என் மலர்tooltip icon

    சென்னை

    • மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
    • இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

    பிரச்சார பயணத்தின்போது, இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் இணைந்தார்.

    இந்நிலையில், தேர்தல் சுற்றுப் பயணத்தின் முதல்நாளில் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

    அப்போது அவர்," நாளைய தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.

    • சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரி உத்தரவு.
    • ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு.

    நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி இன்றி 'சந்திரமுகி' பட காட்சிகளை பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    மேலும், ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

    இவ்வழக்கு தொடர்பாக ஆவண பட தயாரிப்பு நிறுவனம், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கடலோர மாவட்டங்களில் கோடிக்கணக்கான வாக்காளர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது திமுக மீனவர் அணி.
    • இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.

    திமுகவில் நிர்வாக ரீதியாக அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் 25 சார்பு அணிகள் செயல்படுகின்றன. அதில் இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி, மகளிரணி, மீனவரணி, விவசாய அணி உள்ளிட்ட சில அணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

    ஏனென்றால் திமுக அரசியலின் அடிநாளமாக அவை செயல்படுகின்றன. இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என ஒவ்வொரு தரப்பினரையும் கட்சி ரீதியாக சென்றடைய பல்வேறு முன்னெடுப்புகள் திமுக தலைமையின் உத்தரவின்படி அந்த சார்பு அணிகள் மேற்கொள்ளும். அவை களத்தில் வீரியமானதாக இயங்கும்.

    திமுக அரசு செய்த சாதனைகளை சார்பு அணி நிர்வாகிகள் மூலம் கொண்டு சேர்ப்பதில் கவனம் சேர்க்கப்படும். மத்திய அரசால் அவர்களுக்கு பிரச்னை என்றால் வீதியில் இறங்கி அந்த அணியினர் போராடுவார்கள்.

    நீட் தேர்வை எதிர்த்து போராட்டம், கீழடிக்காக போராட்டம் என ஏராளமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்டந்தோறும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், முக்கியமான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய அணிதான் தி.மு.க. மீனவரணி. கடலோர மாவட்டங்களில் கோடிக்கணக்கான வாக்காளர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.

    ஆனால், மீனவர்களுக்கான பிரச்னைகளுக்காக இந்த அணியினர் குரல் கொடுப்பதும் இல்லை., திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகளையும் இந்த அணி சார்பாக மேற்கொண்ட மாதிரியும் தெரியவில்லை என்ற புலம்பல் அதிகம் கேட்கிறது.

    ஏனென்றால், மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செயல்படுவதில்லை என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டை மீனவரணி நிர்வாகிகளே முன்வைக்கின்றனர்.

    சீரான இடைவெளியில் நிர்வாகிகளை சந்தித்தால் தான் எங்களுக்கும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கும்.ஆனால் அதுபோன்ற சூழல் இல்லை. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.

    மீனவர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதுகிறார். மீனவர்களுக்கான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறார். ஆனால், கட்சியின் தலைவர் வழியில் கட்சியின் மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செயல்படவில்லை என்ற பிரதான குற்றச்சாட்டு அமைப்பு நிர்வாகிகளால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

    நிர்வாகிகள் மூலம் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினால்தான் அவர்களுக்கு இருக்கும் குறைகளை தெரிந்துகொள்ள முடியும். மீனவர்களுக்காக அரசு செய்துவரும் திட்டங்களையும் பட்டியலிட முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மீனவர்களிடையே நல்ல உறவை மேம்படுத்த முடியும். ஆனால், அதுபோன்ற நிலை இல்லவே இல்லை என்கின்றனர் நிர்வாகிகன்.

    மீனவரணி சார்பில் அந்த அணியின் செயலாளராய், குறைந்தபட்சம் ஒரு விளையாட்டுப் போட்டியையாவது நடத்தி பரிசு வழங்கினால் நிர்வாகிகளுக்கும் செயல்பட உதவியாக இருக்கும். மீனவர்களுடன் கட்சி ரீதியாக தொடர்பையும் ஏற்படுத்த முடியும் என்கின்றனர் நிர்வாகிகள்.

    எல்லாவற்றையும் விட தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை திமுக நிர்வாகிகள் நேரடியாக சந்திக்க வேண்டும் என்பதற்காக "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் திமுகவின் மாபெரும் முன்னெடுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார்.

    இதற்காக பல மாதங்களாக திட்டமிட்டு மாநிலம் முழுவதும் அனைத்து நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டு தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து கேட்டறிந்து வருகிறார். ஒவ்வொரு அமைச்சரும், மாவட்டச் செயலாளரும், அணி நிர்வாகிகளும் உறுப்பினர்களை சேர்த்து தலைவரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என பம்பரமாய் களப்பணியாற்றி வருகின்றனர்.

    ஆனால், இப்படி ஒரு மக்கள் இயக்கம் செயல்படுகிறதா என்கிற வகையில் தான் ஜோசப் ஸ்டாலின் இருக்கிறார்

    என்கின்றனர் தி.மு.க. மீனவரணி நிர்வாகிகள்.

    ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் மக்களை சந்தித்து அவர்களிடம் கேட்பதற்காக 6 கேள்விகளை கட்சித் தலைமை தயாரித்திருக்கிறது. அதில் இரண்டாவதாக "மகளிர் தங்களின் உரிமைத்தொகையை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா?" என்ற கேள்வி இடம் பெற்றிருக்கிறது.

    ஆனால், தி.மு.க. மீனவரணி செயலாளருக்கு இது புரிந்ததாக தெரியவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எங்கே என்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    • போதைபொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
    • நடிகர் கிருஷ்ணா ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இருவருடைய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இருவருடைய மனுக்கள் மீது நாளை உத்தரவு பிறக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது போலீசார் கைது செய்ததாக ஸ்ரீகாந்த் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    ஜூன் 23ஆம் தேதி ஸ்ரீகாந்தும், 26ஆம் தேதி கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.

    • ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றி.
    • அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.

    இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தி உள்ளோம். திராவிட அரசியலில் முன்னோடி, நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

    ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு சமூகநீதி விடுதி என்று பெயரை மாற்றம் செய்து அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை விடுதலை சிறுத்தை வரவேற்கிறது.

    தேர்தல் களப்பணிகள் விடுதலை சிறுத்தைகள் முதன்மையானது அல்ல. தேர்தல் நெருங்கி வரும்போது அதனை தீவிரப்படுத்துவோம். அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. இந்த கூட்டணி கட்டுக்கோப்பான கூட்டணி. அதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் இருந்தே தேர்தலை சந்திப்போம். புதிய மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

    தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற முடியாது. பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றியுள்ளது.. முக்கிய சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பனையூர் பாபு எம்எல்ஏ, தலைமை நிலைய செய லாளர் பாலசிங்கம், பாவலன், சேகுவாரா, மேலிட பொறுப்பாளர்கள் செல்லத்துரை, இரா. செல்வம், மாவட்டச் செயலாளர்கள் சேத்துப்பட்டு இளங்கோ, கரிகால் வளவன், சௌந்தர், வக்கீல் அப்புனு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவக் கல்லூரி முதல்வராக 14 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி 2024 அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி அரசு உத்தரவிட்டது.
    • வழக்கு விசாரணையின் அடிப்படையில் 14 அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டதாக உத்தரவிட்டது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக 14 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி 2024 அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சில பேராசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் 14 அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டதாக உத்தரவிட்டது.

    இந்த வழக்கு மேல்முறையீட்டிற்கு சென்று மேல்முறையீட்டில் 14 அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது சரியானது என மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்தனர் நீதியரசர்கள். இந்த உத்தரவின்படி நான்கு வார காலத்திற்குள் அரசு மருத்துவ முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து தமிழக அரசு மருத்துவக் கல்லுரி முதல்வர் நியமனத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதை மனதில் கொண்டு தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் காலி இடங்களை முறையாகவும், நியாயமாகவும் தேர்வை மேற்கொண்டு மருத்துவ கல்லூரி முதல்வர்களை நியமனம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. ஆட்சி செய்கிற மத்தியபிரதேசத்தில் எஸ்.சி., எஸ்.டி. விடுதியை பார்த்து விட்டு கற்றுக் கொண்டு வாருங்கள்.
    • பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது.

    சென்னை:

    சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சேவைகள் மற்றும் பிரதம மந்திரி திவ்யாஷா மையத்தின் சார்பில் மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று நடந்தது.

    இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய கேலிக் கூத்தை அரங்கேற்றி இருக்கிறார். எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்கள் படிக்கின்ற விடுதியை சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்து இருக்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன். அவர் ஏதாவது ஒரு விடுதியை போய் பார்த்து இருக்கிறாரா? அந்த விடுதிகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்.

    எஸ்.சி.,எஸ்.டி. விடுதியில் ஒரு மாணவர் படிக்கிறார் என்றால் அவர் அதை விட ஒரு கொடுமையை வாழ்க்கையில் அனுபவித்து இருக்கவே முடியாது. அது போன்ற விடுதிகளில் பெயரை மட்டும் மாற்றினால் சரியாகி விடுமா? எதுவுமே நடக்காது.

    பா.ஜ.க. ஆட்சி செய்கிற மத்தியபிரதேசத்தில் எஸ்.சி., எஸ்.டி. விடுதியை பார்த்து விட்டு கற்றுக் கொண்டு வாருங்கள். அங்கு சிறப்பான வசதியை செய்து கொடுத்திருக்கிறோம். கர்நாடகா, தெலுங்கானாவிலும் போய் பார்த்து விட்டு வாருங்கள்.

    தமிழகத்தில் உள்ள விடுதியில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. மாணவர்களுக்கு சொறி சிரங்கு ஏற்படுகிறது. எந்த விடுதியிலும் சுத்தம் கிடையாது. தமிழகம் முழுவதும் இது தான் நிலை.

    சென்னை சட்டக் கல்லூரியில் உள்ள விடுதியின் நிலையும் இதுதான். மாணவர்கள் மீது முதலமைச்சருக்கு பற்று இருந்தால் அவர் ஒவ்வொரு விடுதியையும் சென்று பார்த்து விட்டு அதன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி அதை மேம்படுத்த வேண்டும்.

    அதே போல் காலனிகளை ஒழித்து விட்டோம் என்கிறார். பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது. இரட்டை சுடுகாடு இருக்கிறது. பல கிராமங்களில் கோவில்களுக்கு போக முடியாத சூழ்நிலை இருக்கிறது.

    சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை தமிழக அரசு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். எனது தொகுதியில் இருந்து தொடங்கும் இந்த சுற்றுப் பயண தொடக்க விழாவில் நானும் பங்கேற்கிறேன். சிறுபான்மை மக்கள் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணிக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், மருத்துவ கண்காணிப்பாளர் புஷ்பலதா, துணை மருத்துவ கண்காணிப்பாளர்கள் சிவகுமார், பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • மொத்தம் 54 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.
    • இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 38 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் 729 வீடுகள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம், 17 கோடியே 52 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் செலவில் 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 65 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள், என மொத்தம் 54 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    மேலும் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி நகர், சேலம் மாவட்டம் தம்மம் பட்டி, தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை மற்றும் கேசர்குளி அணை, விருது நகர் மாவட்டம் கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 38 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை திறந்து வைத்தார்.

    • த.வெ.க. தலைவர் விஜய், காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
    • போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    இதனிடையே, அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், ஐகோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த ஜூலை 3-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி கிடைக்காததால், ஜூலை 6-ந்தேதி போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் அதற்கும் அனுமதி கிடைக்காததால் த.வெ.க. போராட்டம் மீண்டும் தள்ளிப்போனது.

    இந்தநிலையில் அஜித்குமார் மரணம் தொடர்பான த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கோவையில் ரூ.348 கோடியில் 12.5 கி.மீ. புறவழிச்சாலை, நெல்லையில் ரூ.225 கோடியில் 12.4 கி.மீ. புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,268 கி.மீ. நீளத்திற்கு சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றுப்பாலம் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆத்தூர், ஓசூரில் புறவழிச்சாலை அமைக்க ரூ.500 கோடி, ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட சாலை அமைக்க ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கோவையில் ரூ.348 கோடியில் 12.5 கி.மீ. புறவழிச்சாலை, நெல்லையில் ரூ.225 கோடியில் 12.4 கி.மீ. புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. விருத்தாசலம் - தொழுதூர், கொடை-வத்தலகுண்டு, சிவகாசி-விருதுநகர் சாலைகள் 4 வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளன.

    • அரசு கலைக் கல்லூரியில் தொல்லியல் சம்பந்தமான பாடப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகும்.
    • மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் தம் கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய நினைவு சின்னம் கெங்கைகொண்ட சோழபுரம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பண்டைய சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட தொல்லியல் அடையாளங்கள் அதிகம் உள்ளன. இவைகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஆய்வுகளை தொடரும் அளவிற்கு இந்த பகுதியில் செயல்படுகின்ற கல்லூரிகளில் தொல்லியல் சம்பந்தமான பாடப்பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின், புது சாவடியில் தமிழக அரசால் அமைய உள்ள அரசு கலைக் கல்லூரியில் தொல்லியல் சம்பந்தமான பாடப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகும்.

    தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு அடுத்தபடியாக மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் தம் கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய நினைவு சின்னம் கெங்கைகொண்ட சோழபுரம் ஆகும். இந்த நினைவு சின்னத்தை போற்றும் வகையில் இந்த பகுதி மக்களின் விருப்பத்தை ஏற்கவும் இந்த மண்ணின் பெருமையை வெளிக்கொணரும் வகையிலும் தமிழக அரசால் நிறுவப்படுகின்ற புதிய அரசு கலைக் கல்லூரிக்கு கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவிய ராஜேந்திர சோழன் பெயரை சுட்டி, மாமன்னன் ராஜேந்திர சோழன் அரசினர் கலைக்கல்லூரி என்று பெயரை தமிழக அரசு நிறுவி ராஜேந்திர சோழன் நினைவை போற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கி வருகிறார்.

    இதனால் கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாண வர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×