என் மலர்
சென்னை
- தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16 மற்றும் 17-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய்;
- அன்னையர் அனைவருக்கும் "அன்னையர் தினம்" வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை :
அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை அழகாய்; அர்த்தமாய் மாற்றிடும் உயிரும் மெய்யுமான ஒப்பற்ற அன்னையின் மகத்துவத்தை போற்றுவதோடு
உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி உலகத்தை உனதென தந்த உன்னத அன்னையர் அனைவருக்கும் "அன்னையர் தினம்" வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
- நமது பண்பாட்டையும், அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு வழிவகுக்கட்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாமல்லபுரத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தவிருக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
நமது பண்பாட்டையும், அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு வழிவகுக்கட்டும் எனப் பெருமதிப்பிற்குரிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்கும், மாநாட்டுக் குழுத்தலைவர் எனது அன்பிற்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று கூறியுள்ளார்.
- ஒத்திகையின் போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
- ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 7-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், ஆகிய இடங்களில் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகையின் போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் அடுத்த வாரத்தில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும். இப்பயிற்சியின் தொடக்கமாக முழு ஒத்திகைக்கான தயாரிப்புகள், கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்படும்.
பின்னர், வாரத்தின் இரண்டாவது பாதியில், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஒத்திகை பயிற்சி நேரடியாக நிகழ்த்தப்படும். இந்த ஒத்திகை பயிற்சியினை மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.
இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும்.
இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற நாம் தமிழர் கட்சி சார்பாக நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மக்கள் நலக் கோரிக்கைகள் வெல்லட்டும்!
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர் அரசியல் களத்தில் ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட முதன்மைக் கொள்கைகளோடு மதுஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் விளிம்பு நிலை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது உரிமைகளுக்காகவும், வன்னியர் குடி உள்பட ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் திருவள்ளுவராண்டு 2056 மேழம் (சித்திரை) 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (11.05.2025) நடைபெறுகிற, 21ஆவது சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற நாம் தமிழர் கட்சி சார்பாக நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் தாய் நிலத்தில் தமிழ்ப்பகைமை தலைத்தூக்காத வண்ணம் நல்லிணக்கத்தோடு தமிழ்ச் சமூகங்கள் தலை நிமிரவும், தமிழர் இன ஒற்றுமை தழைத்தோங்கவும் அயராது உழைக்கும் சமூகநீதிப்போராளி மருத்துவர் ஐயா ச.ராமதாஸ் அவர்களுக்கும், மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் பாட்டாளி உறவுகளுக்கும் என்னுடைய அன்பு வணக்கமும்! வாழ்த்துகளும்!
சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு சிறக்கட்டும்!
மக்கள் நலக் கோரிக்கைகள் வெல்லட்டும்! என்று கூறியுள்ளார்.
- தாயார் தயாளு அம்மாளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
- மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்த அன்னையர்.
சென்னை:
அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தாயார் தயாளு அம்மாளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளதாவது:-
மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
- அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்!
- தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
சென்னை:
அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்!
அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்!
தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
- நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
- மக்களவை தேர்தலில் மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.
பிறகு கடந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.
இந்த நிலையில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
அதன்படி, கலப்பையுடன் விவசாயி இருப்பது போன்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், "மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
- சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக அறிவித்தன.
இதற்கிடையே, இந்தியப் படைகளுக்கு ஆதரவாக சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றனர்.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது.
அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த வணக்கம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
- பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழலில், இந்தியப் படைகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பேரணி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
- பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கியது.
இந்த பேரணி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே வரை நடைபெறுகிறது.
இந்தப் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி பங்கேற்றுள்ளனர்.
பேரணி செல்லும் சாலையில் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படவுள்ளன.
அவர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 495 தலைப்புகளில் மொத்தம் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அவற்றில் 2.72 கோடி பாடப்புத்தகங்கள் மாணவா்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும்.
எஞ்சியுள்ள 1.47 கோடி பாடநூல்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 64 லட்சம் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.
அனைத்து மாவட்ட கிடங்குகளிலும் உள்ள பாடப் புத்தகங்கள் ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
இதையடுத்து கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது முதல் நாளே மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.






