என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் தீவிரம்
  X

  தருமபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளிகள் பானைகளை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சூரிய பகவானுக்கு மண்பானையில் பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கம்.
  • மண்பாண்ட பூச்சட்டிகளை பயன்படுத்தினால் எங்களுடைய வாழ்வாதாரம் சிறக்கும்.

  தருமபுரி,

  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று அதிகாலையில் புத்தாடை அணிந்து சூரிய பகவானுக்கு மண்பானையில் பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கம்.

  இந்த மண்பானை தருமபுரி மாவட்டத்தில் அதியமான்கோட்டை, நார்த்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், பென்னாகரம், லலிகம், நலப்பரம்பட்டி ,மோதூர், வெங்கட்டம்பட்டி, மாதேமங்கலம், தருமபுரி பெரியார்மன்றம் உள்ளிட்ட இடங்களில் செய்யப்படுகிறது.

  தருமபுரி மாவட்டத்தில் தினசரி 100 முதல் 300 வரை மண்பானை செய்யப்படுகிறது. இங்கிருந்து திருவண்ணாமலை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்ட கிராம புறங்களுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் மண்பானைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வியாபாரிகளும் நேரடியாக வந்து பானையை வாங்கி செல்கின்றனர்.

  பொங்கல் பண்டிகை வர இன்னும் 18 நாட்கள் உள்ள நிலையில், பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திறந்த வெளிச்சந்தையில் ஒரு பானை ரூ.30 முதல் ரூ.150 வரையும், சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல் வைப்பதற்கு, பெரிய பானை, சிறிய பொங்கல் பானை, குடுவை பானை, பூசணி குழம்பு பானை, தீர்த்த குடுவை என தொகுப்பு பானை ஒரு செட் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  பானையின் அளவை பொருத்து விலை ஏற்றம், இறக்கம் உள்ளது.

  இதுகுறித்து தருமபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளிகள் கூறுகையில்:-

  மண்பானை செய்வது எங்களது குலத்தொழில். இந்தப் பகுதியில் 40 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். தினசரி 30 முதல் 40 மண்பானை வரை செய்கிறோம். பானைகளை முன்பதிவு அடிப்படையில் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர்.

  களிமண் அனுமதி கேட்டு எடுத்து வந்தாலும், அதிகாரிகள் களிமண் ஏற்றி வந்த டிராக்டர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் சராசரி பருவமழை அளவைவிட இரு மடங்கு மழை பெய்துள்ளதால் களிமண் எடுப்பதற்கு பெரும் சிரமமாக உள்ளது. விலை கொடுத்து மண் வாங்கி வருகிறோம். மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது.

  மற்ற மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் செய்பவர்களுக்கு அரசு களிமண் எடுப்பதற்கும், பானை செய்வதற்கும் மின்சாரத்தில் இயங்கும் சக்கரமும் வழங்கி உள்ளது. மேலும் தொழில் செய்வதற்கு மானியத்துடன் கடன் வழங்கி பானை செய்வதற்கான சீட்டு கொட்டகைகள் அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் எங்களுடைய கோரிக்கைகளை பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முன் வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  கடந்த காலங்களில் நர்சரிக்காக நாற்று தொட்டிகள் வாங்கி செல்வார்கள். இதனால் வருடம் முழுவதும் எங்களுக்கு தொழில் இருந்து வந்தது. தற்பொழுது பிளாஸ்டிக் கவர்களை நாற்றுப் பண்ணைகளுக்கு அரசே பயன்படுத்துவதால் மண்பாண்ட தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை அரசு தடை செய்து உள்ளது. அதேபோல் நாற்றுப் பண்ணைகளுக்கு அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடை செய்துவிட்டு பழையபடி மண்பாண்ட பூச்சட்டிகளை பயன்படுத்தினால் எங்களுடைய வாழ்வாதாரம் சிறக்கும்.

  மேலும் அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் மண் பானையையும் சேர்த்து வழங்கினால் பாரம்பரிய தொழிலை அழிவில் இருந்து காப்பாற்றவும், உரிய வருவாயும் கிடைக்கும். மேலும் அரசு எங்களை ஊக்கப்படுத்த வாரியத்தின் மூலம் உதவித்தொகை வழங்க வேண்டும். அதிக மண்பானைகள் செய்வதற்கு அரசு மானியத்தில் மின்சார சக்கரம் வாங்க உதவி செய்ய வேண்டும் என்றனர்.

  Next Story
  ×