என் மலர்tooltip icon

    சென்னை

    • 2 மாடிகள் கொண்ட துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்ததால் ரங்கநாதன் தெரு பரபரப்பாக காணப்பட்டது.
    • விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள பிரபல துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 மாடிகள் கொண்ட துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்ததால் ரங்கநாதன் தெரு பரபரப்பாக காணப்பட்டது.

    துணிக்கடையில் ஏற்பட்ட தீ பரவி மளமளவென எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகையாக காணப்பட்டது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தியாகராக நகர் பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    • பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக்கொண்டே கல்லூரி மாணவர்கள் தண்டவாளத்தை கடந்தனர்.
    • எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக்கொண்டே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நபூல் (20), சபீர் அகமது (20) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதுபவர்கள் செவிலியர்கள்.
    • அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    உலக செவிலியர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவர் முழு ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் சேவை புரிய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    அஇஅதிமுக பொதுச்செயலாளர், அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, எனது சார்பாகவும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தங்களது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    நாம் தமிழர் கட்சி சார்பாக நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் இறையோன் முருகப்பெருமானின் வழிபாட்டுத் திருவிழாவான தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அளித்தது, அழிவின் விளிம்பிலிருந்த காவிரிப் படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது, நீட் தேர்வு பாதிப்புகளிலிருந்து கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை ஓரளவாவது பாதுகாக்கும் வகையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • செவிலியர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், செவிலியர் தின நல்வாழ்த்துகள்.
    • ஆண் - பெண் வேறுபாடின்றி , சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர்கள்.

    செவிலியர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி, தளர்விலும் தன்னம்பிக்கை காட்டி, ஆண் - பெண் வேறுபாடின்றி, சேவை மட்டுமே முதன்மையாக கொண்டு தொண்டாற்றும் செவிலியர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், செவிலியர் தின நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.

    பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,045-க்கும், ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்ப்பதற்ற சூழல் காரணமாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.

    தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,045-க்கும், ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை ஒரு கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,880-க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,040-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    07-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    10-05-2025- ஒரு கிராம் ரூ.110

    09-05-2025- ஒரு கிராம் ரூ.110

    08-05-2025- ஒரு கிராம் ரூ.110

    07-05-2025- ஒரு கிராம் ரூ.111

    • பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அண்ணன் எடப்பாடி பழனிசாமி நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான, அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.
    • தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மாநாட்டில் என் சகோதரன் காடுவெட்டியார் இல்லையே என்பது வருத்தம்.

    காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.

    தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்துதான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது வன்னிய சமூகத்தினர் 140 நாடுகளிலே வாழ்கின்றனர்.

    வன்னியர்களின் வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை. நாகசாமி படையாட்சி, அஞ்சலை அம்மாள், ஐயா ஆனைமுத்து பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இடஒதுக்கீடு என்றாலே பாமக மற்றும் ராமதாஸ் பங்களிப்பபை மறக்க முடியாது.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க காதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

    பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு திமுக திரோகம் செய்கிறது. கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்.

    நல்ல கல்வியை கொடுத்தால் இளைஞர்கள் நல்ல வேலைக்கு போவார்கள். மதுவுக்கு ஏன் அடிமையாக போகிறார்கள்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • FIITJEE பயிற்சி மையம் மோசடியில் ஈடுபடுவதாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.
    • ரொக்கம், பல்வேறு ஆவணங்கள், அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள FIITJEE பயிற்சி மைதானத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

    FIITJEE பயிற்சி மையம் மோசடியில் ஈடுபடுவதாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    இதன் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    IIT மற்றும் JEE தேர்வுகளுக்கு வகுப்புகள் நடத்தும் FIITJEE பயிற்சி மையத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது, ரொக்கம், பல்வேறு ஆவணங்கள், அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அதாவது, சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 22 வங்கி காசோலைகள், கடிதங்கள் உள்பட 100 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    • தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வளசரவாக்கத்தில் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன்- மனைவி உயிரிழந்துள்ளனர்.

    தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீ்ட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதில், தம்பதி நடராஜன்- தங்கம் ஆகியோர் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. மேலும், பலத்த காயங்களுடன் ஸ்ரீராம் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருந்தது.

    காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூரில் 13ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வரும் 14, 15ம் தேதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×