என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எஸ்.சி., எஸ்.டி. மாணவர் விடுதிகள் மோசமான தரத்துடன் உள்ளது - எல்.முருகன்
    X

    எஸ்.சி., எஸ்.டி. மாணவர் விடுதிகள் மோசமான தரத்துடன் உள்ளது - எல்.முருகன்

    • பா.ஜ.க. ஆட்சி செய்கிற மத்தியபிரதேசத்தில் எஸ்.சி., எஸ்.டி. விடுதியை பார்த்து விட்டு கற்றுக் கொண்டு வாருங்கள்.
    • பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது.

    சென்னை:

    சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சேவைகள் மற்றும் பிரதம மந்திரி திவ்யாஷா மையத்தின் சார்பில் மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று நடந்தது.

    இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய கேலிக் கூத்தை அரங்கேற்றி இருக்கிறார். எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்கள் படிக்கின்ற விடுதியை சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்து இருக்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன். அவர் ஏதாவது ஒரு விடுதியை போய் பார்த்து இருக்கிறாரா? அந்த விடுதிகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்.

    எஸ்.சி.,எஸ்.டி. விடுதியில் ஒரு மாணவர் படிக்கிறார் என்றால் அவர் அதை விட ஒரு கொடுமையை வாழ்க்கையில் அனுபவித்து இருக்கவே முடியாது. அது போன்ற விடுதிகளில் பெயரை மட்டும் மாற்றினால் சரியாகி விடுமா? எதுவுமே நடக்காது.

    பா.ஜ.க. ஆட்சி செய்கிற மத்தியபிரதேசத்தில் எஸ்.சி., எஸ்.டி. விடுதியை பார்த்து விட்டு கற்றுக் கொண்டு வாருங்கள். அங்கு சிறப்பான வசதியை செய்து கொடுத்திருக்கிறோம். கர்நாடகா, தெலுங்கானாவிலும் போய் பார்த்து விட்டு வாருங்கள்.

    தமிழகத்தில் உள்ள விடுதியில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. மாணவர்களுக்கு சொறி சிரங்கு ஏற்படுகிறது. எந்த விடுதியிலும் சுத்தம் கிடையாது. தமிழகம் முழுவதும் இது தான் நிலை.

    சென்னை சட்டக் கல்லூரியில் உள்ள விடுதியின் நிலையும் இதுதான். மாணவர்கள் மீது முதலமைச்சருக்கு பற்று இருந்தால் அவர் ஒவ்வொரு விடுதியையும் சென்று பார்த்து விட்டு அதன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி அதை மேம்படுத்த வேண்டும்.

    அதே போல் காலனிகளை ஒழித்து விட்டோம் என்கிறார். பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது. இரட்டை சுடுகாடு இருக்கிறது. பல கிராமங்களில் கோவில்களுக்கு போக முடியாத சூழ்நிலை இருக்கிறது.

    சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை தமிழக அரசு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். எனது தொகுதியில் இருந்து தொடங்கும் இந்த சுற்றுப் பயண தொடக்க விழாவில் நானும் பங்கேற்கிறேன். சிறுபான்மை மக்கள் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணிக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், மருத்துவ கண்காணிப்பாளர் புஷ்பலதா, துணை மருத்துவ கண்காணிப்பாளர்கள் சிவகுமார், பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×