என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கும் திருக்குறள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
- நல்வழியை சொல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது.
- திருக்குறளில் வெளிப்படாத மறைபொருள் இன்னும் நிறைய இருக்கிறது.
சென்னை:
சென்னை காமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ''வள்ளுவர் மறை வைரமுத்து உரை'' நூல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திருக்குறள் இரண்டு அடிதான்; ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அதற்கு புதுப்புது பொருள்கள் சொல்லி, உலக மக்கள் எல்லோருக்கும் புதுவழியை நல்வழியை சொல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், "திராவிடப் பண்பாட்டை ஆரியப் பண்பாடு நகர்த்தவோ, தகர்க்கவோ முனைந்த காலகட்டத்தின் விளிம்பில் தமிழ் மரபு காக்கும் தனிப்பெரும் அரணாக வள்ளுவம் எழுந்தது"என்று சொல்லி, இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றை தன்னுடைய சொற்களில் எடுத்துச் சொல்லிவிட்டார். திருக்குறள் தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும், இது தமிழர்களான நமக்கு மட்டும் சொந்தமான நூல் கிடையாது.
திருக்குறளில் வெளிப்படாத மறைபொருள் இன்னும் நிறைய இருக்கிறது என ஏராளமான அறிஞர்கள் தங்களின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி உரை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிகளுக்கான தேவை இன்றைக்கும் இருக்கிறது.
காலங்கள் கடந்து வாழும் வள்ளுவர் மறையை – இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும்.
உலக மக்கள் எல்லோருக்கும் புது வழியை, நல் வழியை செல்லக் கூடிய உலக இலக்கியமாக திருக்குறள் உயர்ந்து நிற்கிறது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான நூல்.
மனிதத்திற்கு வள்ளுவத்தை பரப்புவதோடு, எதிரான கருத்தியல் வண்ணங்களை அவர் மேல் பூச முயற்சிக்கும் அடாவடித்தனத்தை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.






