என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு: 2.27 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
- சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 41,094 பேர் எழுதினார்கள்.
- சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதில், துணை கலெக்டர் பதவிக்கு 28 இடங்கள், போலீஸ் டி.எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 இடங்கள், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வன பாதுகாவலர் பதவிக்கு 2 காலியிடங்களுக்கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வை எழுத ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேரும், குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு இன்று நடந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகா மையங்கள் என 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 41,094 பேர் எழுதினார்கள். இதற்காக சென்னையில் 170 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு எழுத வந்தவர்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை எடுத்து வந்து காண்பித்து தேர்வு எழுத சென்றனர்.
தேர்வு எழுத வந்த மாணவர்கள் காலை 8.30 மணி முதல் தேர்வு எழுதும் மையங்களுக்கு வரத் தொடங்கினார்கள். தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்
பட்டனர்.
தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வு மையத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன. அதன் பிறகு வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும், தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 987 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
குரூப் 1 தேர்வு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் கூறியதாவது:-
இன்று குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு எழுதியவர்கள் காலதாமதம் இன்றி முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வு எழுதியவர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வந்து விட்டனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறை மிகவும் எளிமைப்படுத்தபட்ட ஓ.எம்.ஆர். ஷீட் வழங்கப்பட்டு உள்ளது. குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் 2 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படும். மெயின் தேர்வு அதில் இருந்து 3 மாதங்களுக்குள் நடத்தப்படும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு 10,701 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இப்போது வரை 10,227 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இப்போது நடந்து வரும் தேர்வுகள், இனிமேல் நடைபெற உள்ள தேர்வுகள் மூலம் 12,231 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






