என் மலர்tooltip icon

    கடலூர்

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #thoothukudifiring

    கடலூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு கடலூர் வந்தேன்.

    விழுப்புரத்தில் இன்று பாரதீய ஜனதா சார்பில் சமதர்ம எழுச்சி மாநாடு நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே:- ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக மத்திய அரசு ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளதா?

    ப:- மாநில அரசு விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளது. அதன் பிறகு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

    கே:- தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதே?

    ப:- கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பலமுறை தெரிவித்து விட்டேன்.

    இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் எந்தஒரு முன்னேற்றமும் இருக்கக்கூடாது என பயங்கரவாதிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஆரம்பத்திலேயே மாநில அரசு தடுத்து நடவடிக்கை எடுத் திருக்க வேண்டும்.

    ஆனால், ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடந்து வருவது என கூறி வருகிறார். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் கம்பெனி தொடங்குவதற்கு தி.மு.க.தான் காரணம். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதிதான் தொடங்கி வைத்தார்.


    மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மத்திய மந்திரி ஆ.ராசா இதற்கு அனுமதி கொடுத்தார். இதன் மூலம் தமிழகத்துக்கு தி.மு.க. துரோகம் செய்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக மாநில அரசு கொடுக்கும் பரிந்துரையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

    உலக அளவில் உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய நாட்டின் மதிப்பு கூடி இருக்கிறது. இதில் விவசாயத்தில் இந்தியா சாதனை புரிந்துள்ளது. மேலும் எல்லா வகையிலும் இந்திய அரசு முன்னேற்ற பாதையில் செல்கிறது.

    கே:- தமிழகத்தில் 400 விவசாயிகள் இறந்துள்ளனரே?

    ப:- தமிழக அரசு இது சம்பந்தமாக எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு சொல்கிற எண்ணிக்கையும், மக்கள் சொல்கின்ற எண்ணிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #thoothukudifiring

    சிதம்பரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை சஸ்பெண்டு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ) உள்ளது. இங்கு சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயசந்தர் என்பவர் பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ரெயிலில் வந்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இவர் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்வதற்காக ரெயிலில் ஏறினார். அதே ரெயிலில் சிதம்பரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வரும் கடலூரை சேர்ந்த 20 வயது மாணவியும் சிதம்பரம் செல்வதற்காக ஏறி பயணம் செய்தார். அப்போது ஜெயசந்தர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இதுபற்றி சிதம்பரம் அரசு ஐ.டி.ஐ. முதல்வரிடம் புகார் செய்தார். அதன்பேரில் முதல்வர் ரவிச்சந்திரன் நடத்திய விசாரணையில், பயிற்றுனர் ஜெயசந்தர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து பயிற்றுனர் ஜெயசந்தரை சஸ்பெண்டு செய்து, முதல்வர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யக்கோரி சென்னை தலைமைச்செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
    கடலூர்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இவர் கடலூர் வந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் தண்டபாணியை சந்தித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து கடந்த 1.3.2018 முதல் விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தி வருகிறோம். இதுவரை 29 மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு அளித்து இருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய பிறகும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகளில் இருந்து 200 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கேரளா வழியாக கடலில் கலக்கிறது. ஆகவே இந்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

    இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றாவிட்டால் வருகிற 10-ந்தேதி முதல் தலைமைச் செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். ஏற்கனவே டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, முதல்- அமைச்சர் எங்களை சந்தித்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    வேப்பூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. அதில் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை கோவையை சேர்ந்த டிரைவர் கமலக்கண்ணன் (வயது 35) ஓட்டினார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல்(25) உதவியாளராக இருந்தார்.

    இந்த ஆம்னி பஸ் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் பகுதியில் திருச்சி-சென்னை சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் முன்னால் லாரி ஒன்று சென்றது. அந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கி டிரைவர் கமலக்கண்ணன் மற்றும் உதவியாளர் சக்திவேல் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் வந்த 10 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. #Tamilnews
    சென்னையில் போராட்டம் நடத்திய முகஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    சென்னையில் தலைமை செயலகம் முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து கடலூரில் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு நகர செயலாளர் ராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், தொ.மு.ச. தலைவர் பழனிவேல், மாணவரணி அகஸ்டின் உள்பட பலர் திரண்டனர். அவர்கள் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் புதுநகர் போலீசார் அங்கு வந்தனர்.

    மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற நர்சு மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரானந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் திவ்யா(வயது22).

    இவர் நர்சிங் படித்துவிட்டு காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று காலை திவ்யா வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

    இதனைதொடர்ந்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் திவ்யாவின் தாய் சுமித்ரா புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் திவ்யா எங்கு சென்றார் என தேடிவருகிறார்.
    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது பெண் இறந்தால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் வில்வநகரைச்சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் தனியார் ஆம்புலன்சில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா(வயது28). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில் விமலா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று மாலை பிரசவவலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் விமலாவை பிரசவத்துக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இரவு 7 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் விமலா பரிதாபமாக இறந்தார்.இதை அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    டாக்டரின் கவனக்குறைவால் தான்விமலா இறந்து விட்டதாக கூறி, பிரசவ வார்டு கட்டிடத்தை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.

    மேலும் விமலாவின் சாவுக்கு காரணமான டாக்டர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் விமலாவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அரசு ஆஸ்பத்திரி அருகே திரண்டனர்.

    பின்னர் அவர்கள் நகர செயலாளர் செந்தில் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விமலாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், இறந்து போன விமலாவின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், விமலா சாவுக்கு காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விமலாவின் உடலை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது. புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்றனர். உடனே போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட் டத்தை கைவிட்டனர்.

    பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில் கணவன் மற்றும் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஓருவர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் காலனியை சேர்ந்தவர் கண்ணனன் (வயது 47). இவரது மனைவி அஞ்சலை. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசன் என்பவரது மனைவி நாவம்மாள் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அரசன் மற்றும் அவரது மனைவி நாவம்மாள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அஞ்சலை மற்றும் இவரது கணவர் கண்ணன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    காயமடைந்த கண்ணன், அஞ்சலை ஆகியோர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள்.

    இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, அரசன் அவரது மனைவி நாவம்மாள் மற்றும் உறவினர்கள் பாக்கியராஜ், செண்பகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நாவம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார்குடிகாடை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ஜெயா(வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் ஜெயா தேர்ச்சி அடையவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்கு சென்று தூக்குப்போட்டார். இதைபார்த்த அவரது சகோதரர் சத்தம்போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    மயங்கிய நிலையில் ஜெயாவை மீட்டு இருந்த அவரை சிகிச்சைக்காக திட்டக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்த்திரிக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் மற்றும் போராட்டம் நடந்து வருகிறது.

    கடலூரில் இன்று மாவட்ட தி.மு.க. மீனவர் அணி சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் அணி நிர்வாகிகள் பழனிவேல், விஜயேந்திரன், தேவநாதன், பார்த்தீபன், மாணவர் அணி அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கடலூரில் வாலிபர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 27). எம்.சி.ஏ. பட்டதாரி.இவர் இன்று கடலூர் மஞ்சகுப்பம் அம்பேத்கார் சிலை முன்பு கருப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த புதுநகர் போலீசார் அங்கு வந்தனர். அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அன்புராஜை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வடலூர் பஸ் நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    கடலூரில் நீட் தேர்வு எழுதியிருந்த மாணவர் ஒருவர், இணையதளத்தில் வெளியான மாதிரி வினாத்தாளில் விடை வேறு மாதிரி இருந்ததால், தோல்வி பயத்தில் தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #NEET
    கடலூர்:

    கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப்-டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வசந்தி. இவர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது மகன் அருண்பிரசாத் (வயது 19). இவர் கடந்த 2016-17-ம் கல்வி ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தார். அப்போது அவர் 1150 மதிப்பெண் பெற்றிருந்தார்.

    மருத்துவப் படிப்பு படிக்க மாணவர் அருண்பிரசாத் ஆசைப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு எழுதினார். அதில் குறைவான மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து நீட் தேர்வில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்த அருண்பிரசாத் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை அருண் பிரசாத் எழுதினார். இந்த நிலையில் நேற்று முதன்தினம் இணையதளத்தில் நீட் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டது. இதனை அருண்பிரசாத் பார்த்தார்.

    அதில் தான் எழுதிய விடைகளுக்கும், மாதிரி விடைத்தாளில் இருந்த விடைகளுக்கும் அதிக அளவில் வித்தியாசம் இருந்தது. எனவே இந்த முறையும் தேர்ச்சி பெற முடியாமல் தோல்வி அடைந்து விடுவோம் என பயந்தார்.

    இது குறித்து தனது தாத்தாவிடம், இனிநான் டாக்டராக முடியாது என கூறி கண்ணீர் வடித்தார். தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று காலையில் அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.

    அருண்பிரசாத் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்தார். நீட் தேர்வில் எப்படியும் தோல்வி அடைந்து விடுவோம் என நினைத்த அவர் வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாலை 3 மணிக்கு அருண்பிரசாத்தின் தாய் வசந்தி வீட்டுக்கு வந்தார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த அருண்பிரசாத்தின் தந்தை பாபுவும் உடனடியாக வீட்டுக்கு வந்தார்.

    பாபு-வசந்தி தம்பதிக்கு அருண்பிரசாத் ஒரே மகன் ஆவார். அவரை அதிக பாசத்துடன் வளர்த்து வந்தனர். மகன் இறந்தது குறித்து பெற்றோர் கண்ணீர் மல்க கூறியதாவது:-


    அருண்பிரசாத் சிறு வயது முதல் நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்து வந்தான். மேலும் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 493 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தான்.

    அதேபோல் பிளஸ்-2 விலும் நன்றாக படித்தான். அவன் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வான் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்து வந்தோம். இதற்காக தனிக்கவனம் செலுத்தி அவனை ஊக்குவித்து வந்தோம். இதனால் நண்பர்களுடன் கூடு விளையாட செல்லாமல் படித்து வந்தான். எங்களது ஒரே மகனை டாக்டராக பார்க்க ஆசைப்பட்டோம். ஆனால் இப்போது அவனை இழந்து விட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அருண்பிரசாத் தற்கொலை குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அருண்பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று காலையில்பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் அருண்பிரசாத் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உண்ணாமலைசெட்டி சாவடி பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. #NEET
    விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் மாணவி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கார்கூடல் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் இலக்கியா (வயது 13), மகன் சிவகுரு (12) அருகில் உள்ள கம்மாபுரம் தனியார் பள்ளியில் இலக்கியா 7-ம் வகுப்பும், சிவகுரு 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். 

    பள்ளி விடுமுறையை முன்னிட்டு சின்னவடிவாடியில் உள்ள தனது மாமா சேகர் வீட்டிற்கு சென்றனர். இன்று மதியம் சேகர் மோட்டார் சைக்கிளில் இலக்கியா, சிவகுருவை ஆகியோரை அழைத்துக்கொண்டு கார்கூடல் வந்து கொண்டிருந்தார். பனையூர் பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இலக்கியா பரிதாபமாக இறந்தார். 

    படுகாயம் அடைந்த சேகர், சிவகுரு ஆகியோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    ×