என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
    • தமிழ்நாட்டில் எங்கும், எப்போதும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

    மதுரையில் அமித்ஷா தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வடகிழக்கு மாநிலங்களில் மனிதர்கள் துப்பாக்கியை விட்டுவிட்டு, அஹிம்சை முறையில் ஜனநாயகத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது அமித்ஷா செய்துள்ள சாதனை.

    தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது திமுக. முதியோர்கள் கொலை, சாதிய கொலை, கூலிப்படை கொலை என மக்கள் எங்கும் நிம்மதியாக இல்லை.

    தமிழ்நாட்டில் எங்கும், எப்போதும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியை அகற்றவே அமித் ஷா வருகை தந்துள்ளார்.

    உலகில் மிக வேகமாக வறுமையை ஒழித்த நாடு இந்தியா. அதை செய்தவர் பிரதமர் மோடி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
    • பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.

    இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:-

    இந்தியாவில் நடைபெற்ற பசுமை புரட்சி, விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து விவசாயிகள் ரசாயனம் கலந்த உரங்களை தவிர்த்து, இயற்கை முறைக்கு மாற தொடங்கினர். இதனால், உணவு உற்பத்தி அதிகரித்து நாடு முழுவதும் இயற்கை வளம் செழித்தது.

    இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுகள் நமக்கு மட்டுமின்றி, மற்ற நாடுகளின் பசியையும் போக்குகின்றன. எனவே நாம் விவசாயிகளை மறந்து விடக்கூடாது.

    நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன்தான். உயர்கல்வி படிக்கும்போது விவசாயம் செய்து உள்ளேன். எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை முறைக்கு மாற வேண்டும்.

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் சிறந்த முதுகலை ஆராய்ச்சி விருதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

    சிறந்த வேளாண் விஞ்ஞானியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான மறைந்த டாக்டர் ஜி.நம்மாழ்வாரின் நீடித்த பாரம்பரியத்தையும், இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் அவரது முன்னோடி பணிகளையும் முன்னெடுத்து செல்வத ற்காக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.

    இந்த விருது இயற்கை வேளாண்மையை முன்னேற்ற ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்தியாவின் நிலையான விவசாய முன்னேற்றத்தையும், உலகளாவிய இயற்கை வேளாண்மைத்துறையில் அதன் வளர்ந்து வரும் இருப்பையும் ஆதரிக்கிறது.

    இந்த விருது ஆண்டுதோறும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் இயற்கை வேளாண்மையில் சிறந்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

    இந்த விருது ரூ.50 ஆயிரம், தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்யில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்தது.
    • 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்தது. சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இதைதொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.
    • உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா?

    மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்றும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதம் அளிக்க தயாரா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க., எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும்.

    அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

    ஒன்றிய பாஜக அரசின் இந்த சதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதனால் பாதிக்கப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் அணிதிரட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

    அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார் எனக் கூறி வந்தவர்களின் குட்டு இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு கிடக்கிறது. இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து.

    இப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்ல போகிறார். தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.

    மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா? பதில் சொல்லுங்கள் அமித்ஷா அவர்களே!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், வானகரம், போரூர், ஐயப்பந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    மேலும், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காஞ்சிப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சேலம், தருமபுரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் வெயிலுக்காக சாலையில் போக்குவரத்து காவல்துறையால் அமைக்கப்பட்ட பந்தல் மலைக்காற்றில் சரிந்தது. இதனால், ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 மாநகராட்சிகள் ரூ.10,639.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
    • 28 புதிய பஸ் நிலையங்கள் ரூ.279.92 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு 3 பஸ் நிலையங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் நிறைவேற்றி வரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீர்த் திட்டங்கள் முதலான பல அடிப்படை வசதிகள் காரணமாக தமிழ்நாடு விரைந்து நகர்மயமாகி வருகிறது. ஊராட்சிகள் பேரூராட்சிகளாவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் வளர்ச்சி பெறுகின்றன.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், நமக்கு நாமே திட்டத்தில், ரூ.582 கோடி ஒதுக்கீட்டிலும், பொதுமக்கள் பங்களிப்பு 183.56 கோடியும் சேர்ந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

    நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி பெறப்பட்டு இதுவரை 2,04,860 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு 12,71,006 மனித நாட்கள் பெறப்பட்டுள்ளது.

    திடக்கழிவு மேலாண்மைக்கான செயல் திட்டத்தின் கீழ், 42,225 தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள் 545 பொது கழிப்பறைகள், 614 சிறுநீர் கழிக்கும் இடங்கள், 154 நுண் உரக்கூடங்கள் 561 பொருள் மீட்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

    நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இதுவரை அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 3 கட்டங்களில் ரூ.6,655.80 கோடி மதிப்பீட்டில் 446 பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர்ப் பணிகள், பூங்கா மேம்பாடு மற்றும் நீர் நிலைகள் புனரமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 மாநகராட்சிகள் ரூ.10,639.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன

    உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின்கீழ், 28 புதிய பஸ் நிலையப் பணிகள் ரூ.968.08 கோடி திட்ட மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு திருச்சி, நாமக்கல் மாநகராட்சிகள், சங்கரன் கோவில், குளச்சல், கூடலூர் (தேனி) நகராட்சி பஸ் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. எஞ்சிய 23 பஸ்நிலையங்களின் பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளன.

    கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ், 28 புதிய பஸ் நிலையங்கள் ரூ.279.92 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு 3 பஸ் நிலையங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பொன்னேரி, குன்றத்தூர், மானாமதுரை, மதுக்கரை, புகழூர், களக்காடு, சுரண்டை நகராட்சிகளில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.10.46 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, வணிக வளாகக் கட்டடம், சமுதாய நலக்கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்படுகின்றன.

    அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 14 மாநகராட்சிகளில் ரூ.3,360.64 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

    23 மாநகராட்சிகள் மற்றும் 112 நகராட்சிகளில் விடுபட்ட பகுதிகளில் 3,65,555 எண்ணிக்கையிலான தெருவிளக்கு கள் மற்றும் புதிதாக 1,11,327 LED தெரு விளக்குகளும் ரூ.577.28 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு 98 சதவீதப் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.196.56 கோடி மதிப்பீட்டில் 100 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் கட்டுவதற்கு அனுமதித்து; முதற்கட்டமாக 71 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை 5.01.2024 அன்று திறந்து வைத்தார். அவற்றுடன் தற்போது 93 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எஞ்சிய 7 மையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த மையங்கள் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு ஆர்வலர்களின் திறன்களை மேம்படுத்தவும், பொது மக்களுக்கு அறிவுசார் தகவல்கள் கிடைக்கவும் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதன் மூலம் அறிவுத் திறனை வளர்ப்பதற்கும் நுழைவு வாயில்களாகத் திகழ்கின்றன.

    மாநகராட்சிகளில் ரூ.102.30 கோடியில் 231 புதிய வகுப்பறைகளும், நகராட்சிகளில் ரூ.118.80 கோடியில் 281 புதிய வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 176 பணிகள் முடிவடைந்து மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மொத்தம் 905 வகுப்பறைகள் ரூ. 132.66 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    மழைநீர் வடிகால்கள் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு 109.094 கி.மீ. நீளத்திற்கு ரூ.270.83 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன.

    மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரிந்து இயற்கை எய்திய பணியாளர்களின் 1,423 வாரிசுகளுக்கும், பேரூராட்சிகளில் 124 வாரிசுகளுக்கும், சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 105 பணியாளர்களின் வாரிசுகளுக்கும் ஆக மொத்தம் 1652 வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    24 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்பட்டு; மாநகராட்சிகளில் இதுவரை பெறப்பட்ட 10,283 மனுக்களில் 99.97 சதவீதம் மனுக்களுக்கும், நகராட்சிகளில் பெறப்பட்ட 34,385 மனுக்களில் 99.91 சதவீதம் மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் மாநகராட்சிகளில் இதுவரை பெறப்பட்ட 46,241 மனுக்களில் 98.3 சதவீதம் மனுக்களுக்கும், நகராட்சிகளில் பெறப்பட்ட 85,464 மனுக்களில் 97.4 சதவீதம் மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 14,669 வீடுகள் கட்டப்படுகின்றன.

    அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.114.98 கோடி மதிப்பீட்டில் 663 பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

    சென்னைக் குடிநீர் வாரியத்தின் சார்பில், கடந்த 43 ஆண்டுகளில் முதல் முறையாக நாளொன்றுக்கு சராசரியாக 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விநியோகிக்கப்படுகிறது.

    வடகிழக்குப் பருவ மழையின்போது தேங்கியிருந்த மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கு 73 நீர் உறிஞ்சும் வாகனங்களும், கழிவுநீர்க் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைச் சரி செய்ய 191 ஜெட்ராடிங் எந்திரங்களும், 45 உறிஞ்சும் திறன் உடைய ஜெட்ராடிங் எந்திரங்களும், 299 தூர்வாரும் ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டு 2,000 களப்பணியாளர்களைக் கொண்டு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், மாத்தூர், ஜல்லடியான்பேட்டை, ஆலந்தூர், புழல், புத்தகரம், சூரப்பட்டு, கதிர்வேடு, வளசரவாக்கம் மண்டலம், ஆலந்தூர் மண்டலம், சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 584 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்ட பணிகளையும் மற்றும் 1043 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் & கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளையும் திறந்து வைத்தார். இத்திட்டங்களால் 40 லட்சத்து 3 ஆயிரம் குடிமக்கள் பயன் அடைந்துள்ளனர்.

    மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் அதனை சார்ந்த பணிகள் ரூ.1,516.82 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தினால் 9 லட்சம் குடிமக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

    துணை முதலமைச்சர் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பிலுள்ள 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு 400 மி.மீ. விட்டமுள்ள பிரத்தியேக நெகிழிரும்பு குடிநீர் குழாய் அமைக்கும் திட்டம்; அம்பத்தூர் மண்டலத்தில் படவேட்டம்மன் எஸ்டேட், சிவானந்தா நகர், எம். கே. பி. நகர், அன்னை சத்தியா நகர் பகுதிகளிலுள்ள விடுபட்ட தெருக்களுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் முதலியவற்றைத் தொடங்கி வைத்தார். 431 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களால் 19 இலட்சத்து 94 ஆயிரத்து 399 மக்கள் பயன்பெறுகின்றனர்.

    முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு 6.12.2024 அன்று 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கி அவர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்தினார்.

    4,198.91 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 6829 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடர்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    "முதல்வரின் முகவரி" திட்டத்தின்கீழ், 18.3.2025 வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 19,364 மனுக்களில் 18,131 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு; எஞ்சிய மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ், பெறப்பட்ட 1,173 மனுக்கள் மீது தீர்வுகள் காணப்பட்டு, பொது மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

    4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள், 10,565 ஊரகக் குடியிருப்புகளுக்கான 71 குடிநீர்த் திட்டங்கள் நாளொன்றுக்கு 751.56 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ரூ.9,011.45 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மூலம் 121.37 லட்சம் மக்கள் பயன் பெறுகின்றனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் இத்தகைய மாபெரும் திட்டங்களால் தமிழ்நாடு அதிவேகமாக நகரமாயமாகி இந்தியத் திருநாட்டில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி நிறைவேற்றித் தருவதில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இதர மாநிலங்களுக்கும் வழிகாட்டத்தக்கவையாக அமைந்து பத்திரிகைகளாலும், ஊடகங்களாலும் பாராட்டப்படுவதை நம்மால் அன்றாடம் காண முடிகிறது என்பதே உண்மையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டணி என்பது தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என யாருடனும் இருக்கலாம்.
    • விஜய் யாருடன் கூட்டணி என்பது பற்றி ஜோசியம் கூற எனக்கு தெரியாது.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தொண்டர்கள் எதிர்பார்த்த செய்தி விரைவில் வரும்.

    * விரைவில் நல்ல செய்தி வரும். தோட்டத்தில் இருந்து வருமா என்று தெரியாது. நல்ல செய்திக்காக காத்திருப்போம்.

    * அரசியலுக்கு வயது கிடையாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே. கலைஞர் கருணாநிதி நீண்ட நாள் 95 வயது வரை அரசியலில் இருந்தார்.

    * கூட்டணி எப்போது அமைப்பது, எப்படி அமைப்பது, ஏன் என்பது பற்றி 3 மாதங்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும்.

    * கூட்டணி என்பது தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என யாருடனும் இருக்கலாம்.

    * எல்லா தலைவர்களையும் நேசிப்பவன், பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர். அமித்ஷாவை நான் நேரில் சந்தித்தது இல்லை, இருப்பினும் அவருக்கு வாழ்த்துகள்.

    * விஜய் யாருடன் கூட்டணி என்பது பற்றி ஜோசியம் கூற எனக்கு தெரியாது.

    * சென்னையிலும் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தேன்.

    * முகுந்தன் மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் உறுதியாக கூற முடியாது.

    * பா.ம.க. மீண்டும் பலமாக வரும் என்றார். 

    • தமிழகத்தில் ஒரு பகுதிகளில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியல் இயல்பைவிட அதிகமாக பதிவாகும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகிற 10-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    11-ந்தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    தமிழகத்தில் ஒரு பகுதிகளில் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியல் இயல்பைவிட அதிகமாக பதிவாகும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகக்கூடும். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது.
    • டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    பெரும்பாலான பயணிகள் நீண்டதூர பயணத்துக்கு ரெயில் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். குறைந்த கட்டணம், பயணம் செய்வதில் கூடுதல் வசதி உள்ளிட்டவற்றால் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே சமீபகாலமாக ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகிறது. வழக்கமான முன்பதிவு டிக்கெட்டுகள் தொடங்கிய சில நாட்க ளிலேயே முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விடுகிறது.

    மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவிலும் பயணிகள் முன்பதிவு செய்வதற்கு முன்பே சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது. இடைத்தரகர்களின் குறுக்கீட்டால் உண்மையான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2½ கோடி போலி கணக்குகளை ரெயில்வே முடக்கியது. மேலும் டிக்கெட் முன்பதிவுக்கு இனி மேல் ஆதார் மூலம் ஓ.டி.பி. முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    இந்த நிலையில் ரெயில்வே தங்குமிடங்கள், பயணம் உள்ளிட்டவற்றிற்கு போலி ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகத்துக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.

    இதைத்தொடர்ந்து ஆள் மாறாட்டம், ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ரெயில்வே தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றில் ரெயில் டிக்கெட் சரிபார்ப்பு அலுவலர்கள் பயணிகளின் ஆதார் அட்டையை கவனமாக சரிபார்க்க ரெயில்வே அமைச்சம் உத்தரவிட்டு உள்ளது.

    பயணிகளின் ஆதார் அட்டையை "எம்ஆதார்" எனப்படும் ரியல்டைம் அப்ளிகேஷனை பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் வேண்டும், அடையாள அட்டை சரிபார்ப்பு வழிமுறையை வலுப்படுத்துவது அவசியம் என்று அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது ரெயில் பயணத்தின்போது டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் ஆதார் மட்டும் இன்றி ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம். இனிவரும் நாட்களில் ரெயில் பயணத்தின் போது ஆதார் அட்டை கட்டாயம் ஆகும் என்று தெரிகிறது.

    • அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
    • தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதற்கு தணிக்கைத் துறையின் தடைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. தேவையின்றி விதிக்கப்படும் தடைகளை உடனடியாக அகற்றி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். அதிலிருந்து தி.மு.க. அரசு ஒரு போதும் பின்வாங்கக்கூடாது. ஆசிரியர்களின் மன உளைச்சல் மற்றும் வேதனைகளுக்கும் அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தணிக்கைத் துறையால் போடப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர்.
    • கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது.

    சுபமுகூர்த்தம், விசேஷ நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.

    நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் நேற்று இரவும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கடந்த 4 நாட்களில் இயக்கப்பட்ட 11 ஆயிரத்து 26 அரசு பஸ்களில் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேர் பயணம் செய்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

    தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும். பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்கிட வழி வகை செய்யப்படும் என்றனர்.

    • சங்கிலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
    • விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    விருதுநகர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (வயது 45) த/பெ.மொக்கைச்சாமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×