ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தது அனைவரையும் கவர்ந்தது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசத்தின் போதும் அதனை தொடர்ந்து தற்போது வரை பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். பல்வேறு காவடிகள் எடுத்தும் பாதயாத்திரையாக வந்து அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற எடப்பாடி காவடிக்குழுவினர் 19ம் தேதி பழனி வந்து மலைக்கோவிலில் தங்கி சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மேலும் தங்கள் கைகளால் பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு படைத்தனர். காலங்காலமாக பழனி மலை முருகனுக்கு குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்கள் கொடுத்து வருகின்றனர். அதன்படி இன்று சீர்வரிசை பொருட்களுடன் பழனி வந்தனர். பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி அடிவார பகுதிக்கு வந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக பஸ்நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், தேன், தினைமாவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில்நார் கூடைகளில் பெண்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தது அனைவரையும் கவர்ந்தது.

    குறவர் மகள் வள்ளியை முருக பெருமான் திருமணம் செய்ததால் தாய்வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றோம். பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளிலும் உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்றனர்.

    • வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர்.
    • பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அலகுகுத்தியும், காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் 18 பேர் சண்முகாநதியில் இருந்து பறவைக்காவடியில் பழனிக்கு வந்தனர். இதற்காக பெரிய 2 கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து காரமடை, நால்ரோடு சந்திப்பு, புதுதாராபுரம் சாலை, குளத்துரோடு, திருஆவினன்குடி என பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்டோர் 15 அடி நீள அலகுகுத்தியும் வந்தனர். ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், கடந்த 49 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வருகிறோம். தைப்பூச திருவிழா முடிந்த பிறகு வால்பாறையில் இருந்து பாதயாத்திரையாக பழனி சண்முகாநதிக்கு வந்து பின் அங்கிருந்து பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருவோம் என்றனர்.

    • போலீசார் மற்றும் தி.மு.க.வினர் வக்கீலை தாக்கியுள்ளனர்.
    • திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் வக்கீல் உதயகுமார். இவர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இருந்து மாலை தனது குழந்தையை அழைத்து வரச்சென்றார். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் சாலையோரம் கிடந்தது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் இடையூறு ஏற்பட்டு வந்தது.

    பள்ளி முன்பு சாலையோரம் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றக்கோரி கட்சி அலுவலகத்தில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்திக்க உதயகுமார் சென்றார். அப்போது அவரை வழிமறித்த அமைச்சரின் பாதுகாப்பு போலீசார் இதுகுறித்து நாங்களே மாநகராட்சியிடம் கூறி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம் என்று சொல்லி திருப்பி அனுப்பியுள்ளனர்.

    ஆனால் நான் அமைச்சரை சந்தித்து புகார் செய்துவிட்டு தான் செல்வேன் என கூறி கட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றுள்ளார். இதை தடுத்ததில் பாதுகாப்பு போலீசாருக்கும் வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் மற்றும் தி.மு.க.வினர் வக்கீலை தாக்கியுள்ளனர்.

    இதனால் உதயகுமார் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சக வக்கீல்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஏராளமான வக்கீல்கள் அங்கு திரண்டு தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வக்கீல்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பு அமைச்சர் இ.பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் சென்றுவிட்டார்.

    இதையடுத்து கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய வக்கீல்கள் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல வக்கீல்கள் அதிகம் பேர் வரத்தொடங்கி போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதை கண்ட வக்கீல்கள் திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. தெய்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வக்கீலை தாக்கிய அமைச்சரின் பாதுகாப்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என கூறி இரவு 11 மணி வரை அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து காலையில் பேசிக்கொள்ளலாம் என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. உறுதி அளித்தார்.

    இன்று காலையிலும் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு வக்கீல்கள் ஏராளமானோர் குவிந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனையடுத்து 7வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுபாஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இருந்தபோதும் அதில் சமாதானம் அடையாத வக்கீல்கள் அவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன் திண்டுக்கல்லில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • பக்தர்கள் கிடாய்கள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.
    • சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா வருடந்தோறும் மாசி மாதத்தில் பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பெண் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை யாரும் பங்கேற்க அனுமதி கிடையாது.

    இந்நிலையில் இந்த வருடத்திற்கான படையல் திருவிழா இன்று நடந்தது. முன்னதாக வேட்டைக்காரன் சுவாமிக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் கிடாய்கள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர். இதில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு 10-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சாதம் மற்றும் ஆட்டுகறி உணவு சமைக்கப்பட்டது. நள்ளிரவு தொடங்கி விடிய விடிய இதனை ஆண்களே தயாரித்தனர். பின்னர் இன்று காலை 5.45 மணிக்கு வேட்டைக்காரன் சுவாமிக்கு அந்த உணவு படையலிடப்பட்டது.

    பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து வந்து கோவில் முன்பு கூடியிருந்த 3-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சில்வர் பாத்திரங்களிலும், டிபன் பாக்ஸ்களிலும் சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உலுப்பகுடி ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ததுடன் உணவருந்தியும் சென்றனர். 

    • கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.
    • மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகபெருமானின் 3ம் படைவீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது தைப்பூசமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.

    இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பால், பன்னீர், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆட்டம், பாட்டத்துடன் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த 10 நாளில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.

    இதில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 776 மற்றும் 587 கிராம் தங்கம், 21,235 கிராம் வெள்ளி, 1153 வெளிநாட்டு கரன்சி கிடைத்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். 

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.
    • காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.

    கால்நடைகளை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமையில் கால்நடை மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் 725 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர்.

    இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர்கள் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்கள் 350 பேரை பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர். இதையடுத்து காலை 7.45 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதை கோட்டாட்சியர் சக்திவேல் தொடங்கி வைத்தார். இதில் கிழக்கு தாசில்தார் மீனாதேவி, மண்டல துணை வட்டாட்சியர் பிரேம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், வி.ஏ.ஓ. சுல்தான் பேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

    முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

    சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

    இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, குக்கர், ஆட்டுக்குட்டி, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் லிங்கவாடியைச் சேர்ந்த பொன்னன் (வயது 22), தவசி மேடையைச் சேர்ந்த பாதுகாப்பு குழு விக்டர் (28), மதுரையைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் ஆனந்த்(29), நொச்சி ஓடைபட்டியை சேர்ந்த பார்வையாளர் தனுஷ் ராஜா (22) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தெய்வம், மகேஷ், புறநகர் போலீஸ் டி.எஸ்.பி. சிபி சாய் சவுந்தர்யன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் உள்பட 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஏரிச்சாலையில் உற்சாகமாக சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.
    • முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் சில மணி நேரம் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    பொங்கல் விடுமுறைக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது வார விடுமுறை கொண்டாடுவதற்காக பெரும்பாலும் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

    இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ள பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும் ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் உற்சாகமாக சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் பகல் நேரத்தில் நிலவும் கடும் வெயிலும் இரவு நேரத்தில் உள்ள பனியிலும் மாறுபட்ட சூழ்நிலைகளை அனுபவித்தனர். தொடர்ந்து பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் சில மணி நேரம் ஏற்பட்டது.

    இதேபோல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றனர். எலும்பள்ளம் ஏரி, சூழல் சுற்றுலா மையம், முயல் பண்ணை ஆகியவற்றையும் அவர்கள் கண்டு ரசித்தனர். பனியின் தாக்கம் குறைந்த நிலையில் இதமான சீதோசனம் நிலவுவதால் மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள கைடுகள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×