என் மலர்tooltip icon

    கடலூர்

    குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலைக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    சிதம்பரம்:

    தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் 60 ஆண்டுக்கு முன்பு திருடு போனது. அந்த சிலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி.ராஜாராமன் மற்றும் போலீசார் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டனர்.

    இதையடுத்து அந்த சிலைகள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகளுடன் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.

    அங்கு அந்த சிலைகளுக்கு கோவில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகளை தஞ்சை பெரியகோவிலுக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

    முன்னதாக சிலை தடுப்பு பிரிவு கூடுதல் டி.எஸ்.பி.ராஜாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலுக்கும், தில்லை நடராஜர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே மீட்கப்பட்ட சிலைகளை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கொண்டு வந்தோம். இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மீண்டும் அந்த சிலைகளை தஞ்சை பெரிய கோவிலுக்கு எடுத்து செல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று செல்போன் டவரில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
    கடலூர்:

    கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 46). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் நகர இளைஞரணி துணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று மாலை 4 மணி அளவில் கடலூர் அண்ணாநகர் நவரத்தினதெருவில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரில் திடீரென ஏறினார்.

    அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டார்.

    தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுந்தரை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் சுந்தர் கீழே இறங்கி வரமறுத்து விட்டார்.

    வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    சுந்தரின் மகள்கள் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். அவரை கீழே இறங்கி வருமாறு அழுதபடியே கெஞ்சினர்.

    இதையடுத்து டவரில் இருந்து சுந்தர் கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    45 நிமிடங்கள் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பரங்கிப்பேட்டை அருகே வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பரங்கிபேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கிலும் வேல்முருகன் கைது செய்யப்பட் டார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியாண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 30). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்துவந்தார். வேல்முருகன் கைது செய்யப்பட்டதால் இவர் மிகுந்த கவலையுடன் இருந்தார். நேற்று வேல்முருகனின் பேட்டியை டி.வி. யில் பார்த்தபோது தேம்பி, தேம்பி அழுதார்.

    இரவு 10 மணி அளவில் பெரியாண்டிகுழியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிகம்பம் அருகே கையில் மண் எண்ணை கேனுடன் ஜெகன் சென்றார். வேல்முருகனை விடுதலை செய்ய வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பியவாறு தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஜெகனின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடல் கருகிய நிலையில் இருந்த ஜெகனை மீட்டு சிகிச்சைக்காக கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜெகன் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் சோகத்துடன் காணப்பட்டனர்.

    இது குறித்து புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    தற்கொலை செய்து கொண்ட ஜெகனுக்கு அஞ்சு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். #Tamilnews
    வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல்(வயது 50) விவசாயி. இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் சென்றார். பின்னர் அங்கு வேலை யை முடித்துவிட்டு அங்கிருந்து விளம்பாவூருக்கு அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    பெரியநசலூர் பஸ் நிறுத்தம் அருகே சேலம்-விருத்தாசலம் சாலையில் வந்தபோது பின்னால் வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் தூக்கிவீசப்பட்ட ராஜவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டை அருகே கூத்தாண்டவர்கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் திருநங்கைகள் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பரங்கிப்பேட்டை:

    கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டை அருகில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டு திரு விழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. அதன் பின்னர் 25-ந் தேதி அர்ச்சுணன் திரவுபதி திருக்கல்யாயணம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திருநங்கைகள் வந்திருந்தனர்.

    மேலும் மும்பை, கொல்கத்தா, புனே, டெல்லி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும் ஏரளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களை புதுபெண்கள் போல அலங்கரித்து கொண்டு கோவிலுக்கு சென்றனர். கோவிலில் பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டனர். பின்னர் திருநங்கைகள் அனைவரும் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


    இதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர்கள் தில்லை கோவிந்தன், ராஜேந்திரன், சிவராஜ் ஆகியோர் செய்துள்ளனர். அந்த பகுதியில் பரங்கிப்பேட்டை இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடலூரில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவர் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் ஒட்டகூத்தர்தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 22). மீனவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை சுப்புராயலுநகருக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவர் மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 

    இது பற்றி அந்த மாணவியின் தாய் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

    சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக திருவண்ணாமலை நோக்கி நேற்று மதியம் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜிரோடு தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது, ஆல்பேட்டையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நகர துணை செயலாளர் சிலம்பு என்கிற சிலம்பரசன் அங்கு வந்தார்.

    கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி கோ‌ஷமிட்டார். பின்னர் அவர் அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினார். இதில் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது பற்றி பஸ் டிரைவர் மணவளவன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி சிலம்பு என்கிற சிலம்பரசன் மீது போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    பணிநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். சுரங்கம் 1ஏயில் பல ஆண்டு காலமாக பணியாற்றி வந்த சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    மேலும் பணிநாட்கள் 26 நாட்களுக்கு பதிலாக 15 நாட்கள் பணி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று என்.எல்.சி.சுரங்கம் 1ஏ முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் போராட்டம் நடத்த வந்தனர். பின்னர் 25 பேர் திடீரென்று வி‌ஷத்தை குடித்து கீழே மயங்கி விழுந்தனர்.

    உடனே அவர்களை மீட்டு என்.எல்.சி.ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 6 பேரின் நிலைமை மோசமாக இருந்தது. அவர்களை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் 700 பேர் சுரங்கம் 1ஏ பகுதிக்கு வந்தனர். பின்பு அவர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

    வேலைநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்தும், பணிமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அதே இடத்துக்கு பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே இன்று மாலை மாவட்ட கலெக்டர் தண்டபாணி என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். #Tamilnews
    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி அக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி:

    தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இதனை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை பண்ருட்டி சேலம் மெயின் ரோட்டில் அங்கு செட்டிப்பாளையம் மெயின் ரோட்டில் பண்ருட்டி வடக்குஒன்றிய செயலாளர் கொக்கு பாளையம் பாலமுருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பண்ருட்டி சேலம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக நடிகர் நெப்போலியன் பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்பு ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சுப.வீரபாண்டியன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக இன்று நடிகர் நெப்போலியன் பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்பு ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்தார்.

    நடிகர் நெப்போலியனுடன் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உடன் வந்திருந்தார். #Tamilnews
    விருத்தாசலத்தில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அசானா(வயது 20). இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை அசானா வழக்கம்போல் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு பஸ்சில் வந்தார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி வேலை பார்க்கும் இடத்திற்கு தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். சரோஜினி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை அந்த பகுதியில் நிறுத்தினார்.

    பின்னர் அவர் அசானாவை பின்தொடர்ந்து சென்றார். அந்த மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து திடீரென அசானாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அசானாவின் தோழி காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் அந்த மர்மநபர் மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் படுகாயமடைந்த அசானாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அசானாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அசானா கூறியதாவது:-

    எனக்கும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கொங்குராயப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த வாலிபரை எனக்கு பிடிக்கவில்லை என கூறிவிட்டேன். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன்.

    இந்தநிலையில் என்னை மர்மநபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்கும் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபருக்கும் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews

    நெய்வேலியில் போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #NLCProtest #WorkersSuicideAttempt
    நெய்வேலி:

    நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில் சிலரை வேறு சுரங்கத்திற்கு பணி மாற்றம் செய்ததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு அதே இடத்தில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று சுரங்கம் 1ஏ முன்பு மறியல் செய்ய வந்தனர். அப்போது சுமார் 25 தொழிலாளர்கள் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.


    ஒப்பந்த தொழிலாளர்களை வேறு சுரங்கத்திற்கு பணி மாற்றம் செய்திருப்பது ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஆரம்பம் என்று தொழிலாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், ஒரே இடத்தில் அதிக ஊழியர்கள் பணியில் இருந்ததால் மாற்றப்பட்டதாக நிர்வாகம் கூறியுள்ளது. #NLCProtest #WorkersSuicideAttempt
    ×