என் மலர்tooltip icon

    கடலூர்

    இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி கடல் தீபனை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டமைப்பு சார்பில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அரசியல் கட்சியினர் நெய்வேலி என்.எல்.சி.அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

    முன்னதாக கியூ பாலத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜி, உமர்முப்தார், சுந்தரமூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.

    இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வேல்முருகன், கடல்தீபன் ஆகியோர் மீது நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் கர்நாடக பஸ் மீது கல்வீசிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்தநிலையில் நெய்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கிலும் கடல்தீபனை தெர்மல் போலீசார் நேற்று கைது செய்து நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    கடலூரில் புதுப்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் புதுப்பெண் தேடி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மெர்சி (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மெர்சி கணவரை பிரித்து அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை வெளியில் சென்று வருவதாக தந்தை செல்வத்திடம் கூறிவிட்டு மெர்சி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் கவலை அடைந்த செல்வம், மகளை பல இடங்களில் தேடிப் பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.

    இதனை தொடர்ந்து அவர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் மெர்சியை தேடி வருகின்றனர். 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து 8-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சு.கீணனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 40).

    இவரது மகள் மகாலட்சுமி(13) இவர் கம்மாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை 8.30 மணியளவில் மகாலட்சுமி பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அங்குள்ள பள்ளி வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்த மற்ற சக மாணவ-மாணவிகள் அவரை மீட்டு கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த நர்சு, மகாலட்சுமியின் உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினார்.

    மகாலட்சுமி இறந்த தகவல் அவரது பெற்றோருக்கும், உறவினருக்கும் தெரியவந்தது. அவர்கள் அலறியடித்துக்கொண்டு கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரண்டு வந்தனர். மகாலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் மாணவி மகாலட்சுமி இறந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். பின்னர் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே மாணவி இறந்ததை தொடர்ந்து அவருடன் படித்து வந்த மாணவ, மாணவிகள் விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தினர்.

    இந்தசம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த பிரபல ரவுடி இன்று கடலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுரேந்தர்(வயது 35). இவர் மீது சிதம்பரம், கோயம்புத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு பொதுசொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் சுரேந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சுரேந்தர். அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜாராகாமல் இருந்தார். இதனால் சுரேந்தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். 

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சுரேந்தர் ஆஜராகினார். அதன் பின்னர் சுரேந்தரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 
    அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி 13 கிலோ மனுக்களை தலையில் சுமந்தபடி மூதாட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் மனுக்களுடன் வந்திருந்தனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா கூத்துக்குடி புதுக்காலனியை சேர்ந்த மூதாட்டி குண்டுப்பிள்ளை(வயது 62) என்பவர், தனது மகன் குமாரவேலுவுடன் 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் மனு நகல்களின் மூட்டையையும், புதிதாக கொடுக்க இருந்த மனுவையும் கலெக்டர் தண்டபாணியிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, ஐவதுகுடி கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டனர். இதை மீட்டு தரக்கோரி 11 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் என இதுவரை நான் கொடுத்த மனுக்களின் மொத்த எடை 13 கிலோ ஆகும்.

    இதோ அந்த மனுக்களின் நகல்கள். நல்லது நடக்க வேண்டும் என்றால் தீக்குளிக்கத்தான் செய்யணும். 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் குண்டாக இருந்தேன். மனுகொடுக்க அலைந்து மெலிந்து விட்டேன் என்றார்.

    உடனே கலெக்டர் தண்டபாணி, தீக்குளித்து விடாதீர்கள், மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். பின்னர் அந்த மூதாட்டி மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    கடலூர் பகுதியில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

    கடலூர்:

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஓரிரு இடங்களில் திடீரென்று மழையும் பெய்து வந்தது.

    நேற்று மதியம் 3 மணி அளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென்று இடி- மின்னலுடன் பலத்த சூறை காற்றும் வீசியது.

    கடலூர் அருகே ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், எம்.புதூர் உள்ளிட்ட பல இடங்களில் ஏலக்கி, பூவன், நாடு போன்ற வாழை மரங்கள் 40 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்தன.

    சூறைக்காற்றினால் அந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    எஸ்.புதூர் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகளை இரவு-பகலாக காத்து கிடந்து தண்ணீர் பாய்ச்சி வளர்த்து வந்தோம். அந்த வாழை மரங்களில் உள்ள வாழைத்தார்களை இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை செய்ய இருந்தோம். இந்த நிலையில் நேற்று வீசிய சூறைக்காற்றால் எங்களது பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகி உள்ளது.

    இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடலூரில் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் உறவினரின் பெண்ணுக்கு வாலிபர் தாலிகட்டினார்.
    பண்ருட்டி:

    கடலூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 28), பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆசைமுத்து மகள் ரஞ்சிதம் (வயது 24) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி இரு வீட்டார்களும் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவந்தனர். இவர்களது திருமணம் இன்று கடலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் மணமகள் ரஞ்சிதம் கூறி விட்டு சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் ரஞ்சிதத்தை தேடினர். உறவினர் மற்றும் தோழிகளிடம் விசாரித்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் ரஞ்சிதத்தின் தந்தை ஆசைமுத்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரஞ்சிதத்தை தேடினர். மணமகள் மாயமானதை அறிந்த மணமகன் அழகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இன்று திருமணம் நடைபெற இருந்த கடலூர் தனியார் திருமண மண்டபத்துக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்தனர். மாயமான மணமகள் ரஞ்சிதத்தை இன்று காலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர் ஒருவரிடம் அழகேசனுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்துதர விருப்பமா? என மணமகனின் பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணின் பெற்றோரும் சம்மதித்தனர்.

    இதைத்தொடர்ந்து உறவினர் மகளும் அழகேசனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து புதுமணப்பெண்ணை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். அழகேசன் அந்த மணப்பெண்ணின் கழுத்தில் குறித்த முகூர்த்த நேரத்தில் தாலிகட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர். திடீரென மணப்பெண்ணாக மாறிய பெண்ணை அனைவரும் பாராட்டினர். #Tamilnews
    நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மணப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சேமக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 24). இவருக்கும் கடலூரை சேர்ந்த அழகேசன் (28) என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இவர்களது திருமணம் நாளை காலை கடலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு ரஞ்சிதம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார். அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரஞ்சிதத்தின் அண்ணன் காசிமுத்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாயமான ரஞ்சிதத்தை தேடி வருகிறார்.

    நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மணப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்து இறந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குடும்பத்துக்கு வைகோ ஆறுதல் கூறினார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கிலும் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியாண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 30). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்துவந் தார். வேல்முருகனை விடுதலை செய்ய வலியுறுத்தி பெரியாண்டிகுழியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிகம்பம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

    உடல் கருகிய நிலையில் இருந்த ஜெகனை கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் ஜெகனின் உடல் அவரது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையை அடுத்த பெரியாண்டிகுழிக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி அஞ்சு, அவரது 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த நிலையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பெரியாண்டிகுழிக்கு வந்தார். ஜெகனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஜெகன் மனைவி அஞ்சுவிடம் ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தனது தலைவர் வேல்முருகனுக்காக ஜெகன் தீக்குளித்து இறந்துள்ளார். இனி யாரும் தீக்குளிக்காதீர்கள். எல்லோரும் வாருங்கள் இணைந்து போராடுவோம். வேல்முருகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். ஜெகன் மரணத்துக்கு எடப்பாடி அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    கடலூர் அருகே முன்விரோத தகராறில் கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜுலு (வயது 55). விவசாயி.

    இவர் அந்த பகுதியில் உள்ள தனது நிலத்தில் வாழை மற்றும் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் இவரது நிலத்தில் இருந்த தர்ப்பூசணியை திருடி கொண்டு இருந்தனர்.

    இதனை கோவிந்த ராஜூலு உறவினர் தினேஷ் பார்த்து, அந்த கும்பலை தட்டிக்கேட்டார். அப்போது அந்த கும்பல் தினேசை சரமாரியாக தாக்கினார்கள். இதில் தினேஷ் காயம் அடைந்தார்.

    இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜுலு மற்றும் அவருடைய மனைவி ஜோதி ஆகியோர் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 15 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கோவிந்தராஜூலு மற்றும் ஜோதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.

    பின்னர் வீட்டில் இருந்த கார், டிராக்டர், இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் முன்விரோதம் தொடர்பாக நடந்ததா? வேறு ஏதேனும் காரணமா? என்று கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    சிதம்பரம் அருகே இன்று காலை மினிலாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்திரன்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர்கள் காசியம்மாள் (வயது 54) மற்றும் அமுதா (53). இவர்கள் கூலி வேலை செய்து வந்தனர்.

    இன்று காலை அகரநல்லூர் கிராமத்தில் வயலில் வேலை செய்ய காசியம்மாள், அமுதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெண்கள் ஒரு மினிலாரியில் புறப்பட்டனர். மினிலாரியை வல்லம் பகுதியை சேர்ந்த ரெங்கபாட்ஷா ஓட்டி சென்றார். இந்த மினிலாரி சிதம்பரம் புறவழிச்சாலையில் கூத்தங்கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மினிலாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மினிலாரியின் இடிபாடுக்குள் சிக்கி காசியம்மாள் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அமுதா, அலமேலு, குமுதவள்ளி, வசந்தா உள்பட 21 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அமுதா இறந்தார். காயம் அடைந்த 20 பெண்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ரெங்கபாட்ஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிதம்பரம் புறவழிச்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் சேத்திரன்கிள்ளை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #Tamilnews
    தேவனாம்பட்டினத்தில் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் கடலில் மீன்பிடித்தது தொடர்பாக கடந்த 15-ந்தேதி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பயங்கர ஆயுதங்களுடன் தேவனாம்பட்டினம் மீனவர்கள் சோனாங்குப்பத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

    இதில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேவனாம் பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் சதீஷ் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் தண்டபாணி உத்தரவின்பேரில் ஆறுமுகம், சதீஷ் மற்றொரு ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    ×