என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுவன் ஓட்டிய கார் மோதி விபத்து - காயமடைந்த முதியவர் உயிரிழப்பு
- கார் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவர் மீது மோதியதுடன் அங்கு சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் மரத்தின் மீது மோதி நின்றது.
- சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை மீது 3 பிரிவில் வழக்குப்பதிந்துள்ள காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர்.
வடபழனி:
வடபழனியை சேர்ந்தவர் சியாம் (வயது 45). இவர் கடந்த 8-ந்தேதி இரவு தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து அனுப்பி தெருவில் நிறுத்தி வைத்துள்ள கார் மீது கவரை மூடி விட்டு வருமாறு அனுப்பி உள்ளார்.
அந்த சிறுவன் காரை ஓட்டும் ஆசையில் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் பிரதான சாலை வழியாக காரில் வலம் வந்துள்ளான். அப்போது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவர் மீது மோதியதுடன் அங்கு சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் மரத்தின் மீது மோதி நின்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாரணையில் காயமடைந்தவர்கள் சாலிகிராமம், தனலட்சுமி காலனி, வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்த மகாலிங்கம் (69), கங்காதரன் (49) என தெரியவந்தது. இதையடுத்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் சிறுவன் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் படுகாயம் அடைந்த முதியவர் உயிரிழந்தார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த தந்தை மீது 3 பிரிவில் வழக்குப்பதிந்துள்ள காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர்.






