என் மலர்tooltip icon

    சென்னை

    • பா.ம.க. நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.
    • பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பா.ம.க. கூட்ட மேடையிலேயே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பா.ம.க. நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி பா.ம.க. தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    மேலும் பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    • 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
    • இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது. இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

    குட் பேட் அக்லி' திரைப்படத்தை நடிகை ஷாலினி தனது மகளுடன் இணைந்து ரோகிணி திரையரங்கில் கண்டு ரசித்து வருகிறார்.

    • கடுமையான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி 4 (குரூப் 4) பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்று வரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல.

    தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு சுமார் 9600 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அக்டோபர் 28-ஆம் நாள் வெளியிடப்பட்டன.

    எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்தவர்களுக்கு துறைகள் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. அதனால், தங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது பறிக்கப்படுமா? என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். கடுமையான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், போக்குவரத்துறைக்கு தொகுதி 4 பணியாளர்களை நியமிப்பதில் மட்டும் அரசு காலம் தாழ்த்துவது ஏன்? ஒருவேளை அவர்கள் நியமிக்கப்படுவதற்கு இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகும் என்றால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?

    அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு. அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போக்குவரத்துத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார்.
    • முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார்.

    மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாளை அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ள நிலையில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

    • 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர்.
    • விஜய் ஒரு சிறப்பான நடிகர், அதில் எந்த குறையும் சொல்ல மாட்டோம்.

    சென்னை:

    நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக நேற்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    நீட் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்,

    ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப்பெரிய பொய் என்பதே தி.மு.க. தலைமையின் அறமற்ற அரசியல்.

    பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள். இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர். அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் என்ற ஓர் நாடகத்தையும் இப்போது அரங்கேற்றி உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் நீட் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தை த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்தது தொடர்பான அமைச்சர் காந்தி கூறியதாவது:

    * யார் அவர்? என்ன தராதரம் இருக்கிறது? பொதுமக்களுக்கு என்ன செய்துள்ளார்?

    * விஜய் ஒரு சிறப்பான நடிகர், அதில் எந்த குறையும் சொல்லமாட்டோம். சினிமா வேறு, அரசியல் வேறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று ஒரே நாளில் மட்டும் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாதத்தின் தொடக்கத்திலும் விலை அதிகரித்து இருந்தது. கடந்த 3-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தங்கம் பதிவு செய்தது. மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என பேசப்பட்ட நிலையில், கடந்த 4-ந்தேதியில் இருந்து என்ன வேகத்தில் ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சரியத் தொடங்கியதை பார்க்க முடிந்தது.

    இந்த விலை குறைவு ஓரளவுக்கு மக்களுக்கு ஆறுதல் கொடுத்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் விலை எகிறியது. நேற்று ஒரே நாளில் மட்டும் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அந்தவகையில் காலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்திருந்தது. அதேபோல், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் அதிகரித்து இருந்தது. அதன்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி எதிரொலியால், பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் அதன் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,560-க்கும் சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480-க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் நேற்றும், இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,280

    08-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,800

    07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-04-2025- ஒரு கிராம் ரூ.104

    08-04-2025- ஒரு கிராம் ரூ.102

    07-04-2025- ஒரு கிராம் ரூ.103

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    05-04-2025- ஒரு கிராம் ரூ.103

    • கார் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவர் மீது மோதியதுடன் அங்கு சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் மரத்தின் மீது மோதி நின்றது.
    • சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை மீது 3 பிரிவில் வழக்குப்பதிந்துள்ள காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர்.

    வடபழனி:

    வடபழனியை சேர்ந்தவர் சியாம் (வயது 45). இவர் கடந்த 8-ந்தேதி இரவு தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து அனுப்பி தெருவில் நிறுத்தி வைத்துள்ள கார் மீது கவரை மூடி விட்டு வருமாறு அனுப்பி உள்ளார்.

    அந்த சிறுவன் காரை ஓட்டும் ஆசையில் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் பிரதான சாலை வழியாக காரில் வலம் வந்துள்ளான். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவர் மீது மோதியதுடன் அங்கு சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் மரத்தின் மீது மோதி நின்றது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விசாரணையில் காயமடைந்தவர்கள் சாலிகிராமம், தனலட்சுமி காலனி, வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்த மகாலிங்கம் (69), கங்காதரன் (49) என தெரியவந்தது. இதையடுத்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிறுவன் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் படுகாயம் அடைந்த முதியவர் உயிரிழந்தார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனையடுத்து சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை மீது 3 பிரிவில் வழக்குப்பதிந்துள்ள காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர்.

    • பொன்னேரி-கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • இன்று முதல் 12ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

    சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இன்று முதல் 12ஆம் தேதி வரை பொன்னேரி-கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 2 ரெயில்கள் சென்னை பீச் வரை தான் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரச குடும்பத்தில் பிறந்த மகாவீர் செல்வச் செழிப்பை வெறுத்து, ஏழை-எளியோரின் வாழ்க்கை சூழ்நிலைகளை உணர்ந்து அவர்கள் மேம்பாட்டிற்காகச் சிந்தித்தவர்.
    • மகாவீர் ஜெயந்திக்கு கருணாநிதி தான் தமிழ்நாடு அரசு சார்பில் முதன்முதலில் அரசு விடுமுறை வழங்கினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் நிலைபெற்றுள்ள பழம்பெரும் சமயங்களில் ஒன்று ஜைனம் என்னும் சமண சமயம். சமண சமயத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீர் பிறந்த நன்னாளில் அவருடைய கொள்கைகளைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் சமண சமய மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை கூறி மகிழ்கிறேன்.

    அரச குடும்பத்தில் பிறந்த மகாவீர் செல்வச் செழிப்பை வெறுத்து, ஏழை-எளியோரின் வாழ்க்கை சூழ்நிலைகளை உணர்ந்து அவர்கள் மேம்பாட்டிற்காகச் சிந்தித்தவர். உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம், கொல்லாமை முதலான அறச்சிந்தனைகளை விதைத்து வளர்த்த வர்த்தமான மகாவீர் பிறந்த நாளைத் தமிழ்நாட்டில் வாழும் சமண சமய மக்கள் சிறப்பாகக் கொண்டாடி மகிழும் வகையில் மகாவீர் ஜெயந்திக்கு கருணாநிதி தான் தமிழ்நாடு அரசு சார்பில் முதன்முதலில் அரசு விடுமுறை வழங்கினார்.

    சமண சமயச் சான்றோர்கள் தமிழ்மொழியில் பல்வேறு இலக்கிய, இலக்கண நூல்களை இயற்றி தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அதன் செழுமைக்கும் சிறந்த முறையில் பங்களித்துள்ளார்கள் என்பது பெருமைக்குரிய செய்தி.

    உயிர்களிடத்து அன்பு செலுத்தி, இல்லாதவர்களுக்கு உதவிகள் செய்து வாழவேண்டும் என்னும் மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிறுத்தி மகாவீர் ஜெயந்தியினைக் கொண்டாடும் சமண சமய மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் கூறி மகிழ்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘பயோமெட்ரிக்’ தரவுகளையும், புகைப்படங்களையும் மூன்றாவது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது.
    • மோசடியினால் பாதிக்கப்பட்டால் ‘1930’ என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    சென்னை:

    மாநில சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    'ஜிப்லி' செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் 'ஜிப்லி' கலையில் இருக்கும் ஆபத்து குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. 'ஜிப்லி' வரைகலை புகைப்படங்களை வழங்குவதற்கு இப்போது பல்வேறு செல்போன் செயலிகள் உள்ளன. இவற்றில் அங்கீகாரம் இல்லாத செயலிகளும் உள்ளன.

    ஆனால், பொதுமக்கள், அறியாமையினால் அங்கீகாரம் இல்லாத செயலிகளிலும் 'ஜிப்லி' அனிமேஷன் புகைப்படங்களை பெறுவதற்காக தங்களது 'பயோமெட்ரிக்' தரவுகளையும், புகைப்படங்களையும் வழங்குகின்றனர். இதன் மூலம் அங்கீகாரமற்ற செயலிகள், ஒருவரது 'பயோமெட்ரிக்' தரவுகளையும், புகைப்படங்களையும் மூன்றாவது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது.

    அங்கீகாரம் இல்லாத செயலிகள், ஒருவரது 'பயோமெட்ரிக்', புகைப்படங்களை விளம்பர நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்கும்போது, அவை 'டீப் பேக்கு'களில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. 'ஜிப்லி' அனிமேஷன் புகைப்படங்களை இலவசமாக வழங்கும் இணையதளம், செல்போன் செயலிகளுக்குள் ஒருவர் செல்லும்போது, அவரது கைப்பேசியும், கணினியும் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவதற்கும், அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடும் வாய்ப்பும் இருக்கிறது.

    எனவே இப்படிப்பட்ட இணையத்தளங்களையும், செயலிகளையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க, அங்கீகாரம் இல்லாத செயலிகள், இணையத்தளங்களில் இருந்து வால் பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் உள்ளிட்ட எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

    பரிவர்த்தனை, சுய விவரங்களை பதிவிடும் முன்பு சம்பந்தப்பட்ட இணையத்தளத்தின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற மோசடியினால் பாதிக்கப்பட்டால் '1930' என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை விமான நிலையத்துக்கு இரவு வரும் அவர் அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார்.
    • முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அந்த பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர் டெல்லியில் முகாமிட்டு, பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருவது அதற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்.

    சென்னை விமான நிலையத்துக்கு இரவு 10.15 மணிக்கு வரும் அவர் அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளதால் நிர்வாகிகளை சென்னையில் இருக்குமாறு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாளை தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து மாநில தலைவர் நியமனம் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    தெலுங்கானா முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தனின் மறைவுக்கு, சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு நேரில் சென்று அமித்ஷா ஆறுதல் கூற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2 நாள் பயணத்தில் எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது அவர் செல்வார் என்று தெரிகிறது.

    • இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
    • இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.

    அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×