search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளித்து இறந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குடும்பத்துக்கு வைகோ ஆறுதல்
    X

    தீக்குளித்து இறந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குடும்பத்துக்கு வைகோ ஆறுதல்

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தீக்குளித்து இறந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குடும்பத்துக்கு வைகோ ஆறுதல் கூறினார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி நெய்வேலியில் காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கிலும் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையை அடுத்த பெரியாண்டிகுழி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 30). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்துவந் தார். வேல்முருகனை விடுதலை செய்ய வலியுறுத்தி பெரியாண்டிகுழியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிகம்பம் அருகே உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

    உடல் கருகிய நிலையில் இருந்த ஜெகனை கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் ஜெகனின் உடல் அவரது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையை அடுத்த பெரியாண்டிகுழிக்கு எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி அஞ்சு, அவரது 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த நிலையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பெரியாண்டிகுழிக்கு வந்தார். ஜெகனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஜெகன் மனைவி அஞ்சுவிடம் ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தனது தலைவர் வேல்முருகனுக்காக ஜெகன் தீக்குளித்து இறந்துள்ளார். இனி யாரும் தீக்குளிக்காதீர்கள். எல்லோரும் வாருங்கள் இணைந்து போராடுவோம். வேல்முருகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். ஜெகன் மரணத்துக்கு எடப்பாடி அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×