search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் செல்போன் டவரில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தற்கொலை மிரட்டல்
    X

    கடலூரில் செல்போன் டவரில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தற்கொலை மிரட்டல்

    வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று செல்போன் டவரில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
    கடலூர்:

    கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 46). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் நகர இளைஞரணி துணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று மாலை 4 மணி அளவில் கடலூர் அண்ணாநகர் நவரத்தினதெருவில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரில் திடீரென ஏறினார்.

    அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டார்.

    தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சுந்தரை செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் சுந்தர் கீழே இறங்கி வரமறுத்து விட்டார்.

    வேல்முருகனை விடுதலை செய்யாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    சுந்தரின் மகள்கள் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். அவரை கீழே இறங்கி வருமாறு அழுதபடியே கெஞ்சினர்.

    இதையடுத்து டவரில் இருந்து சுந்தர் கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    45 நிமிடங்கள் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×