என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிகரிக்கும் கோடை வெப்பம்- வார நாட்களிலும் கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
- வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரிக்கும்.
- இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வாடிக்கையாகும். இவை தவிர வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரிக்கும்.
இந்நிலையில் வார விடுமுறை நாட்கள் முடிந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை காணப்படுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் அதிகமான உற்சாகத்துடன் தங்கள் சுற்றுலாவை கொண்டாடும் விதமாக நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதற்காக குவிந்தனர்.
நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றில் இருந்து சாரல் மழை போல் பரவும் நீர் தங்கள் மேல் படும்படியாக செயற்கை நீரூற்றை சுற்றி வந்து மகிழ்ந்தனர். கொடைக்கானல் நகராட்சி மூலம் நட்சத்திர ஏரிக்குள் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றிலிருந்து வெளிவரும் நீர் சாரல் மழை போல் பொழிவதால் அந்த உற்சாகத்தை ரசிக்க அதன் அருகில் சென்று படகை செலுத்துவதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் சமயத்தில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வார நாட்களிலும் கொடைக்கானலுக்கு வந்து தங்கள் பொழுதை உற்சாகமாக கழித்து வருகின்றனர்.






