என் மலர்tooltip icon

    சென்னை

      சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

      இதில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.

      சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதியன்று வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது.

      இதன்படி, ரூ.918.50-ல் இருந்து ரூ.818.50 ஆக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. 19.2 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலையில் கடந்த சில மாதங்களாகவே மாற்றம் இருந்து வந்தது.

      கடந்த 1-ந் தேதி வணிக சிலிண்டரின் விலையில் ரூ.41 குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.1,921.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

      இதற்கிடையே கேஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நேற்று திடீரென ரூ.50 உயர்த்தி உள்ளது.

      இதன் மூலம் சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

      • 34 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 600 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
      • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      சென்னை:

      சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை- டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

      இந்த போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (24), ஆலந்தூரை சேர்ந்த ரூபேஷ் (24), ஆவடியைச் சேர்ந்த விஷ்ணு (19), கொளத்தூரைச் சேர்ந்த சேது ரோஷன் (20), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சந்திரன் (52), அசோக்நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் (25), கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அரவிந்த் (20), திருவொற்றியூரைச் சேர்ந்த சாலமன் (19), கேரளாவைச் சேர்ந்த வினித் (28), சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23), கொரட்டூரைச் சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய 11 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

      அவர்களிடம் இருந்து 34 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 600 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

      • தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் பயணம்.
      • டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.

      சென்னை விமான நிலையத்தில் இருந்து, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் செய்துள்ளார்.

      தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

      டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

      அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

      • செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தை வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.
      • வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

      சென்னை, மேற்கு மாம்பலம், சீனிவாச பிள்ளை தெருவை சேர்ந்தவர் வெங்கட் ரமணன். இவரது மனைவி கலா. இவர்களது மகள் நெதர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார்.

      இந்த நிலையில் வெங்கட் ரமணனும், அவரது மனைவியும் கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு நெதர்லாந்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர்.

      இந்த வீட்டில் ஏற்கனவே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் மர்ம நபர்கள் வந்தால் செல்போனுக்கு எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பத்தையும் வெங்கட் ரமணன் பதிவு செய்து இருந்தார்.

      இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வெங்கட்ரமணனின் செல்போனுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் தனது செல்போன் மூலம் வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

      அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடை ந்தார்.

      இதுபற்றி அவர் உடனடியாக செல்போன் மூலம் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வெங்கட சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார்.

      அவர் வெங்கட்ர மணனின் வீட்டிற்கு சென்றபோது கொள்ளையர்கள் பொருட்களுடன் தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

      இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு ரோந்து பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், காவலர் ஏழுமலை ஆகியோர் தலைமையிலான அசோக் நகர் போலீசார் விரைந்து வந்தனர்.

      அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அருகில் உள்ள பக்தவத்சலம் தெருவில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 2 பேரையும் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர்.

      விசாரணையில் அவர்கள் பல்லாவரம் பகுதியை சேர்ந்த கமலக் கண்ணன் (65), திருப்பத்தூரை சேர்ந்த ஆரி பிலிப் (57) என்பது தெரிந்தது.

      இதில் பிடிபட்ட கொள்ளையன் கமலக்கண்ணன் மீது 70 வழக்குகளும் ஆரி பிலிப் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

      நண்பர்களான இருவரும் கூட்டாக சேர்ந்து பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதில் கை தேர்ந்தவர்கள் ஆவர். போலீசார் விரட்டிசென்றபோது தப்பி ஓடமுயன்ற கொள்ளையன் ஆரி பிலிப் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

      கைதான 2 பேரிடம் இருந்து 6 பவுன் நகை, 1 ½ கிலோ வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் மற்றும் கவரிங் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

      முன்னதாக கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தின் பூட்டை உடைத்தும் புகுந்து உள்ளனர். அங்கு லேப்டாப் மட்டும் இருந்ததால் கொள்ளையடிக்காமல் திரும்பி வந்து இருக்கிறார்கள்.

      அவர்கள் இதுபோல் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கே.வி. மஹாலில் நடைபெற உள்ளது.
      • பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

      தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறுித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

      இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 30.04.2025 புதன்கிழமை காலை 09.00 மணியளவில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கே.வி. மஹாலில் நடைபெற உள்ளது.

      அதில் தேமுதிக பொதுச் செயலாளர் .பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், கழக வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

      இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக அவைத்தலைவர், மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் (ஒரு நபர் மட்டும்), மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

      இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

      • வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது.
      • தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!

      நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? என்றும் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது Sadist BJP அரசுக்கு மிகவும் பொருந்தும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

      இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

      நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?

      "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, #SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும்!

      உலக அளவில் #CrudeOil விலை சரிந்துள்ள நிலையில், #Petrol #Diesel விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?

      வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் #GasCyclinder விலை உயர்வு அமைந்திருக்கிறது.

      மக்களே…

      அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது!

      ஒன்றிய #BJP அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!

      இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • கேஸ் விலையை உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
      • வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை.

      வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

      இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பதிவு வெளியிட்டுள்ளார்.

      அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

      மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

      தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

      மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

      இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

      • தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான்.
      • திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!

      தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு "நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகிகள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், நொந்து போன எதிர்க்கட்சித் தலைவர் வீராவேசமாகக் கருத்து சொல்லியிருக்கிறார்.

      தியாகியை விடுங்கள். துரோகியைத் தெரியுமா? தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி பழனிசாமியை கை காட்டுவான். அரசியல் அறத்தை அடகு வைத்து விட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் பழனிசாமி.

      ஜெயலலிதா அருகில் கூனி குறுகி நிற்பார்; ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார்; ஆனால், ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக பாஜக-வின் பாதம்தாங்கியாக மாறி ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி.

      தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியைப் பிடித்த பிறகு, சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே!

      சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார்? எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும். உண்மையில் எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள்தான் அந்தத் தியாகிகள்!

      கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது'' என்று சத்தியம் செய்து வந்த பழனிசாமி, இன்று டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து, சிறைக்கு அஞ்சி தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தயாராகி விட்டார்.

      அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் பிரமுகர்களை முறை போட்டுப் போய் பார்த்துவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான்! அவர்களுக்கும் எடப்பாடி துரோகிதான்!

      பாஜகவுடன் இதுகாலம் வரையில் இருந்த கள்ளக்கூட்டணி, கரம் பிடிக்கும் கூட்டணியாக மாறப் போவதால், ரத்தத்தின் ரத்தங்களும் மக்களும் நாக்கை பிடுங்கும் வகையில் கேள்வி கேட்பார்கள். அதை மடைமாற்ற திமுக அரசு மீது வதந்திகளை பழனிசாமி பரப்பி வருகிறார்; பாஜகவின் தயவில் அரசியல் வண்டியை ஓட்ட நினைக்கிறார் பழனிசாமி. தனக்கு முதுகெலும்பு இருப்பதே, பாஜகவிற்கு வளைந்து கொடுத்து அடிமை சேவகம் செய்வதற்குத்தான் என ஒன்றிய அரசின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பாஜகவின் பண்ணையடிமைதான் பழனிசாமி.

      தனது டெல்லி எஜமானர்களின் ஏவல் படையான அமலாக்கத்துறை தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய ஒரு முகாந்திரமற்ற சோதனையை வைத்துக் கொண்டு, அபத்தமான கேள்வியோடு தனது கோமாளித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. யார் அந்த சார்? என்ற புரளி நாடகம் அம்பலப்பட்ட பிறகு வேறு ஏதேனும் கிடைக்காதா என்று திணறிக் கொண்டிருக்கிறார்.

      கள்ளக் கூட்டணியை உறுதி செய்ய டெல்லியில் அமித்ஷாவை பதுங்கிப் பதுங்கி, கார்கள் மாறி மாறி சென்று சந்தித்த கோழை பழனிசாமி, தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றிப் பேசத் திராணியிருக்கிறதா? தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என நீதிமன்றத்திற்கு ஓடிப் போய் தடையாணை வாங்கிய பயந்தாங்கொள்ளி பழனிசாமி பேசுவது அத்தனையும் கேலிக்கூத்துகள்தான்.

      தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் துரோகம், இந்தியைத் திணித்து துரோகம், தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து துரோகம் என பாஜக வரிசையாக துரோகங்களைச் செய்து சதித்திட்டம் தீட்டி வருகிறது. கொஞ்சம் கூட வெட்கமின்றி, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி!

      இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரை இன்று உலக அளவில் ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. அதைப் பொறுக்க முடியாமல், தனது பதவி நலனுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 'பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்' என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி டெல்லி எஜமானர்களின் ஆணையின்படி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகமும் மக்களிடம் அம்பலப்பட்டு பழனிசாமி அவமானப்படுவது உறுதி.

      இவ்வாறு ரகுபதி தெரிவித்துள்ளார்.

      • ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என நீதிபதி கருத்து.
      • ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்ட நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா என கேள்வி.

      சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை துவக்கப்பட்ட நிலையில், வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      முன்னதாக, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு வந்தது.

      அப்போது, குற்றம்சாட்டப்பட்டோர் விளக்கத்தை கேட்காமல் வழக்கை மாற்றியதற்கு குற்றம்சாட்டப்பட்டவர் பொறுப்பாகமாட்டார் என பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

      ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்ட நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

      அதாவது, அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்காமல், தலைமை நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா ? என்றார்.

      ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.

      இந்நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் பொன்முடி தரப்பு விளக்கமளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

      • கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
      • சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

      பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனப் பதிவு வெளியிட்டுள்ளார்.

      அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

      சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

      இதன்மூலம் ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

      நிலைமை இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமான்ய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர்கள்.

      ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கவேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

      இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

      • நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
      • தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும்.

      இன்னல் பல எதிர்கொண்டு கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் வாழ்வாதாரமும் ஊசலாட வாழ்கின்றனர் மீனவர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

      இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

      இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.

      அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது ஒன்றிய அரசு.

      எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.

      தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

      இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

      • அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார்.
      • தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை என ராம்குமார் தரப்பு கூறியது.

      சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      ராம்குமாரின் மகன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார்.

      இந்த வழக்கு மீதான விசாரணைக்கு போது, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

      இதற்கு, "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

      இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" என குறிப்பிட்டார்.

      இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, " தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை" என ராம்குமார் தரப்பு கூறியது.

      சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

      ×