என் மலர்
திண்டுக்கல்
- விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார்.
- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் சங்கரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். அப்போது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால் ரெயில் அந்த பகுதியில் மெதுவாக சென்றது. அதை பயன்படுத்திக் கொண்ட ஒரு வாலிபர் சங்கரி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட சங்கரி சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.
இருந்த போதும் பாதி அறுந்த சங்கிலியுடன் அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். அதேபோல் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த செல்வி (வயது 55) 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு சென்றார். அந்த ரெயில் அம்பாதுரை அருகே மெதுவாக சென்றபோது அவர் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சக்திவேல் பயணிகளிடம் நகை பறித்தது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தலைமறைவானார். இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம் ஆகியோர் சக்திவேலை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மீண்டும் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் மூலம் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அய்யலூர் ஆட்டுச்சந்தை சாலையிலேயே நடப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- சந்தைக்கு வரும் வியாபாரிகளை குறிவைத்து சூதாட்ட கும்பலும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், கட்டுச் சேவல்கள் கண்வலிக்கிழங்கு, பழு பாவற்காய், சீத்தாபழம் உள்ளிட்ட அரியவகை காய்கறிகளும் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 8 மணிவரை சந்தை நடைபெறும்.
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அய்யலூர் சந்தைக்கு விற்பனைக்கு ஆடுகளை கொண்டு வருவார்கள். தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு நோன்பு வைத்துள்ள நிலையில் தற்போதே வியாபாரிகள் ஆடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இன்று 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.7000 வரை விற்பனை ஆனது. தரமான நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.400ம், கட்டுச் சேவல்கள் ரூ.3500 முதல் ரூ.7000 வரை விற்பனையானது. தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை குறைந்த போதும் வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
அய்யலூர் ஆட்டுச்சந்தை சாலையிலேயே நடப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சந்தை நடத்தும் உரிமையாளர் வசூலில் மட்டுமே தீவிரம் காட்டி வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை கண்டு கொள்வதில்லை. எனவே சந்தையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வாரச்சந்தையில் போதிய மின்விளக்கு, குடிநீர், கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் வேதனை அடைகின்றனர். வருடத்திற்கு சுமார் ரூ.80 கோடிக்கு விற்பனையாகும் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் அடிக்கடி திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.
மேலும் சந்தைக்கு வரும் வியாபாரிகளை குறிவைத்து சூதாட்ட கும்பலும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பங்குனி திருவிழா மற்றும் ரம்ஜான் பண்டிகைக்காக ஆடுகள், கோழிகள், சேவல் விற்பனையாகி வரும் நிலையில் விவசாயிகள், வியாபாரிகள் பல்வேறு குறைபாடுகளை கூறி நொந்து செல்லும் நிலையிலேயே உள்ளனர்.
- செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
- செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர்.
அப்போது, செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
பிறகு, செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
- பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
- கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வீதம் 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தீர்ப்பின்படி ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதே போல் பழனி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ராமப்பட்டினம் புதூர், கன்னிவாடி, வேடசந்தூர் புது ரோடு, குஜிலியம்பாறை ஆனைப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, திண்டுக்கல் அரசனம்பட்டி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- முறைகேடு செய்து ஈட்டியதா என்று விசாரணை.
திண்டுக்கல்:
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் நேற்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி ரெயில்வே எஸ்.பி. ராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் கொண்ட போலீசார் அந்த ரெயிலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 48) என்பவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில் ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்தி 900 பணம் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது தான் வெளிநாட்டு பணத்தை மாற்றி தரும் பணியில் இருப்பதாகவும், அதற்காக கமிசன் பெற்று வருவதாகவும் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்த பணத்தை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.
இதனையடுத்து அந்த பணத்தை திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் நவநீத கிருஷ்ணனை கைது செய்து இந்த பணம் உண்மையிலேயே வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்ததா? அல்லது முறைகேடு செய்து ஈட்டியதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது.
- மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
பழனி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பழனியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது தேர்தலுக்கு முந்தைய பட்ஜட் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது 5000 விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வரவேற்கத்தக்கது. இதே போல் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்பது உள்பட பல அறிவிப்புகளை தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 2006ம் ஆண்டே விஜயகாந்த் வெளியிட்டார்.
அதனை தற்போது தமிழக அரசு செயல்படுத்த முயற்சி எடுத்ததற்கு நன்றி. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போல் பொத்தாம்பொதுவாக கூறாமல் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைந்தால் தமிழக அரசுடன் இணைந்து போராட தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.
- சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வத்தலக்குண்டு பைபாஸ் வழியே சேவுகம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து 4 வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொடைரோடு, நத்தம் பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டமும் நடத்தி வந்தனர்.
ஆனால் 4 வழிச்சாலைகள் அமைக்காமல் இருவழிச்சாலை மட்டும் முடிந்த நிலையில் சுங்கச்சாவடி இன்று காலை 10 மணிமுதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 7 இடங்களில் பணம் வசூலிப்பதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ஊழியர்களுக்கான அறை மற்றும் கணினிகள் கொண்டு வரப்பட்டன.
ஆனால் சுங்கச்சாவடி திறக்கும் முன்பு காலை 9 மணிக்கு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இதனால் நள்ளிரவு 12 மணிக்கே சுங்கச்சாவடி திறக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
அதிகாலையில் இத்தகவல் பரவியதால் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்து சுங்கச்சாவடி நோக்கி வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெயர் பலகை மற்றும் பணம் வசூலிக்கும் கவுண்டர்களை அடித்து நொறுக்கினர்.
இதனை தடுக்க வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருசிலருக்கு மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லேப்டாப்களையும் அடித்து நொறுக்கியதுடன், மேலும் பல லேப்டாப்களை தூக்கிச் சென்றனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அலுவலர் சுமதி ஆகியோரும் அங்கு வந்து பார்வையிட்டனர்.
சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து கேட்டறிந்ததுடன் உள்ளூர் மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் 4 வழிச்சாலை பணிகளை முழுமையாக நிறைவேற்றாமல் சுங்கச்சாவடியை திறக்க கூடாது. உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இருந்தபோதும் நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்பட்ட சுங்கச்சாவடி முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டதால் தற்போது வாகனங்கள் வழக்கம்போல் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டன.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிரா உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
- திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
- கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் வெயில் அதிகரித்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்தது.
தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமமடைந்தனர். பகல் பொழுதிலேயே கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேல்மலை பகுதியில் பெய்த மழை சாகுபடி பணிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவித்தனர். கோடைகால சீசன் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் 20, காமாட்சிபுரம் 13.2, நிலக்கோட்டை தாலுகா 17, நிலக்கோட்டை 16.20, சத்திரப்பட்டி 7.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 8.4, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 8.2, பழனி 7, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 13, பிரையண்ட் பூங்கா 14 என மாவட்டம் முழுவதும் 124.20 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- ஆத்திரமடைந்த கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- திடீர் போராட்டத்தால் மதுரை-நத்தம் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நத்தம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் (வயது 50). பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த இவர் தனது காரில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே பரளிபுதூர் சுங்கச்சாவடியில் கார் நின்றது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் காருக்கு பணம் கேட்டுள்ளனர். அதற்கு கதிரவன் தான் முன்னாள் எம்.எல்.ஏ. என்று கூறியுள்ளார். இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. விற்கு பாஸ் கிடையாது எனவும், பணம் கொடுங்கள் என்றும் கூறியுள்ளனர். இதனால் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவம் குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கோசலபூபதி, மணிகண்டன், அழகர் உள்ளிட்ட 3 பேரை நத்தம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் போராட்டத்தால் மதுரை-நத்தம் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- 2 குழந்தைகளுடன் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
- தி.மு.க. பிரமுகர் இளங்கோ மீது வழக்குப் பதிவு.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வெள்ளப் பொம்மன்பட்டியை சேர்ந்தவர் கருப்புச்சாமி. இவரது மனைவி வேலுமணி (வயது 30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பச்சாமி விபத்தில் இறந்து விட்டார்.
இந்த நிலையில் வேலுமணி லாரி புக்கிங் ஆபீசில் வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.
வேலுமணியிடம் ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் இளங்கோ ரூ.1 லட்சம் வாங்கி உள்ளார். 2 ஆண்டுகள் ஆன பின்பும் இளங்கோ வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது தான் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறினார். ஆனால் பணத்தையும் தராமல் ஏமாற்றினார்.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வேலுமணி புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை போலீசார் தி.மு.க. பிரமுகர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் 2 ஆண்டுகளாக தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிய இளங்கோவை கைது செய்யாமல் போலீசார் அலைக்கழிப்பதாகவும் தனக்கு பணம் கிடைக்கவில்லை என கூறி 2 குழந்தைகளுடன் இன்று வடமதுரை போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் அவர் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- 100 ஏக்கருக்கும் மேலான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
- கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வருகிறது. கொடைக்கானலை சுற்றி ஏராளமான வனப்பகுதிகள் மற்றும் உபயோகப்படுத்தாத வருவாய் நிலங்கள் அமைந்திருக்கிறது.
கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட புலியூர் கிராமம் செல்லக்கூடிய சாலையில் இருப்புறங்களிலும் 100 ஏக்கருக்கும் மேலான பரப்பிலான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
இதன் காரணமாக செடிகள், மரங்கள் முழுவதும் எரிந்து நாசமாகும் அபாயம் உள்ளது. கொடைக்கானலின் பல்வேறு இடங்களில் மலைகள் மற்றும் இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மலைப்பாங்கான இடங்களில் தற்காலிக விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக மரக்கட்டைகளால் ஆன மரப்பலகைகளாலான விடுதி, பிரேம் விடுதி, டோம் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு தற்காலிக விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற தற்காலிக விடுதிகளில் தங்குவதற்கு சுற்றுலாப் பயணிகள் கடந்த சில மாதங்களாக பெரும் வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் பல்வேறு இடங்களில் முறையாக அனுமதி பெறாமலும் வனப் பகுதிக்கு அருகேயும் இதுபோன்ற விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு காட்டுத்தீ பெரிய அளவில் பரவும் அபாயம் உள்ளது. எனவே விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- ஒவ்வொரு குடும்பத்தினரும் மறைமுகமாக ரூ.8500 கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது.
- அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட தயாராகி உள்ளனர் என்று பேசினார்.
இடையகோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் புலியூர் நத்தத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் தமிழக அரசு கடன் சுமையால் தத்தளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.3.25 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை கொடுத்து விட்டு பல்வேறு வரிகள் மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.
இதனால் ஒவ்வொரு குடும்பத்தினரும் மறைமுகமாக ரூ.8500 கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்கள் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்தது. ஆனால் தற்போது அந்த திட்டங்களை நிறுத்தி விட்டனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறி ஏமாற்றி விட்டனர். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மொத்தத்தில் அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்ட தயாராகி உள்ளனர் என்று பேசினார்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்த போதே குடிபோதையில் இருந்த ஒரு தொண்டர் 100 நாள் வேலைக்கு சம்பளம் தரமாட்டிங்கிறாங்க, ஒயின்ஷாப்பில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குகிறார்கள் அதையும் பேசுங்கள் என சத்தம் போட்டார். இதனால் டென்ஷனான திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க. தொண்டரை பார்த்து அமைதியாக இருப்பா... எல்லாத்தையும் பற்றி பேசுகிறேன் என கூறி விட்டு அவரை அங்கிருந்து அகற்றுமாறு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.






