என் மலர்tooltip icon

    சென்னை

    • காவலர்களை அனுப்பி மிரட்டும் செயலில் திமுக அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • எதிர்க்கட்சிகள் என்றால் மிரட்ட முனைவது சரியல்ல.

    புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதாக மிரட்டுவதா? சட்டம் - ஒழுங்கை காப்பதை விடுத்து அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன் மூர்த்தியை கைது செய்வதாகக் கூறி பூந்தமல்லி அருகில் உள்ள அவரது வீட்டிற்கு 500-க்கும் கூடுதலான காவலர்களை அனுப்பி மிரட்டும் செயலில் திமுக அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லை. இத்தகைய சூழலில் அவரை கைது செய்ய முயல்வதும், அதற்காக 500க்கும் மேற்பட்ட காவலர்களை அனுப்பியிருப்பதும் அப்பட்டமான அச்சுறுத்தல் தான்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் சட்டம் - ஒழுங்கு அத்துமீறல்கள் தடுக்கப்படவில்லை. பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் மீது வழக்கு தொடரும் படி உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் என்றால் மிரட்ட முனைவது சரியல்ல. இந்தப் போக்கை கைவிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குன்னூரில் உள்ள நகராட்சிக் கடைகளுக்கு வாடகை உயர்த்தப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.
    • நகராட்சிக் கடைகளுக்கு பலமடங்கு வாடகைகளை உயர்த்தியது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு.

    "குன்னூர் நகராட்சியில் மாநில அரசுக்கு சொந்தமான சுமார் 800 கடைகளை இடிக்கப்போவதாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. வியாபாரிகளுக்கு வழங்கிய மாற்று இடம் 1 கிலோ மீட்டர் தூரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் அமைந்துள்ளது. எனவே கடைகளை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட்டு பழைய இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல மடங்கு வீட்டு வரி, வணிக வளாகங்களுக்கான வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை அமல்படுத்தி தமிழக மக்களையும், வியாபாரிகளையும் வஞ்சித்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, தமிழகம்

    முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குச் சொந்தமான கடைகளின் வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

    நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில், நகராட்சிக்குச் சொந்தமாக சுமார் 800 கடைகள் உள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது பரப்புரை செய்ய வந்த அப்போதைய எதிர்க்கட்சித்

    தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. ஸ்டாலின், குன்னூரில் உள்ள நகராட்சிக் கடைகளுக்கு வாடகை உயர்த்தப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.

    ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எப்படி பொதுமக்களிடம் வாங்கிய புகார் பெட்டியின் சாவியை தொலைத்தாரோ, நான்காண்டுகள் முடிந்த நிலையில் சுமார் 20 சதவீத தேர்தல் வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லையோ, அதுபோல் குன்னூர் வியாபாரிகளுக்கு

    அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததோடு, 2 ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நகராட்சிக் கடைகளுக்கு பலமடங்கு வாடகைகளை உயர்த்தியது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு.

    'குதிரை கீழே தள்ளியது மட்டுமில்லாமல் குழியும் பறித்தது' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் பல மடங்கு வாடகையை உயர்த்தியது மட்டுமல்லாமல், தற்போது குன்னூர் நகராட்சியில் உள்ள சுமார் 800 கடைகளையும் இடிக்கப்போகிறோம், எனவே உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசு

    வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. நோட்டீஸ் வழங்கிய கையோடு நகராட்சி அதிகாரிகள் கடைகளை காலி செய்ய வியாபாரிகளை வற்புறுத்துகின்றனர்.

    குன்னூர் நகராட்சி வழங்கிய மாற்று இடம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இல்லாத இடத்தில். எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத நிலையில், சிறிய அளவுள்ள கடைகளாக உள்ளன. வியாபாரிகள் தற்போது வணிகம் செய்து வரும் கடைகளை உடனடியாக காலி செய்துவிட்டு அங்கே செல்ல வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

    பொதுவாக நீலகிரி மாவட்டம் முழுவதும், குறிப்பாக குன்னூரில் உள்ள வியாபாரிகள் கோடை சீசன் மாதங்களான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆப் சீசன் எனப்படும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய சீசன் மாதங்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    ஏற்கெனவே அரசு, போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது என்று தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த நிலையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவே நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால், வியாபாரம் பெருமளவு பாதித்த நிலையில், தற்பொழுது வியாபாரம் செய்து வரும் கடைகளும் இடிக்கப்பட உள்ளதாகவும், போதுமான கால அவகாசம் தராமல் உடனடியாக மாற்று இடங்களுக்குச் செல்ல அதிகாரிகள் வலியுறுத்துவதால், வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றனர்.

    இதனால் 800 வியாபாரிகளின் குடும்பங்களும், அக்கடைகளில் பணிபுரியும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பணியாட்களின் குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்படுவதுடன், மறைமுகமாக இவர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் நூற்றுக்கணக்கான

    கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, வியாபாரிகள் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட்டு, தொடர்ந்து வியாபாரிகளை பழைய இடங்களிலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    இல்லாவிடில் பாதிக்கப்பட்ட குன்னூர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, அப்பகுதி மக்களின் ஆதரவுடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் முன்னெடுக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
    • நிகழ்ச்சி முடிவில் மேடையில் நின்றவாறு தவெக தலைவர் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    மாணவர்களுக்கு த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெற்றது.

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இன்று 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில், தவெக சார்பில் 4 கட்டங்களாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றது.

    நிகழ்ச்சி முடிவில் மேடையில் நின்றவாறு தவெக தலைவர் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

    • ராஜினாமா செய்வதாக ஆயுதப்படை ஏடிஜிபி செயராமுக்கு அருண் கடிதம்.
    • கடந்த 2013ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்தார்.

    ஆயுதப்படை பிரிவில் 12வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றிய அருண் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    அருண் வெளிநாட்டிற்கு செல்வதால் ராஜினாமா செய்வதாக ஆயுதப்படை ஏடிஜிபி செயராமுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ராஜினாமா கடிதம் டிஜிபி சங்கர் ஜிவால் மூலம் உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணிக்கு சேர்ந்த அருண் 2024ல் எஸ்.பி., ஆனார்.

    • சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 41,094 பேர் எழுதினார்கள்.
    • சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.

    இதில், துணை கலெக்டர் பதவிக்கு 28 இடங்கள், போலீஸ் டி.எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 இடங்கள், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வன பாதுகாவலர் பதவிக்கு 2 காலியிடங்களுக்கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வை எழுத ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேரும், குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு இன்று நடந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகா மையங்கள் என 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 41,094 பேர் எழுதினார்கள். இதற்காக சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு எழுத வந்தவர்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை எடுத்து வந்து காண்பித்து தேர்வு எழுத சென்றனர்.

    தேர்வு எழுத வந்த மாணவர்கள் காலை 8.30 மணி முதல் தேர்வு எழுதும் மையங்களுக்கு வரத் தொடங்கினார்கள். தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்

    பட்டனர்.

    தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வு மையத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன. அதன் பிறகு வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மேலும், தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 987 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குரூப் 1 தேர்வு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் கூறியதாவது:-

    இன்று குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு எழுதியவர்கள் காலதாமதம் இன்றி முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வு எழுதியவர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வந்து விட்டனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த முறை மிகவும் எளிமைப்படுத்தபட்ட ஓ.எம்.ஆர். ஷீட் வழங்கப்பட்டு உள்ளது. குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் 2 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படும். மெயின் தேர்வு அதில் இருந்து 3 மாதங்களுக்குள் நடத்தப்படும்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 10,701 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இப்போது வரை 10,227 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இப்போது நடந்து வரும் தேர்வுகள், இனிமேல் நடைபெற உள்ள தேர்வுகள் மூலம் 12,231 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முத்தூர் முதல் தேவனகொந்தி வரை 290 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையின் ஓரமாக கியாஸ் பைப் லைன் பதிக்கப்பட்டுள்ளது.
    • சாலையோரம் கியாஸ் பைப் லைன் அமைக்க அரசாணை இருந்தும் நிறுவனம் விவசாய நிலத்திலேயே அமைக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தற்பொழுது ஐ.டி.பி.எல். பெட்ரோலிய நிறுவனம் விவசாய நிலத்தின் வழியே மீண்டும் கியாஸ் பைப் பதிக்கின்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது.

    இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில், இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோ மீட்டர் தூரம் மட்டும் விவசாய நிலங்களில் வழியாக பைப் லைன் அமைக்க முயற்சியை எடுக்கின்றன.

    முத்தூர் முதல் தேவனகொந்தி வரை 290 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையின் ஓரமாக கியாஸ் பைப் லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே கோவை மாவட்டம் இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டர் தூரத்திற்கும் சாலையோரம் கியாஸ் பைப் லைன் அமைக்க அரசாணை இருந்தும் நிறுவனம் விவசாய நிலத்திலேயே அமைக்க கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் இத்திட்டத்தை ஐ.டி.பி.எல்.நிறுவனம் கைவிட்டு மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோவை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஜூன் 17-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் பணி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
    • இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பணி ஒதுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்,

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவல் ஆளிநர்கள் தங்களது பேறுகால விடுப்பிற்கு பிறகு, குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.

    அதன்படி, 03.06.2025 வரை, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவல் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    • பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழ்பவர் அப்பா.
    • நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய தலைவர்களுக்கும் இந்நாளில் எனது வணக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

    தந்தையர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் கொள்கைத் தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அர்ப்பணிப்போடு பணியாற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
    • ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!

    ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். 'கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை' என அவர்களுக்கு உணர்த்துங்கள்.

    காலை உணவுத் திட்டம், #SmartClassrooms, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள்.

    'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்பதை உறுதிசெய்வோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
    • மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது கட்ட விழா இன்று நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    இந்த நிலையில் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள சேலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையாக த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

    அப்போது பேசிய விஜய், ராஜேஸ்வரி வீட்டில் மின்சாரம் கூட இல்லை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து உள்ளார். அவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை. கண்டிப்பாக ஆவீங்க. என்னுடைய wishes. all th best என்று கூறி அவருக்கு பேனாவை பரிசளித்தார்.

    இதைத்தொடர்ந்து பேசிய மாணவி ராஜேஷ்வரி, நான் எப்படி படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று எல்லோரும் பார்த்து இருப்பீங்க. நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு சந்தோஷமாக இருக்கு. நீங்களும் என்னை மாதிரி ஆக வேண்டும் என்றால் அதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டும்தான் அதை விட்டுறாதீங்க. all the best girls என்று கூறினார்.

    சாரை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. சார் எனக்கு cash கொடுத்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம். சாருக்கு ஒரு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.

    முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டி, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்கினார். மேலும், ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி உள்ளார்.

    • தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.
    • சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம்.

    சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஜாக்டோ ஜியோ சங்கத்தில் இடம் பெற்றுள்ள உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாயவன் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயவன், தமிழ்நாடு அரசு நான்கரை ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8 முறை சந்தித்துவிட்டோம். தமிழக அரசை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம்.

    எங்கள் சங்கத்தின் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விஜயிடம் தெரிவித்தோம். விஜய் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

    இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜயை கடந்த 13-ந்தேதி சந்தித்ததாக வெளியான செய்திக்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் விஜயை சந்தித்ததற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு அரசிடம் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம்.

    சில சங்கங்கள் தனித்துவமாக செயல்படுவதோடு தங்களோடு தொடர்புபடுத்த வேண்டாம். த.வெ.க. தலைவர் விஜயை தங்கள் அமைப்பினர் சந்திக்கவில்லை. உண்மைக்கு புறம்பான செய்தியை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ×