search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    தேனி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் செயல்பாடு குறித்து வண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.
    • மேலும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.

    தேனி:

    முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள தேனி மாவட்டத்தின் கடைகோடி பகுதியான கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட வண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து, சீலமுத்தையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணலாத்துக்குடிசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் வருசநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்படவுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, சமையல் கூடம், தேவையான சமையல் பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் பட்டியல், தண்ணீர் வசதி, மின் வசதி உள்ளிட்டைவகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது,

    முதல்-அமைச்சர் அரசுப்பள்ளிகளில் பயிலுகின்ற ஏழை மாணவ, மாணவிகளின் கல்வியினை ஊக்கப்படுத்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிடவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு, முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 51 அரசு ஆரம்பப்பள்ளிகளில் பயிலுகின்ற 1,342 மாணவர்களுக்கும், 1,291 மாணவிகளுக்கும் என மொத்தம் 2,633 மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆரம்பப் பள்ளிக்கும் உணவு தயாரித்தலுக்காக மகளிர் திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, சமையல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அட்டவணையின்படி, திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    மேலும் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.

    Next Story
    ×