என் மலர்tooltip icon

    கடலூர்

    காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயல் என்று வைகோ கூறியுள்ளார்.
    நெய்வேலி:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெய்வேலி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து உள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 324 கிணறுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 57,500 ஏக்கர் நிலத்தை 2017-ல் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனை ரத்து செய்ய மத்திய-மாநில அரசு தயாரா?

    நீட் தேர்வு


    நீட் தேர்வு வரவே வராது என்று கூறிவிட்டு, மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து இன்று தமிழக மாணவர்களுக்கு அ.தி.மு.க. அரசு துரோகம் இழைத்து விட்டது.மேகதாது அணை கட்டவும், நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதற்காகவே மத்திய- மாநில அரசுகள் முயற்சித்து வருகிறது.

    ஓ.என்.சி.சி. நிறுவனத்துடனும், வேதாந்தா குடும்பத்துடனும் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய-மாநில அரசுகள் தயாரா? ரூ.50 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு பெட்ரோல் கெமிக்கல் திட்டம் அமைக்க முயற்சித்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தாலும் தஞ்சை தரணி பாலைவனமாகும். இந்த திட்டம் தமிழக மக்களை அழிக்கக்கூடியதாக இருக்கும். எனவே இதனை எதிர்க்க ஒவ்வொரு தமிழனும் போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சொத்து பாதுகாப்பு குழு தலைவரும், நகர செயலாளருமான பிச்சை, விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் பாபு, கோவிந்தராஜ், ஜெய்சங்கர், தொழிற் சங்க நிர்வாகிகள் மத்தியாஸ், மனோகரன் ஆகியோர் இருந்தனர்.
    கடலூர் அருகே வரதட்சணை கொடுமையால் தந்தை-மகள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூரை அடுத்த கண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாவாடைசாமி (வயது 58), பாத்திரம் தயாரிக்கும் தொழிலாளி.

    இவரது மகள் சங்கீதா (28). இவருக்கும் புதுவை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    திருமணமான சில மாதங்களில் ராஜேஷ், அவரது மனைவி சங்கீதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த பிரச்சினை காரணமாக சங்கீதா அவரது கணவரை விட்டு பிரிந்து கடலூர் கண்ணார பேட்டையில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் ராஜேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கு அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

    இந்த தகவல் சங்கீதாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பாவாடைசாமி மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகிய 2 பேரும் இன்று வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்களை பாவாடைசாமியின் மகன்கள் மீட்டு சிகிச்சைக்காக கண்ணாரம் பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாவாடைசாமியும், சங்கீதாவும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார்செய்யப்பட்டது. அதன்பேரில் பாவாடைசாமியும், சங்கீதாவும் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

    தந்தை-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடலூரில் மாணவன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் சங்கர் இவரது மகன் விடுதலை செல்வன் (வயது 14).

    வடலூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான் நேற்று விடுதலை செல்வன் வடலூர் தொழிற்பேட்டை அருகே உள்ள விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தான்.

    தகவல் அறிந்த வடலூர் போலீசார் விரைந்து சென்று மாணவன் விடுதலை செல்வனின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அங்கு அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர் விடுதலை செல்வன் சாவில் மர்மம் உள்ளது.

    எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் செய்தனர்.

    இதனை அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் , குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். போராட்டம் செய்தவர்களை சமாதான படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இன்று காலையும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மாணவன் விடுதலை செல்வனின் உடலை வாங்க மறுத்து திடீர் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் அவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

    பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற காணிக்கை செலுத்துவதற்காக கோவிலில் 8 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. உண்டியல்கள் நிரம்பிய பிறகு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியலை திறந்து பக்தர்களின் காணிக்கை பணம் எண்ணப்படும். இந்நிலையில் நேற்று இரவு கோவிலின் சிறப்பு வழிபாடுகள் முடிந்தவுடன் கோவிலை பூட்டிவிட்டு அர்ச்சகர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இன்று காலை கோவில் நடை திறப்பதற்காக கோவிலுக்கு அர்ச்சகர்கள் வந்தனர். அப்போது கோவிலின் முன்பகுதியில் உள்ள ராஜகோபுரத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அர்ச்சகர்கள் உடன் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் உடைக்கப்பட்டு கிடந்த உண்டியலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பகுதியில் ஒரு சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டிருந்தது. அந்த கேமரா காட்சியை கைப்பற்றி உண்டியலை உடைத்த மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தலாம் என சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்க்க சென்றனர். அப்போது அந்த சி.சி.டி.வி. கேமரா பழுதடைந்திருந்தது தெரிய வந்தது.

    மேலும் இன்று கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ராஜகோபுரத்தின் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணத்தை முழுமையாக கொள்ளை அடிக்காமல் பாதிபணத்தை மட்டும் கொள்ளையடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் மற்ற இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகளை கைப்பற்றி உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது உண்டியல் உடைக்கப்பட்டது உண்மை தான். ஆனால் உண்டியலில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவில்லை. சி.சி.டி.வி. கேமரா இருந்ததைப் பார்த்த மர்மநபர்கள் பணத்தை கொள்ளை அடிக்காமல் சென்று இருக்கலாம் என தெரிவித்தனர். இதற்கு சி.சி.டி.வி. கேமரா பல ஆயிரங்கள் செலவு செய்து வைக்கப்பட்டும் அதனை முறையாக பராமரிக்காததால், இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சம்பந்தப்பட்ட நிர்வாகம் பராமரித்து கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் ‘செல்பி’ எடுத்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் என்.எல்.சி. சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7-ந் தேதி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இது பற்றி அறிந்ததும் என்.எல்.சி. சுரங்கம் முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள், பா.ஜனதாவினரை கண்டித்தும், மாஸ்டர் படப்பிடிப்பை தொடர்ந்து இங்கேயே நடத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று முன்தினம் மாலையிலும் நடிகர் விஜய்யை காண்பதற்காக ரசிகர்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் 2-வது சுரங்கத்தின் முன்பு திரண்டனர். படப்பிடிப்பு முடிவடைந்து விஜய் வெளியே வருவதை அறிந்த அவர்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி சுரங்கத்தின் நுழைவு வாயிலை நோக்கி ஓடினர். அப்போதும் போலீசார் ரசிகர்களை விரட்டியடித்து கூட்டத்தை கலைத்தனர்.




    இந்த நிலையில் நேற்றும் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நடிகர் விஜய்யை காண ரசிகர்கள் மட்டுமின்றி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் போலீசாரும், என்.எல்.சி. மத்திய தொழிலக பாதுகாப்பு படை தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தை அறிந்தும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், மாலையில் ரசிகர்களின் மத்தியில் நடிகர் விஜய் பேசுவார் என்று தகவல் பரவியது. அதற்கு ஏற்றார் போல் என்.எல்.சி. 2-வது சுரங்க நுழைவு வாயிலின் முன்பு வேன் ஒன்றும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். சில ரசிகர்கள் ஆள் உயர மாலையையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். இந்த நிலையில் மாலை 6.15 மணியளவில் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் விஜய், காரில் வெளியே வந்தார். பின்னர் அவர் தான் வந்த காரை சுரங்கத்தின் முன்பு நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி, தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் தலைவா... தலைவா... என்று உற்சாக குரல் எழுப்பினர்.

    நடிகர் விஜயை காண திரண்டிருந்த ரசிகர்கள்

    தொடர்ந்து நடிகர் விஜய், தான் வைத்திருந்த செல்போனை எடுத்து ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்தார். இதைபார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். பின்னர் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு வேனில் இருந்து கீழே இறங்கினார். இதைதொடர்ந்து தனது காரில் ஏறி வெளியே வந்தார். நடிகர் விஜய் பேசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இதற்கிடையே நடிகர் விஜய் வெளியே வருவதை அறிந்த ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு அவரை காண ஓடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    நெய்வேலி என்.எல்.சி. பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது தவறானது என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

    நெய்வேலி:

    நடிகர் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ சினிமா படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி சுரங்கப்பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    இந்த படபிடிப்புக்கு பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட இடமான என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்.எல்.சி சுரங்க நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என்று கூறி போராட்டம் செய்தனர்.

    இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் நெய்வேலி வந்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். அந்த இடத்தில் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளது. சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கு அங்கு அனுமதி கொடுத்ததே தவறானது ஆகும்.

    அதனால் தான் அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த கூடாது என்று பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    ஒரு தனி நபருக்காகவோ, படத்துக்காவே நாங்கள் எதிர்க்கவில்லை. பாதுகாப்பு கருதிதான் நாங்கள் எதிர்க்கிறோம். அந்த படத்துக்கு விளம்பரம் செய்ய நான் தயார் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தைப்பூச விழாவின் சிகர நிகழ்ச்சியான தை பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதன்படி காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
    கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூசநட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு 149-வது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. 7.30 மணிக்கு தருமச்சாலை சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

    இதையடுத்து வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லத்திலும், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழியிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தை பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதன்படி காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

    இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தார். மேலும் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல் காலை 10 மணிக்கும், மதியம் 1 மணிக்கும் 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. கடலூர், விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.

    மேலும் இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. ஜோதி தரிசன விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் ஊர்காவல் படையினர், சிறப்பு காவல் படையினர், போக்குவரத்து போலீசார் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் சத்தியஞான சபை வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராவை வைத்தும், பல்வேறு இடங்களிலும் கட்டுபாட்டு அறைகள் அமைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வடலூர் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    வள்ளலார் சபை வளாகத்தில் தற்காலிக பஸ்நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. ஜோதி தரிசன விழாவை காண வரும் சன்மார்க்க அன்பர்கள் தங்குவதற்கு தேவையான இட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. விழாவை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வடலூரில் ஜோதி தரிசன விழாவை கடலூர் மாவட்ட பொதுமக்கள் காணும் வகையில் கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
    என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு எனக்கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு என்எல்சி  2-வது சுரங்கத்தில் 2 வது நாளாக நடைப்பெற்று வருகிறது.

    இதற்கிடையே விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் 2ன் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம் என சுரங்கத்தை முற்றுகையிட்டு  பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    உரிய அனுமதியுடன் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை சோதனை முடிந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
    விஜய்

    இந்நிலையில் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் முன் விஜய் ரசிகர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10-ம் வரை படப்பிடிப்பு நடத்த என்எல்சி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    நெய்வேலி அருகே தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளியை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள இந்திராநகர் மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் ஆனந்தராஜ் (வயது 25). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (28). இளையராஜா, ராமதாஸ், கருப்பு என்கிற ஆனந்தராஜ், சேகர், பாண்டியன், பாஸ்கர்,அய்யப்பன் ஆகியோருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த முருகன் உள்ளிட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஆனந்தராஜை கத்தியால் வெட்டியதோடு, கட்டையாலும் தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆனந்தராஜிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்‌ஷிப் போலீசார் வழக்குப்பதிவு முருகனை கைது செய்தனர். இளையராஜா உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே பாதிரியார் மீது பாலியல் புகார் கூறிய 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அறந்தாங்கி கிராமத்தில் புனித அந்தோணியார் உயர் நிலை பள்ளி உள்ளது. இங்கு பக்கத்து கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் பணியாற்றும் பாதிரியார் மீது மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் 2 ஆசிரியர்கள் புகார் கூறினர்.

    இந்த விபரம் மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் பாதிரியாருக்கு ஆதரவாக திரண்டனர். பின்னர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். அப்போது பாதிரியார் மீது தவறான புகார் கூறிய 2 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். ஒரே நேரத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே கிராமமக்களில் ஒரு தரப்பினர் பள்ளிக்குள் புகுந்து பாதிரியார் மீது புகார் கூறிய 2 ஆசிரியர்களையும் வகுப்பறையில் பூட்டி சிறை வைத்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    தகவல் அறிந்த சேத்தியாத் தோப்பு துணை போலீஸ் சூப்ரபிரண்டு ஜவஹர்லால், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்செல்வன், சோழத்தரம் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். சிறை வைக்கப்பட்ட ஆசிரியர்களை மீட்டனர். பின்னர் கிராம மக்களிடம் இது தொடர்பாக ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார். என்றாலும் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பள்ளி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. பிரமுகர், கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார்.
    பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முத்துபெருமாள் தோல்வி அடைந்தார். இதில் துவண்டு விடாத முத்துபெருமாள், மறுநாளே கிராமங்களுக்கு சென்று தனக்கு வாக்களி்த்த வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். அதுமட்டுமின்றி உங்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் நேற்று முன்தினம் ஊர் விருந்து என்ற பெயரில் கிராம மக்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டனர். அப்போது முத்துபெருமாள், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

    இது குறித்து முத்துபெருமாள் கூறுகையில், தேர்தலில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். ஓட்டு எண்ணிக்கையின்போது பெரியாண்டிக்குழி கிராமத்தில்தான் அதிகம்பேர் எனக்கு வாக்களித்தது தெரிந்தது. எனவே அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளேன். இதேபோல் 25-வது வார்டுக்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரியாணி விருந்து வைப்பேன் என்றார்.

    பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நன்றி சொல்வதற்கு கூட ஊர் பக்கம் வர மாட்டார்கள். ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த தி.மு.க. பிரமுகர் கிராம மக்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
    சேத்தியாதோப்பு அருகே வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே கீரப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூந்தோட்டம் கிராமம்.

    இங்குள்ள வண்ணான் மதகு அருகே வயல்வெளி பகுதியில் சுமார் 38 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.

    அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அப்போது வயல் அறுவடைக்கு வந்த தொழிலாளர்கள் இந்த வாலிபரின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் அபுஇப்ராகீம் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தது. எனவே அவரை யாரோ அடித்து கொன்று உள்ளனர். பின்னர் கழுத்தில் கயிறை கட்டி இழுத்து வயல் வெளியில் உள்ள மின்கம்பம் பகுதியில் உடலை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். விசாரணையில் பிணமாக கிடந்த வாலிபர் சேத்தியாதோப்பு அருகே உள்ள சக்திவிளாகம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்தது.

    இவரை அடித்து கொன்றவர்கள் யார்? எதற்காக அடித்து கொன்றனர்? கொலையாளிகள் எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×