என் மலர்tooltip icon

    சென்னை

    • ‘நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்’ என எக்ஸ் பக்கத்தில் வந்து ஒப்பாரி வைத்திருக்கிறார்.
    • முதலமைச்சர் சுட்டிக் காட்டியது போல பழனிசாமியின் பதிவும் அதே அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்கிறது.

    தமிழக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள்!

    அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார்!

    உட்கட்சி பிரச்னை, கூட்டணிப் பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி.!

    'எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியின் நினைப்பு பெட்டியில்தான் உள்ளது. செய்திகளைப் பார்க்காமல், படிக்காமல் அரைவேக்காட்டுத்தனமான அரசியலைச் செய்து வருகிறார் பழனிசாமி. உட்கட்சி பிரச்னை, கூட்டணி பிரச்னையை மறைக்க அறிக்கை அரசியல் செய்து வருகிறார்" என்று தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த பதிலடி பழனிசாமியின் நெஞ்சாங் கூட்டை கிழித்துவிட்டது போல!

    'நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்' என எக்ஸ் பக்கத்தில் வந்து ஒப்பாரி வைத்திருக்கிறார். எங்கள் முதலமைச்சர் சுட்டிக் காட்டியது போல பழனிசாமியின் பதிவும் அதே அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருக்கிறது.

    திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையாம். யார் சொல்லுவது பழனிசாமி? 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும் என்று சொன்னார்கள். செய்தார்களா?

    பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், இலவச 'வை-பை' இணையதள வசதி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்களே… ஐந்தாண்டு ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை?

    அதற்கு முந்தைய தேர்தலான 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாளொன்று 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் வழங்கப்படும் என்று சொன்னார்களே… நிறைவேற்றினார்களா?

    அம்மா பேங்கிங் கார்டு, தமிழன்னை சிலை, குறைந்த கட்டணத்தில் அம்மா தியேட்டர் என்று கலர் கலராக எத்தனை மத்தாப்புகளைக் கொளுத்தினார்கள்? இதையெல்லாம் நிறைவேற்றாத பழனிசாமி திமுகவின் வாக்குறுதியைப் பற்றி வக்கணையாகப் பேசுவது வெட்கக்கேடு.

    கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது கமலாலயம்.

    இன்னொரு பக்கம் அடிமை பழனிசாமியின் அடிமைகள், 'பழனிசாமிதான் அடுத்த முதல்வர்' என மும்மாரி துதி பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான மாய உலகில் வாழும் பழனிசாமியை மீட்க வழியே இல்லை!

    வாக்குச்சாவடியில்தான் முதல்வரை மக்கள் தேர்வு செய்வார்கள். அது நடக்காது என்பதால்தானோ, பழனிசாமியை முதல்வர் ஆக்கத் தியானம் செய்து சிறப்புப் பூஜையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

    அதிமுக கூட்டணிக் குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால், அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித்தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகி இருந்திருந்தால்தான் பழனிசாமிக்கு மக்கள் நலன் மீது கவனம் இருந்திருக்கும். கூவத்தூரில் பெட்டி பெட்டியாக பணத்தைக் கொடுத்து, முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமிக்கு, கவனம் முழுக்க முழுக்க 'பெட்டி' மீதேதான் இருந்து வருகிறது.

    மக்கள் குறைகளைத் தீர்ப்பதே முதன்மையான முழுநேரப் பணி என நாள்தோறும் பணியாற்றி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் டெல்லிக்கு அடிமை சேவகம் செய்வதையே முழு நேரப் பணியாகச் செய்து வந்த பழனிசாமிக்கு மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது!

    பத்திரிகைகளைப் படிக்காமல், தொலைக்காட்சி செய்திகளை பார்க்காமல் வாட்ஸ்அப் தகவலை நம்பி அறிக்கை விடும் பழனிசாமிக்கு கோவம் மட்டும் டன் கணக்கில் வருகிறது. உங்கள் பொய்யை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியதை எண்ணி பழனிசாமி அவமானப்பட வேண்டும்.

    நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தொலைக்காட்சியை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று கூறி ஆட்சி நடத்தியவர்தானே பழனிசாமி! உங்களைப் போல அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று ஆட்சி நடத்தாமல், மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்டுச் சரிசெய்யும் முதலமைச்சராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அடிமை அதிமுக ஆட்சி போல் இல்லாமல் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

    உட்கட்சி பிரச்னை, கூட்டணிப்பூசல், கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்.ஜி.ஆர் மாளிகையிலும் கமலாலயத்திலும் தைலாபுரத்திலும் இருந்துதான் நாள் தவறாமல் வருகிறது. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத பொம்மைதான் பழனிசாமி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மனு மீதான விசாரணைக்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
    • ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

    காதல் திருமண பிரச்சனையால் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கேவி குப்பம் எம்.எல்.ஏ.வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இதற்காக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நேற்று முதல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைக்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. இதில், நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

    மேலும், ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி செயராமனை கைது செய்யுங்கள் என்று காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

    ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்கவும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

    இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    தஞ்சாவூர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் பேசிய அவர்," லைஞர் கருணாநிதியின் வழியின் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சை வந்துள்ளேன்" என்றார்.

    இதுதொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக இருப்பதைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியது, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது என, கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஒன்றரை ஆண்டுகளாகப் போராடி வரும் விவசாயிகள் மீதா உங்கள் அடக்குமுறையைக் காட்டுவது? நான்கு வருடங்களில் நீங்கள் போட்ட வேடங்களில், தேர்தல் நேரத்தில் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல்லிளிக்கிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே.

    உடனடியாக, கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பாக, விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் துப்பாக்கி கலாச்சாரம் வந்தது போல பழனிசாமி பேசுவதைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.
    • திமுக அரசு அமைந்த பிறகுதான் குற்றங்கள் தடுக்கப்பட்டு, குறைந்து கொண்டு வருகின்றன.

    சென்னை :

    அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைத்துச் சீரழிவு ஆட்சி நடத்திய பழனிசாமி, திமுக அரசைக் குறை சொல்வதற்கு அருகதை கிடையாது!

    சக்கரவர்த்தி வழக்கில் சம்பவம் நடந்த 3-ஆவது நாளே முக்கியக் குற்றவாளிகள் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சக்கரவர்த்தி 11.06.2025-ம் தேதி இரவு பைக்கில் வீட்டிற்குச் சென்றவர் சாலையில் உயிரிழந்து கிடந்தார். சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவிட்டு, சந்தேகம் மரணமாக முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது போலீஸ். உடற்கூறு ஆய்வில், சக்கரவர்த்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்ததும், கொலை வழக்காக மாற்றப்பட்டு உடனே இருவரை போலீஸ் கைதும் செய்தது.

    ஒருவரின் மரணத்திற்குத் தெளிவான காரணம் தெரியாவிட்டால் இபிகோ சட்டத்தின் (IPC) பிரிவு 174-ன் கீழ் முதலில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யும். பிறகு மரணத்தில் சந்தேகம் எழுந்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 176-ன் கீழ் வழக்கை மாற்றுவார்கள். கொலை என்பது உறுதியானால், கொலை வழக்காக மாற்றலாம். இந்த அடிப்படையில்தான் சக்கரவர்த்தி வழக்கு முதலில் மர்ம மரணம் எனப்பதிவு செய்யப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்காத, செய்தித்தாள் படிக்கிற பாமரனுக்குகூட தெரிந்த இந்த உண்மை, உள்துறையை கையில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தெரியவில்லை என்றால் அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமரவே தகுதியில்லாதவர். காவல் துறைக்குப் பொறுப்பு அமைச்சராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமிக்கு இந்த அடிப்படை அறிவு கொஞ்சம்கூட இல்லை.

    பாஜக பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைதான நபர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே பாமக பிரமுகர் சக்கரவர்த்தி கொலை நடந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து, பாமகவைக் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் பழனிசாமி, பாமகவுக்கு தூது விடுவது போல அறிக்கை விட்டிருக்கிறார். பாமக நிர்வாகியைக் கொலை செய்தவர் பாஜக நிர்வாகியின் மகன் என்று பழனிசாமி ஏன் சொல்லவில்லை?

    அரசியல் செய்ய எதுவும் கிடைக்காமல், ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்காதா? அதை வைத்து ஏதேனும் மலின அரசியல் செய்ய முடியாதா? எனக் குற்றங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.

    திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே சொல்லும். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட தரவுகளின் படி 2020 ஆண்டு பழனிசாமியின் ஆட்சியில் IPC ல் பதியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 8,91,700, திமுக அரசின் தீவிரமான நடவடிக்கையால் 2022 ஆண்டு IPC ல் பதியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை1,93,913 குறைந்தது. கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் குற்றங்களைக் குறைத்தது திராவிட மாடல் அரசுதான். இந்த இலட்சணத்தில் கேடுகெட்ட ஆட்சி நடத்திய பழனிசாமி அதிமுக ஆட்சியில் அமைதியும் வளமும் வளர்ச்சியும் பெற்றதாகக் கூசாமல் அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

    துப்பாக்கி கலாச்சாரம் பற்றியெல்லாம் பழனிசாமி பேசலாமா? அதிமுக ஆட்சியில் துப்பாக்கி மலிவு விலைக்கு விற்கப்பட்டதும், அதை வாங்கி கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் மக்கள் மறக்க மாட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் துப்பாக்கி கலாச்சாரம் வந்தது போல பழனிசாமி பேசுவதைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்.

    * 2018-ல் கள்ளத் துப்பாக்கி கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரன் எனும் காவலரே கைதானார்,

    * 2020-ல் 8 துப்பாக்கிகள், 60 தோட்டாக்களுடன் கும்பகோணம் அருகே மருத்துவர் ராம்குமார் பிடிபட்டார்.

    * 2018 ஏப்ரலில் அடையாறு இந்திரா நகர் வங்கியில் துப்பாக்கி முனையில் 7 லட்சம் கொள்ளை.

    * 2018-ல் கன்னியாகுமரியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு நாட்டுத் துப்பாக்கி விற்பனை.

    * 2020 மே மாதம் திருப்பூரில் நிலம் தொடர்பான பிரச்சினையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர்,

    * 2020 ஜூலையில் ஈரோட்டிலிருந்து 9 எம்.எம். ரகக் கள்ளத்துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் திருநெல்வேலிக்கு வந்த குமுளி ராஜ்குமார்.

    * 2020 செப்டம்பரில் சென்னை பெரம்பூரில் வீடு புகுந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணை மிரட்டிய நபர்,

    * 2020 நவம்பரில் திருக்கோவிலூர் அருகே மளிகை கடைகாரர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.

    இப்படிப் பழனிசாமி ஆட்சியில் நடந்த துப்பாக்கி சம்பவங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். "துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?" என்று கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

    2020 ஆகஸ்ட் மாதம் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், "பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்" என்று கூறியது பழனிசாமிக்கு தெரியாதா? இதுதான் அவருடைய ஆட்சியில் நிலவிய அமைதி, வளம், வளர்ச்சியா?

    சக்கரவர்த்தி கொலை வழக்கில், "கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்" என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஐடி விங் பிரமுகர் பிரபாத்துக்கு டபுள் பேரல் துப்பாக்கியை யார் வாங்கி கொடுத்தது? என பழனிசாமி விளக்குவாரா?

    திமுக அரசு அமைந்த பிறகுதான் குற்றங்கள் தடுக்கப்பட்டு, குறைந்து கொண்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் சிறப்பாகப் பாதுகாத்து வருவதால்தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 விழுக்காடாக உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது.

    • நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா?
    • உங்களுக்கு இருக்கும் "பெட்டி" மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல.

    "அரைவேக்காட்டுத் தனமாக" இருக்கிறதாம் அவருக்கு.

    அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா ஸ்டாலின் அவர்களே?

    ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே- அது தான் அரைவேக்காட்டுத்தனம்!

    தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே- இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே?

    மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப்படுத்தவில்லை!

    நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதலமைச்சர்!

    "நாட்டில் மும்மாரி பொழிகிறது- எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள்" என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை!

    நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்?

    எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் "பெட்டி" மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம்.

    உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா?

    ஆக, "ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர்" என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார் மு.க. ஸ்டாலின் ! என கூறியுள்ளார். 




    • ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.
    • ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    சென்னை:

    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்பவர் சமூக வலைத்தளம் மூலம் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து தனுசின் 16 வயது தம்பியை மர்ம கும்பல் காரில் கடத்தியது. பின்னர் மீண்டும் வீட்டில் விட்டு சென்றனர். இந்த கடத்தலில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீசார் விசாரணைக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. இதற்கிடையே ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று காலை நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளி வைத்தார்.

    மேலும் ஜெகன்மூர்த்தி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார். கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,305-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-06-2025- ஒரு கிராம் ரூ.120

    14-06-2025- ஒரு கிராம் ரூ.120

    13-06-2025- ஒரு கிராம் ரூ.120

    12-06-2025- ஒரு கிராம் ரூ.119

    11-06-2025- ஒரு கிராம் ரூ.119

    • துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை!
    • கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்;

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

    அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இதே இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன்.

    ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை!

    ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த பொம்மை முதலமைச்சருக்கு துளியும் இல்லை!

    பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்;

    கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்; தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதனை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இயந்திரக் கோளாறால் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.
    • 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பேருடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறால் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது.

    இதனால் லண்டன் - சென்னை, சென்னை - லண்டன் என இருமார்க்கமாக செல்ல இருந்த 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான ரத்தால் இரு மார்க்கத்திலும் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

    முன்னதாக, கடந்த 12-ந்தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 274 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • மூவேந்தர் சாலை, சவுமியா நகர், கஜேந்திரன் நகர் ஒரு பகுதி.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    சிட்லபாக்கம்: சிட்லபாக்கம்- பஜனை கோவில் தெரு, மெய்கை விநாயகர் கோவில் தெரு, நவின் ஸ்டார்வுட்ஸ், காசாகிராண்ட் ஜெனித், சங்கராபுரம், ஏடிபி அவென்யூ, என்எஸ்கே தெரு.

    பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை- கிருஷ்ணா நகர், ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், ஜீவா நகர், கண்ணபிரான் கோவில் தெரு, துலுக்காத்தமன் கோவில் தெரு.

    மேடவாக்கம்: மேடவாக்கம்- அம்பேத்கர் சாலை, மூவேந்தர் சாலை, சவுமியா நகர், கஜேந்திரன் நகர் ஒரு பகுதி, வீரபத்திரன் நகர், பாலாஜி நகர், ஜிக்மா பள்ளிப் பகுதி.

    அம்பத்தூர் ரியல் எஸ்டேட், அய்யப்பாக்கம், ஆதிபேட்டை 3-வது மெயின் ரோடு, வானகரம் சாலை, எம்டிஎச் ரோடு, டிபி 67 முதல் 94, பெரியார் காலணி, பிரின்ஸ் அபார்ட்மெண்ட், பிகேஎம் ரோடு, கல்யாணி எஸ்டேட், அலக் ரெட்டி குடியிருப்பு, குப்பம், சங்கர் ஷெலிங், நடேசன் நகர், 14-வது தெரு, வள்ளலார் தெரு.

    • சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • குபேரா திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

    சென்னை:

    சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். குபேரா திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

    படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.

    இந்தப் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது திரைப்படத்தின் அளவை 3 மணி நேரமாக குறைத்துள்ளனர்.

    இந்நிலையில், குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார். இதையடுத்து ஸ்டேஜில் வைத்து குபேரா படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகளை இயக்குநர் சேகர் கம்முலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ×