என் மலர்tooltip icon

    சென்னை

    • அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல நாடுகளில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதுகுறித்தும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும் சர்வதேச நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க, அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

    இதில், தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர், உலக நாடுகளுக்கு சென்று, பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தி வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் ஸ்பெயின் சென்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியதாவது:

    * ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல், சூடான விவாதங்கள் இருந்தாலும் நாட்டிற்காக ஒன்றாக நிற்போம்.

    * பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இந்தியாவின் குரலாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தோம்.

    * ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல நாடுகளில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

    * பயங்கரவாத தாக்குதலால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.
    • வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    சென்னை:

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததன் மூலம் சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.

    மேலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில், 37 மாற்றுத்திறனாளிகளும் வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • வள்ளுவர் நகர் முழு பகுதி, ஜெயா நகர் முழு பகுதி மற்றும் விவேகானந்தா நகர் முழு பகுதி.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (04.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    சிட்லபாக்கம்: TNHB காலணி, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, வள்ளுவர் நகர் முழு பகுதி, ஜெயா நகர் முழு பகுதி மற்றும் விவேகானந்தா நகர் முழு பகுதி.

    மாம்பாக்கம்: சாந்தி நிகேதன் காலணி, தம்பையா ரெட்டி காலணி, பார்வதி நகர் (வடக்கு), காமட்சி நகர், பாலாஜி நகர், கற்பகம் நகர், ஏபிஎன் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், சீனிவாசா நகர், ரமணா நகர், மாருதி நகர் மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
    • முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!

    சென்னை:

    கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!

    முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள்!

    ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்! என கூறியுள்ளார்.



    • தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்!
    • களம்2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!

    மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பொதுக்குழுவா கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது. திமுகபொதுக்குழு2025!

    கலைஞர்102-ஐ செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்!

    தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! களம்2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
    • தனது ஆட்சியின் இறுதிக் காலத்திலாவது நிறைவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லையா?

    காலி ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாது, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்து, மாணவர்களையும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களையும் வஞ்சித்துவிட்டு, "பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் இது" என்று பெருமை பேசும் திமுக அரசுக்கு தக்க பதிலடியை வரும் 2026-ல் மக்கள் கொடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    தமிழகத்தில் காலியாக உள்ள 6,553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு ஆணையம் (TRB) கடந்த 2023-2024 ஆம் ஆண்டு தேர்வு நடத்தியது.

    அதில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி காத்துக் கிடக்கிறார்கள் என்பதையும் 'ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் வாக்குறுதி எண் 177-இன் படி அவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதையும் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பே தமிழக பாஜக சார்பாக நான் சுட்டிக் காட்டி இருந்தேன்.

    ஆக, அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடமும் அதற்கு தகுதியான ஆசிரியர்களும் தயாராக உள்ள நிலையில் அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் அரசுக்கு என்ன சிக்கல்? மாணவர்களின் எதிர்காலம் மீதும், ஆசிரியர்களின் நல்வாழ்வு மீதும் துளியும் அக்கறையில்லாமல், தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிப்பது தான் ஒரு நல்ல நிர்வாகத்திற்கான அழகா?

    ஒருவேளை ஒரு போஸ்டிங் போடுவதற்கு இத்தனை லட்சம் ரூபாய் வேண்டும் என இதிலும் ஊழல் நடத்தத் திட்டமா? 50 வயதைக் கடந்து அரசு ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளை தனது ஆட்சியின் இறுதிக் காலத்திலாவது நிறைவேற்ற தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமில்லையா?

    இவ்வாறு ஆசிரியர்களின் கோரிக்கைகளையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் ஆளும் அறிவாலய அரசு அதற்கான விளைவுகளை வரும் சட்டமன்ற தேர்தல் 2026-இல் அறுவடை செய்யும்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
    • அனைத்து பாலியல் வழக்குகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் பொறியியல் மாணலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒட்டுமொத்தமாக 90,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

    மேற்படி வழக்கில் ஐந்தே மாதத்தில் குற்றவாளிக்கு எப்படி தண்டனை பெற்றுக் தரப்பட்டதோ, அதே போன்று அனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைந்து தண்டனையை பெற்றுத் தரும்பட்சத்தில், பாலியல் வன்கொடுமைகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கும் சூழ்நிலை உருவாகும்.

    எனவே, அனைத்து பாலியல் வழக்குகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வழியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    • மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
    • ஆயுள் தண்டனை விதித்திருக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மனமுவந்து வரவேற்கிறேன்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.

    மேலும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், தீர்ப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு, தண்டனைக் குறைப்பின்றி 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மனமுவந்து வரவேற்கிறேன்.

    பெண்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளவோ சமரசம் செய்துகொள்ளவோ முடியாது. அத்தகைய குற்றங்களுக்கு அஞ்சும் வகையிலான தண்டனை தரப்படும் என்னும் நம்பிக்கையை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மெட்ரோ ரெயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது.
    • பூந்தமல்லி-பரந்தூர் வரையில் பெரும்பாலும் உயர்மட்ட பாதைகளாக அமைக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்ரோ ரெயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது.

    மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் 21.76 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிக்கப்பட்டது.

    இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனையுடன் முடியும் திட்டத்தில், பரந்தூர் (விமான நிலையம் அமையவுள்ளது) வரையில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டது.

    இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    பூந்தமல்லி-பரந்தூர் வரையில் பெரும்பாலும் உயர்மட்ட பாதைகளாக அமைக்கவே முடிவு செய்யப்பட்டு அதற்கான கள ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான 52.94 கி.மீ தூர மெட்ரோ ரயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை 27 கி.மீ. தூரத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது.

    • காலையில் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்தது.
    • மாலையில் தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்தது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,950-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனையாகிறது.

    இந்நிலையில் இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி மாலையில் ரூ.880 கூடுதலாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.72.480-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.1120 உயர்ந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    31-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    30-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

    29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,160

    28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    01-06-2025- ஒரு கிராம் ரூ.111

    31-05-2025- ஒரு கிராம் ரூ.111

    30-05-2025- ஒரு கிராம் ரூ.111

    29-05-2025- ஒரு கிராம் ரூ.111

    28-05-2025- ஒரு கிராம் ரூ.111

    • பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்.
    • குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது.

    தமிழகத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ள தூய்மை மிஷன்-ல் அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது!

    யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்.

    வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது.

    விரைவில் தொடங்கப்படவுள்ள #தூய்மை_Mission-இல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பிக்கிறார்.
    • பட்டிமன்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா நாளை சிறப்பாக நடைபெற உள்ளது.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.30 மணியளவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்கு அமைந்துள்ள கருணாநிதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்குகிறார். கோபாலபுரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

    முரசொலி அலுவலகம் சென்றும் கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

    இதன் பிறகு கலைவாணர் அரங்கில் காலை 10.15 மணிக்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று செம்மொழி நாள் விழாவை தொடங்கி வைக்கிறார்.

    குறிப்பாக கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பிக்கிறார்.

    இந்த விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய நூல்களை வெளியிடுதல், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகை ஒப்பளிப்பு ஆணை வழங்குதல்,

    போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவதுடன் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இது தவிர அங்கு பட்டிமன்றத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.

    ×