என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழகத்திற்கு பயன்பட வேண்டிய தொடர்வண்டிப் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அநீதியானது.
    • தமிழகத்தில் தேவையான வழித்தடங்களில் புதிய வந்தேபாரத் தொடர்வண்டிகளை இயக்க தெற்கு தொடர்வண்டித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு தொடர்வண்டித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 வந்தே பாரத் தொடர் வண்டிகளுக்கான பெட்டிகளில் 9 தொடர் வண்டிகளுக்கான பெட்டிகள் ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பதாக தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    தமிழ்நாட்டில் வந்தே பாரத் தொடர்வண்டிகளை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டிய தேவை உள்ள நிலையில், தமிழகத்திற்கு பயன்பட வேண்டிய தொடர்வண்டிப் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது அநீதியானது.

    9 தொடர்வண்டிகளை இயக்குவதற்குத் தேவையான பெட்டிகளை தெற்கு தொடர்வண்டித்துறை பயன்படுத்தாமல் வைத்திருந்ததால் தான் அவை வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது என தொடர்வண்டித்துறை அதிகாரிகளே கூறுகின்றனர்.

    தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து பெங்களூரு, தூத்துக்குடி, தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் உள்ளிட்ட பல வழித்தடங்களில் வந்தே பாரத் தொடர் வண்டிகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓராண்டுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகின்றன.

    அந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு வசதியாக பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வந்தே பாரத் தொடர்வண்டிப் பெட்டிகளையோ அல்லது அவற்றுக்கு மாற்றாக புதிய தொடர்வண்டிப் பெட்டிகளையோ கேட்டுப்பெற்று தமிழகத்தில் தேவையான வழித்தடங்களில் புதிய வந்தேபாரத் தொடர்வண்டிகளை இயக்க தெற்கு தொடர்வண்டித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
    • தி.மு.க. தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சட்டம்-ஒழுங்கு சீரழிவு, போதைப் பொருட்கள் நடமாட்டம், மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கிய தி.மு.க., கடன் பெறுவதிலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தொடர்ந்து முதல் மாநிலமாக ஆக்கியிருப்பதாக பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் தி.மு.க. அரசின் கடந்த நான்காண்டு கால சாதனை.

    அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாய் கிடைத்தும், 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றும், அரசு ஊழியர்கள் அதிருப்தி, ஆசிரியர்கள் அதிருப்தி, சத்துணவு ஊழியர்கள் அதிருப்தி, அங்கன்வாடி ஊழியர்கள் அதிருப்தி, மருத்துவர்கள் அதிருப்தி, செவிலியர்கள் அதிருப்தி, வணிகர்கள் அதிருப்தி, குறு சிறு தொழிலதிபர்கள் அதிருப்தி, தொழில்முனைவோர் அதிருப்தி, பொதுமக்கள் அதிருப்தி, தொழிலாளர்கள் அதிருப்தி, விவசாயிகள் அதிருப்தி என அனைத்துத்தரப்பு மக்களும் அதிருப்தியில் உறைந்து போயுள்ளனர். தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க., தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தகுதி வாய்ந்த சில குடும்பத் தலைவிகள் இன்னும் இதில் இணையாமல் உள்ளனர்.
    • அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட சிலர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட் டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி யன்று அவரவர் வங்கிக் கணக்கில் இந்த உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த சில குடும்பத் தலைவிகள் இன்னும் இதில் இணையாமல் உள்ளனர்.

    இதுவரை மூன்று கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு தகுதி வாய்ந்த பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், தகுதி பெறாதவர்களை கண்டறிந்து அதில் சிலரை நீக்கமும் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் மாதம் ரூ.1000 கிடைக்காத பெண்கள், எங்களுக்கும் மாதம் ரூ.1000 வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.

    இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூன் மாதம் 4-ந்தேதி (அடுத்த மாதம்) மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் விடுபட்ட பெண்கள் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக இத்திட்டத்தில் பணியாற்றிய தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் எங்கெங்கு நடத்த வேண்டும் என்ற விவரங்களும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் தற்போது குதூகலத்தில் உள்ளனர்.

    ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் இணையலாம்.

    அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட சிலர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை.

    சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
    • தவறு செய்யும் நபர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும்.

    பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து உள்ளார்.

    கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்கள் 12 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

    * பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

    * மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    * தவறு செய்யும் நபர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் தீர்ப்பு அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நேற்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் தங்கம் விலை குறைந்தது.
    • வெள்ளி விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. மே 1-ந்தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்ந்து அதிகரித்து, மே 5-ந்தேதி சவரன் ரூ.71 ஆயிரத்து 200-க்கும், மே 6-ந்தேதி சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. மே 8-ந்தேதி, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதன்பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 45-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 360-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுகிழமை) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனையானது.

    இதற்கிடையே தங்கத்தின் விலை நேற்று மேலும் சரிந்தது. நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.165-ம், ஒரு சவரன் ரூ.1,320-ம் குறைந்து முறையே, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 880-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.

    திடீரென, மாலையிலும் தங்கம் விலை 2-வது முறையாக குறைந்தது. காலை நேர விற்பனையை காட்டிலும் மாலையில் கிராம் ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்தது. நேற்று, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் தங்கம் விலை குறைந்தது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,765-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,120-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    10-05-2025- ஒரு கிராம் ரூ.110

    09-05-2025- ஒரு கிராம் ரூ.110

    08-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் சாமிநாதன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • அமைச்சர் சாமிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் சாமிநாதன் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் அமைச்சர் சாமிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக பலத்த சேதங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • வழிகாட்டுதல்கள் தலைமையிலிருந்து தொடர்ந்து வழங்கப்படும்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உலக அமைதிக்கு எதிராகச் செயல்பட்டும் தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடாரமாகவும் அடைக்கல பூமியாகவும், தொடர்ந்து ஊக்கமளித்த பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு இறுதி முடிவுகட்டும்வகையில் நம் இந்தியா தேசம் தீவிரத்தாக்குதல் நடத்தியுள்ளது.

    கோழைகளைப் போல ராணுவ உடையில் வந்தது. அப்பாவிப் பொதுமக்களை பஹல்காமில் கொன்ற கொலைகார்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் தீவிரவாத பயிற்சிக்கூடங்களுக்கும். பாதுகாப்பு மையங்களுக்கும். நமது ஆயுதப்படைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக பலத்த சேதங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    வீரத்துடனும், விவேகத்துடனும் வித்தகத்துடனும் வேகத்துடனும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய நமது ஆயுதப்படைகளையும் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில் அடுத்த சில நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்திட செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த யாத்திரைகள் நாட்டிற்காக நாட்டு மக்களால் நான்கு கட்டங்களாக நடைபெறும்.

    1. மாநிலத் தலைநகரம் சென்னையில் மே 14-ஆம் தேதியும்

    2. இதர முக்கிய நகரங்களில் மே 15ஆம் தேதியும்

    3. மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16 மற்றும் 17-ஆம் தேதியும்

    4. சட்டசபைத் தொகுதிகள் தாலுகாவின் ஊர்கள் பெரிய கிராமங்கள் ஆகிய இடங்களில் மே 18 முதல் 23-ஆம் தேதி வரையும் நம் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்த ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான வழிகாட்டுதல்கள் தலைமையிலிருந்து தொடர்ந்து வழங்கப்படும். நம் வீரர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் நம் நாட்டின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் தயவுசெய்து பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நம் நாட்டு மக்களின் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பெரிய அளவில் யாத்திரைகளை ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது.
    • வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர்.

    பா.ம.க. சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றிகரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பது தான் புதிய மைல்கல் ஆகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வானிலிருந்து பார்த்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒருபுறத்தில் ததும்பி வழிந்து கொண்டிருந்த மனிதக்கடலுடன் ஒப்பிட்டால் வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர்.

    15 லட்சத்துக்கும் கூடுதலான பாட்டாளி சொந்தங்கள் மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த நிலையில், நெரிசல் காரணமாக மாமல்லபுரத்தை நெருங்க முடியாமல் செங்கல்பட்டுக்கு அப்பாலும் பல்லாயிரக்கணக்கான ஊர்திகள் அணிவகுத்துக் காத்திருந்தன. லட்சக் கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தாலும் கூட எந்தவொரு இடத்திலும் சிறு ஒழுங்குமீறல்கள் கூட நடைபெறவில்லை.

    இராணுவத்தையே விஞ்சும் அளவுக்கு பாட்டாளி சொந்தங்கள் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் மாநாட்டிற்கு வந்து, பத்திரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றிருப்பது மாநாட்டுக்குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கு மிகுந்த பெருமையும், நிம்மதியும் அளிக்கிறது.

    மாமல்லபுரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும், மாநாட்டுக் குழுத் தலைவராக என்னை நியமித்ததற்காகவும், மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்ததற்காகவும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாட்டாளி சொந்தங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மிகக் கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், குறிப்பாக மாவட்ட செயலாளர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    களத்தில் மாநாட்டுப் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து, கடந்த 20 நாள்களாக இரவு, பகல் பாராமல் உழைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    அவருக்குத் துணையாக களத்தில் நின்று பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், சேலம் கார்த்தி மற்றும் வைத்தி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை உள்ளிட்ட அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆந்திர மாநிலத்திலிருந்து இந்த மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் கொல்லு ரவீந்திரா, வன்னியகுல ஷத்திரிய கார்ப்பரேசனின் தலைவர் சி.ஆர்.இராஜன், கர்நாடகத்திலிருந்து பங்கேற்ற முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மராட்டியம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும், மலேஷியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து பங்கேற்ற அனைத்து சொந்தங்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அலை அலையாய் திரண்டு வந்து மாநாட்டைச் சிறப்பித்த பாட்டாளி சொந்தங்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்.

    மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டின் முதன்மை நோக்கம் சமூகநீதி தான். அதை வலியுறுத்தி தான் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்;

    அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; அதேபோன்று அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2% உயர்த்த வேண்டும்; இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும்;

    மேலும் தனியார் துறை மற்றும் உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் நிதி அதிகாரம் கொண்ட வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்; மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும்;

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; வளர்ச்சிக் குறியீடுகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

    தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கான முழக்கங்கள் இந்த மாநாட்டில் எழுப்பப்பட்டுள்ளன.

    ஏழரை கோடி மக்களின் இந்த உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொண்டு அதனடிப்படையில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஆணையிட வேண்டும்.

    அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதுடன், வன்னியர்களுக்கும், மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

    பட்டியலின மக்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2% உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    அதேபோல், கல்வி, வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு மற்றும் கிரீமிலேயரை அகற்றுதல், தனியார்துறை மற்றும் உயர்நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது.
    • விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுகு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம்

    அந்த வகையில், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை டெண்டர் கோரியுள்ளது.

    டெண்டர் இறுதியானதும் ஜூலை மாத இறுதியில் வேட்டி,சேலை உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    • பள்ளியின் முத்திரை இல்லாத சான்றிதழ் செல்லாது.
    • அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகிக்கப்படுகிறது.

    சென்னை:

    பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவ-மாணவிகள் உயர்படிப்பில் சேருவதற்கு வசதியாக தற்காலிக மதிப் பெண் சான்றிதழ் இன்று (12-ந்தேதி) வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.

    அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மேல் நிலைப்பள்ளிகளிலும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தேர்வுத் துறை இணைய தளத்தின் வழியாக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தர். என்ஜினீயரிங், கலை அறிவியல், வேளாண்மை, மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. அதனால் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க மதிப்பெண் சான்றிதழ் அவசியமாகிறது. உயர்படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 மதிப்பெண் கல்வி தகுதியாக இருப்பதால் மதிப்பெண் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளனர். இதனால் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தற்காலிக சான்றிதழ் பெற குவிந்தனர். மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்திரையிடப்பட்டு அவர் கையொப்பமிட வேண்டும். பள்ளியின் முத்திரை இல்லாத சான்றிதழ் செல்லாது. அதனால் அந்த பணியில் அனைத்து பள்ளி அலுவலகங்களும் ஈடுபட்டன. பகல் 1 மணிக்கு மேல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகிக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டன. தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்கள் பிளஸ் 2 சான்றிதழ் வாங்குவதற்கு வரிசையில் காத்து நின்றனர்.

    • தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை துவங்கக்கூடும்.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் நாளை மறுநாள் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 17, 18 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    12-05-2025 முதல் 14-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்கள், தனித் தேர்வர்க்ள தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    • நகல் பெற்றதும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டன. தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. அவற்றை மாணவர்கள், தனித் தேர்வர்க்ள தேர்வுத்துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இது தவிர விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ-மாணவிகள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

    இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கு ரூ.275 செலுத்த வேண்டும். நகல் பெற்றதும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது.

    ×