என் மலர்
சென்னை
- தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
- வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து விற்பனையாது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,155 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-07-2025- ஒரு கிராம் ரூ.125
12-07-2025- ஒரு கிராம் ரூ.125
11-07-2025- ஒரு கிராம் ரூ.121
10-07-2025- ஒரு கிராம் ரூ.120
09-07-2025- ஒரு கிராம் ரூ.120
- ஒவ்வொரு வார்டிலும் தலா 2 முகாம்கள் வீதம் 200 வார்டுகளிலும் மொத்தம் 400 முகாம்கள் நடைபெற உள்ளது.
- ஆகஸ்டு 14-ந்தேதி வரை 109 வார்டுகளில் முகாம் நடைபெற உள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாமை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை முதல் அக்டோபர் மாதம் வரை 15 மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தலா 2 முகாம்கள் வீதம் 200 வார்டுகளிலும் மொத்தம் 400 முகாம்கள் நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக 109 முகாம்கள் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 6 வார்டுகள் வீதம் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு வார்டிலும் முகாம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளடக்கிய விண்ணப்ப படிவங்கள் மற்றும் 13 அரசுத்துறைகள் மூலம் வழங்கப்பட உள்ள சேவைகள் குறித்த முழு விவரங்கள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் கையேடு வழங்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருந்தால் தங்களது வார்டுகளில் நடைபெறும் முகாமில் நேரடியாக சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். முகாம்களில் பெறப்படும் மக்களின் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெறும் நாட்களில், வார்டுகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதன்படி நாளை 25, 38, 76, 109, 114, 143, 168 ஆகிய 7 வார்டுகளிலும், 16-ந்தேதி 1, 20, 79, 94, 167, 179 ஆகிய 6 வார்டுகளிலும் முகாம் நடைபெறும். 17-ந்தேதி 32, 49, 80, 130, 184, 192 ஆகிய 6 வார்டுகளிலும், 18-ந்தேதி 15, 34, 64, 110, 144, 156 ஆகிய 6 வார்டுகளிலும் திட்ட முகாம் நடைபெறும். அதன்படி, ஆகஸ்டு 14-ந்தேதி வரை 109 வார்டுகளில் முகாம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ‘ப' வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
- பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் வைரல் ஆகின.
சென்னை:
பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் கேரள பள்ளிகளில் அமைக்கப்பட்டது. இது ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியை பின்பற்றி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவ இருக்கைகளை அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அரசியல் கட்சியினர் சிலர் திரைப்படத்தை பார்த்து பள்ளிக்கல்வித்துறை சீரழிகிறது என்றும், மாணவ-மாணவிகளுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும் என்றும், உடனடியாக 'ப' வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அந்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் வைரல் ஆகின. ஆனால் அதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அப்படி எந்த உத்தரவையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை எனவும், அது நிறுத்தி வைத்ததாக வரும் செய்தி முற்றிலும் தவறான தகவல் எனவும், 'ப' வடிவ இருக்கை அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பூங்கா தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.07.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜுவான் நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வாணுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ் காலனி (வேளச்சேரி), EB காலனி, மோகன்புரி மோகனி, ஆதம்பாக்கம் நியூ காலனி.
அம்பத்தூர் பகுதி: முத்தமிழ் நகர், மூகாம்பிகா நகர், இந்துஸ்தான் மோட்டார் நகர், அஜ்மீர் காஜா நகர், ஹாஜி நகர், காந்தி நகர், விபிசி நகர், கிழக்கு பாலாஜி நகர், கங்கை நகர் மற்றும் செங்குன்றம் மெயின் ரோடு.
பள்ளிக்கரணை: காமகோடி நகர், IIT காலனி.
சேலையூர்: கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பூங்கா தெரு, கர்ணம் தெரு மற்றும் விரிவு, ராஜஐயர் தெரு, மாதாகோவில் தெரு, நெல்லூர்அம்மன் கோவில் தெரு, நியூ பாலாஜி நகர், எம்எஸ்கே நகர், கண்ணன் நகர், IOB காலனி, முத்தாலம்மன் கோவில் தெரு, ஈஸ்வரன் கோவில்.
பெரும்பாக்கம்: மேடவாக்கம், கௌரிவாக்கம், மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர், பால்ம் கார்டன், காயத்ரி நகர், ராயல் கார்டன், கிருஷ்ணவேணி நகர்.
முடிச்சூர்: திருமுடிவாக்கம், வெற்றிவேல் நகர், பரத்வாஜ் நகர், PTC குடியிருப்புகள், சரஸ்வதி நகர், பாக்யம் கோபால கிருஷ்ண நகர், செந்தில் நகர், நடுவீரப்பட்டு & பூந்தண்டலம் பஞ்சாயத்து, எட்டையபுரம், ஆர்ஆர்டி & தர்ஷன் கார்டன், அசோக் நந்தவனம், காயத்ரி மேகா நகர், பிங்க் ஹவுஸ்.
- நல்வழியை சொல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது.
- திருக்குறளில் வெளிப்படாத மறைபொருள் இன்னும் நிறைய இருக்கிறது.
சென்னை:
சென்னை காமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ''வள்ளுவர் மறை வைரமுத்து உரை'' நூல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திருக்குறள் இரண்டு அடிதான்; ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அதற்கு புதுப்புது பொருள்கள் சொல்லி, உலக மக்கள் எல்லோருக்கும் புதுவழியை நல்வழியை சொல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், "திராவிடப் பண்பாட்டை ஆரியப் பண்பாடு நகர்த்தவோ, தகர்க்கவோ முனைந்த காலகட்டத்தின் விளிம்பில் தமிழ் மரபு காக்கும் தனிப்பெரும் அரணாக வள்ளுவம் எழுந்தது"என்று சொல்லி, இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றை தன்னுடைய சொற்களில் எடுத்துச் சொல்லிவிட்டார். திருக்குறள் தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும், இது தமிழர்களான நமக்கு மட்டும் சொந்தமான நூல் கிடையாது.
திருக்குறளில் வெளிப்படாத மறைபொருள் இன்னும் நிறைய இருக்கிறது என ஏராளமான அறிஞர்கள் தங்களின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி உரை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிகளுக்கான தேவை இன்றைக்கும் இருக்கிறது.
காலங்கள் கடந்து வாழும் வள்ளுவர் மறையை – இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும்.
உலக மக்கள் எல்லோருக்கும் புது வழியை, நல் வழியை செல்லக் கூடிய உலக இலக்கியமாக திருக்குறள் உயர்ந்து நிற்கிறது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான நூல்.
மனிதத்திற்கு வள்ளுவத்தை பரப்புவதோடு, எதிரான கருத்தியல் வண்ணங்களை அவர் மேல் பூச முயற்சிக்கும் அடாவடித்தனத்தை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
- தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
தீ அணைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சதாப்தி விரைவு ரெயில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என்றும், மாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரெயில் சென்ட்ரல்- அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரெயில், இரவு 7.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இரவு 9.05 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அசோகபுரம் செல்ல வேண்டிய காவேரி ரெயில், இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல வேண்டிய ரெயில், இரவு 10 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
- மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இன்று (13.07.2025) அதிகாலையில், ஏழு மீனவர்கள், பதிவு எண்- IND-TN-10-MM-746 கொண்ட அவர்களின் இயந்திர மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர்.
அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், மற்றொரு இயந்திர படகு (IND-TN-10-MM-1040) இலங்கை கடற்படை கப்பலால் மோதப்பட்டதாகவும், படகின் பின்புறம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வருகிறது. மீண்டும் மீண்டும் நிகழும் இந்த சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன.
அவை நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களை நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ந்த துயரங்களுக்கும் உள்ளாக்குகின்றன.
2024-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலர் இன்னும் இலங்கை காவலில் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடர்ச்சியான அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைக்கக்கூடிய அனைத்து தூதரக வழிகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்றார் தமிழிசை.
- இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பை அமல்படுத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை குடிக்க தண்ணீர் இல்லை, இதை முதலில் சரி செய்ய வேண்டும்.
எங்கேயோ பார்த்து "ப" வடிவ இருக்கை அமைப்பதுதான் எங்கள் முன்னுரிமை என்று இல்லாமல் எப்பொழுதும் இருக்கையை பற்றியே பேசி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி அமைச்சராக மட்டுமே இல்லாமல், மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில கவனம் செலுத்த வேண்டும்.
இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது என்பது வேதனை.
மாணவர்களை வகுப்பறையில் "ப" வடிவில் அமர வைக்கும் பொழுது மருத்துவ ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளை மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் தொடர்ந்து கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை, கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் என்ற முறையிலே அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கேரளா சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பது விட்டு விட்டு அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பையும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமனப்படுத்த வேண்டும் என்று போராடும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளையும் முன்னுரிமை கொடுப்பதை விடுத்துவிட்டு பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த காலங்களில் நான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் இன்றும் பயன்படும் கேலரி போன்ற வகுப்பறைகளை அமைத்து ஆசிரியருக்கு தேவையான மேடை அமைத்து தெளிவான நவீன டிஜிட்டல் கல்வி கற்பிக்கும் திரைகளையும் போர்டுகளையும் அமைப்பதன் மூலமே இதை சரி செய்து விடலாம்.
இது போன்ற மாற்றங்களை மாணவர்களின் உளரீதியாக மனரீதியாக வகுப்பறையிலிருந்து உலக அரங்குக்கு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆக காப்பி அடிப்பதை நிறுத்தி ஆக்கபூர்வமாக கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும் சமீபத்தில் கூட வகுப்பறைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு பெல் டைம் என்பதை மணி அடித்து நினைவூட்டும் அரசாணை கையெழுத்திட்ட முன்னாள் புதுச்சேரி ஆளுநர் என்ற முறையில் அதை நான் வரவேற்பதுடன் அதே போன்று நல்ல திட்டங்கள் புதிய கல்விக் கொள்கைகளும் இருக்கின்றன அதை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலமாகவே நம் மாணவர்களை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்த முடியும் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது.
- வரும் 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார்.
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் கடந்த 7-ம் தேதி தொடங்கினார். விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் முடிவடைந்தது.
சுற்றுப்பயணம், 21-ம் தேதி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் முதற்கட்ட பிரசாரம் நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை 2-ம் கட்ட பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
அதன்படி, வரும் 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார். புதுக்கோட்டையில் தொடங்கும் சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்.
- வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். இந்த நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்
இந்நிலையில், தன் பிறந்தநாளை ஒட்டி, தான் எழுதிய நூலை கலைஞர் நினைவிடத்தில் வைத்து கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பான வீடியோவை வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,
முத்தமிழறிஞரே!
முதல் தமிழாசானே!
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை' நூலை
உங்கள்
நினைவிடம் சேர்க்கிறேன்;
நெஞ்சு நிறைகிறேன்
அப்பாவின் சட்டையை
அணிந்துகொள்ள ஆசைப்படும்
குழந்தையைப்போல
நீங்கள் உரைஎழுதிய குறளுக்கு
நானும் எழுதியிருக்கிறேன்
உரையாசிரியர் பட்டியலில்
சேர்வதைவிட
உங்கள் வரிசையில் சேர்வதில்
உள்ளம் கசிகிறேன்
வணங்குகிறேன்;
என் பிறந்தநாளில்
வாழ்த்துங்கள் என்னை
என்று பதிவிட்டுள்ளார்.
- ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன.
- பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற மலையாளத் திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முயல்வதில் தவறு இல்லை.
ஆனால், ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன. இந்த முறையை மலையாள திரைப்படமும், தமிழக அரசும் வலியுறுத்துவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த முறையில் அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்படுவார்கள் என்பது மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தக்கூடும், கற்றல் - கற்பித்தல் என்பது கலந்துரையாடலாக அமையும் என்பவை சாதகமான அம்சங்கள்.
எனினும், பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது; வகுப்பறையின் இரு புறமும் அமர்ந்துள்ள மாணவர்கள் கரும்பலகையை பார்த்து எழுதுவதற்கு கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்; மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும்போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்பன போன்ற பாதகமான அம்சங்களும் உள்ளன.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை ஆசிரியர்களும், வகுப்பறைகளும் தான். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?
பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.7500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பது அரசுக்கே வெளிச்சம். புதிய வகுப்பறை கட்டிடங்களிலும் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவது வாடிக்கையாகி விட்டது.
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்றால் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்டப்படுவதுடன், ஒரு லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். அதை விடுத்து ப வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும். எனவே, தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






