search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் சாலை மறியல்
    X

    கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் சாலை மறியல்

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது பெண் இறந்தால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் வில்வநகரைச்சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் தனியார் ஆம்புலன்சில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா(வயது28). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில் விமலா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று மாலை பிரசவவலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் விமலாவை பிரசவத்துக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இரவு 7 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் விமலா பரிதாபமாக இறந்தார்.இதை அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    டாக்டரின் கவனக்குறைவால் தான்விமலா இறந்து விட்டதாக கூறி, பிரசவ வார்டு கட்டிடத்தை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.

    மேலும் விமலாவின் சாவுக்கு காரணமான டாக்டர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் விமலாவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று காலை விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் அரசு ஆஸ்பத்திரி அருகே திரண்டனர்.

    பின்னர் அவர்கள் நகர செயலாளர் செந்தில் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விமலாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், இறந்து போன விமலாவின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், விமலா சாவுக்கு காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விமலாவின் உடலை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது. புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்றனர். உடனே போலீசார் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட் டத்தை கைவிட்டனர்.

    Next Story
    ×