என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செயல்படுகிறதா தி.மு.க. மீனவர் அணி?- குமுறும் நிர்வாகிகள்!
- கடலோர மாவட்டங்களில் கோடிக்கணக்கான வாக்காளர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது திமுக மீனவர் அணி.
- இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.
திமுகவில் நிர்வாக ரீதியாக அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் 25 சார்பு அணிகள் செயல்படுகின்றன. அதில் இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி, மகளிரணி, மீனவரணி, விவசாய அணி உள்ளிட்ட சில அணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
ஏனென்றால் திமுக அரசியலின் அடிநாளமாக அவை செயல்படுகின்றன. இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என ஒவ்வொரு தரப்பினரையும் கட்சி ரீதியாக சென்றடைய பல்வேறு முன்னெடுப்புகள் திமுக தலைமையின் உத்தரவின்படி அந்த சார்பு அணிகள் மேற்கொள்ளும். அவை களத்தில் வீரியமானதாக இயங்கும்.
திமுக அரசு செய்த சாதனைகளை சார்பு அணி நிர்வாகிகள் மூலம் கொண்டு சேர்ப்பதில் கவனம் சேர்க்கப்படும். மத்திய அரசால் அவர்களுக்கு பிரச்னை என்றால் வீதியில் இறங்கி அந்த அணியினர் போராடுவார்கள்.
நீட் தேர்வை எதிர்த்து போராட்டம், கீழடிக்காக போராட்டம் என ஏராளமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்டந்தோறும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், முக்கியமான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய அணிதான் தி.மு.க. மீனவரணி. கடலோர மாவட்டங்களில் கோடிக்கணக்கான வாக்காளர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.
ஆனால், மீனவர்களுக்கான பிரச்னைகளுக்காக இந்த அணியினர் குரல் கொடுப்பதும் இல்லை., திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகளையும் இந்த அணி சார்பாக மேற்கொண்ட மாதிரியும் தெரியவில்லை என்ற புலம்பல் அதிகம் கேட்கிறது.
ஏனென்றால், மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செயல்படுவதில்லை என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டை மீனவரணி நிர்வாகிகளே முன்வைக்கின்றனர்.
சீரான இடைவெளியில் நிர்வாகிகளை சந்தித்தால் தான் எங்களுக்கும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கும்.ஆனால் அதுபோன்ற சூழல் இல்லை. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.
மீனவர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதுகிறார். மீனவர்களுக்கான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறார். ஆனால், கட்சியின் தலைவர் வழியில் கட்சியின் மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செயல்படவில்லை என்ற பிரதான குற்றச்சாட்டு அமைப்பு நிர்வாகிகளால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
நிர்வாகிகள் மூலம் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினால்தான் அவர்களுக்கு இருக்கும் குறைகளை தெரிந்துகொள்ள முடியும். மீனவர்களுக்காக அரசு செய்துவரும் திட்டங்களையும் பட்டியலிட முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மீனவர்களிடையே நல்ல உறவை மேம்படுத்த முடியும். ஆனால், அதுபோன்ற நிலை இல்லவே இல்லை என்கின்றனர் நிர்வாகிகன்.
மீனவரணி சார்பில் அந்த அணியின் செயலாளராய், குறைந்தபட்சம் ஒரு விளையாட்டுப் போட்டியையாவது நடத்தி பரிசு வழங்கினால் நிர்வாகிகளுக்கும் செயல்பட உதவியாக இருக்கும். மீனவர்களுடன் கட்சி ரீதியாக தொடர்பையும் ஏற்படுத்த முடியும் என்கின்றனர் நிர்வாகிகள்.
எல்லாவற்றையும் விட தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை திமுக நிர்வாகிகள் நேரடியாக சந்திக்க வேண்டும் என்பதற்காக "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் திமுகவின் மாபெரும் முன்னெடுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார்.
இதற்காக பல மாதங்களாக திட்டமிட்டு மாநிலம் முழுவதும் அனைத்து நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டு தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து கேட்டறிந்து வருகிறார். ஒவ்வொரு அமைச்சரும், மாவட்டச் செயலாளரும், அணி நிர்வாகிகளும் உறுப்பினர்களை சேர்த்து தலைவரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என பம்பரமாய் களப்பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், இப்படி ஒரு மக்கள் இயக்கம் செயல்படுகிறதா என்கிற வகையில் தான் ஜோசப் ஸ்டாலின் இருக்கிறார்
என்கின்றனர் தி.மு.க. மீனவரணி நிர்வாகிகள்.
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் மக்களை சந்தித்து அவர்களிடம் கேட்பதற்காக 6 கேள்விகளை கட்சித் தலைமை தயாரித்திருக்கிறது. அதில் இரண்டாவதாக "மகளிர் தங்களின் உரிமைத்தொகையை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா?" என்ற கேள்வி இடம் பெற்றிருக்கிறது.
ஆனால், தி.மு.க. மீனவரணி செயலாளருக்கு இது புரிந்ததாக தெரியவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எங்கே என்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.






