என் மலர்
சென்னை
- தற்காலிக பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தை வழங்கவும் அரசுக் கஜானாவில் பணமில்லையா.
- திறனற்ற திமுக ஆட்சி இருக்கும் வரை மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதுமுள்ள உயர்கல்வி நிலையங்களில் போதிய பேராசிரியர்களை நியமிக்காது இழுத்தடிக்கும் அவலத்திற்கு மத்தியில், தற்போது அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 2000 பேரின் ஒப்பந்தத்தையும் நீட்டிக்காது திமுக அரசு அலட்சியம் காட்டிவருவது கண்டனத்திற்குரியது.
நிரந்தர பேராசிரியர்களை நியமித்து மாணவர்கள் நலனைப் பாதுகாக்கத்தான் அக்கறை இல்லை என்றால், ஒப்பந்தத்தை நீட்டித்து, தற்போது இருக்கின்ற பேராசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்ளக் கூட மனமில்லையா? கிட்டத்தட்ட 332 தற்காலிக பேராசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தையும் வழங்காது காலந்தாழ்த்துவது ஏன்? தற்காலிக பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தை வழங்கவும் அரசுக் கஜானாவில் பணமில்லையா?
ஆக மொத்தத்தில், பள்ளிக்கூடங்களில் இருந்து உயர்கல்வி நிலையங்கள் வரை கல்வித்துறையைக் கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி இருக்கும் வரை மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை என கூறினார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு
- எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, திமுக கூட்டணியில் சீட்டுகளை குறைத்து விடுவார்கள் என்று, அதிமுகவுடன் கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்றார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம்.
அதிமுக ஆட்சி காலத்திலும் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது" என்றார்.
- தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 10 மாதம் உள்ள நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக் ஆகியவை முன்கூட்டியே தயாராகி வருகின்றன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 17-7-2025 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அதில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்.
- திமுகவினர் கூட்டணி வைத்தால் நல்லது, அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா?
- பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்த திமுகவிற்கு பேசுவதற்கு தகுதியுள்ளதா?
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
வாஜ்பாயுடன் கலைஞர் இருந்த புகைப்படத்தை காண்பித்து மக்களிடையே எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி அதிகாரம் வேண்டுமெனில் திமுகவினர் யார் காலில் வேண்டுமானாலும் விழுவர்.
திமுகவினர் கூட்டணி வைத்தால் நல்லது, அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா?
பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்த திமுகவிற்கு பேசுவதற்கு தகுதியுள்ளதா?
பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை. அதிமுக தொண்டனையும் யாராலும் பயமுறுத்த முடியாது.
சட்டமன்றத்திலேயே பெண் என்றும் பாராமல் நமது அம்மாவை தாக்கிய திமுக தற்போது நமக்கு சவால் விடுகின்றன.
ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு எத்தனையே முயற்சிகள் நடைபெற்றன. எந்த கொம்பனும் அதிமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை மு.க.ஸ்டாலின் உடைக்க பார்த்தார்.
பாஜகவை பார்த்து ஸ்டாலின் தான் பயப்படுகிறார். பிரதமர் மோடிக்கு வெள்ளை குடை பிடித்து வேந்தராகிறார் ஸ்டாலின்.
இந்த நாட்டையே ஆளும் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் என்ன தவறு உதயநிதிக்கு.
கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் மோடியை அழைத்தனர், வரவேற்பு, ரோடு ஷோ நடத்தினார்.
திமுக போல் இரட்டை வேடம் போடும் கட்சி அதிமுக கிடையாது.
கூட்டணி வைத்துவிட்டார்களே, ஆட்சி பறிபோய்வுடுமே என்ற அச்சத்தில் உள்ளார் மு.க.ஸ்டாலின்.
நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், உங்களுக்கு ஏன் பயம்?
இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.
சட்டமன்றத்திலேயே கூட்டணி குறித்து என்னிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு பயப்படுகிறார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன், அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா?
- இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து எடப்படி பழனிசாமி விளம்பரம் செய்து வருகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
திரு. ஸ்டாலின் அவர்களே... நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
"உங்களுடன் ஸ்டாலின்" ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன்,
அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா?
"சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி அதிமுக ஆட்சியின் அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே... உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று தானே நான் கேட்டேன்? அதற்கு என்ன பதில் சொல்வீங்க?
ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுசீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்?
இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?
பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா?
-2011 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி ஆகக் கூட வக்கில்லாமல் மண்ணைக் கவ்வி ஓட்டம் பிடித்தது நீங்கள் தானே?
-அதன் பிறகு வந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி.
-2012ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி.
-புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட தேறாது என்று போட்டியிடாமல் ஓடியது திமுக.
-2013ல் ஏற்காடு இடைத்தேர்தல் தோல்வி.
-2014 நாடாளுமன்றத் தேர்தல். ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாமல் மீண்டும் மண்ணைக் கவ்வியது உங்கள் திமுக.
-2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பக்கமே திமுக வரவில்லை.
-ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி.
-2016 சட்டமன்ற தேர்தல். தமிழ்நாடு மறக்குமா? ஒரு ஓட்டை சைக்கிள தூக்கிக் கொண்டு "எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை" ன்னு ஊர் ஊராக ஒட்டிச் சென்று, தமிழ்நாட்டில் ஒரு டீக்கடை விடாமல் டீ குடித்தும், மக்கள் யாரும் உங்களை கண்டுக்கவே இல்ல.
அதிமுக ஆட்சி, அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. நீங்கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரவையில் இருந்து ஓட்டம் பிடித்தது தான் மிச்சம்!
-2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்ததே... அதில் கூட மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட படுதோல்வி கட்சி தானே உங்கள் திமுக?
இப்படி ஒரு தேர்தல் வரலாற்றை வைத்துக்கொண்டு, என்னைப் பற்றி
மு.க.ஸ்டாலின் பேசலாமா?
இதில் சினிமா வசனம் வேறு... "அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட" என்று கூறுகிறார்...
திரு. ஸ்டாலின் அவர்களே... "நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட" என்பதைத் தான் மக்கள் சொல்லிட்டு இருக்காங்க!
இந்த திரைப்பட காமெடி ஒன்று வருமே... "யாரோ இவன் மூளைக்குள்ளே போய் இவனை டாக்டர் ன்னு நம்ப வெச்சுட்டாங்க" என்று....
அது மாதிரி, யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய், "இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான்" என்று நம்ப வைத்துவிட்டார்கள் போல...
Good Bye சொல்லப்போறாங்களாம் மக்கள். மீண்டும் சொல்கிறேன், "திரு. ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி!"
அன்பார்ந்த தமிழக மக்களே- நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், நீங்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்லும் அந்த ஒரு சொல், திரு. ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. நீங்கள் சொல்லும் #ByeByeStalin அவரை கதற விடுகிறது.
இன்னும் கதற விடுவோமா? 234 தொகுதிகளிலும் சொல்வோமா?
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.
- மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா?
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் அவலத்தை சுட்டிக் காட்டும் காணொளி மிகுந்த கவலையளிக்கிறது.
பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா? முறையான வசதிகள் ஏற்படுத்தித் தருவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு
திமுக அரசு வெட்கப்பட வேண்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது.
- தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஆளுநர் அவர்கள் இவ்விஷயம் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- முகாம்களுக்கு காலையில் இருந்தே பொது மக்கள் ஏராளமான பேர் வந்து மனு கொடுத்தனர்.
- மனுக்களை வாங்கும் அதிகாரிகள் 45 நாட்களில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களுடைய இல்லங்களுக்கே சென்று வழங்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில வார்டுகளில் சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று தண்டையார்பேட்டை சி.எச்.எஸ்.எஸ். படேல்நகர் பள்ளி ஸ்ரீமகாவீர் ஜெயின் பவன் திருவல்லிக்கேணி உள்பட வார்டு 25, வார்டு 76, 109, 114, 143, 168 ஆகிய 7 இடங்களில் முகாம் நடந்தது.
இந்த முகாம்களுக்கு காலையில் இருந்தே பொது மக்கள் ஏராளமான பேர் வந்து மனு கொடுத்தனர்.
அதிலும் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஏராளமான பெண்கள் மனு கொடுத்த னர். நீண்ட வரிசையில் பெண்கள் வெயிலில் காத்துக் கிடந்து விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இது தவிர ரேஷன் அட்டை, ஆதார் அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்க, பெயர் சேர்க்க- நீக்க, முகவரி மாற்ற விண்ணப்பித்தனர். முக்கியமாக ஆன்லைன் பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் குறித்தும் விண்ணப்பம் கொடுத்தனர்.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,949 மனுக்கள் முகாம்களில் பெறப்பட்டு உள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 7,518 பெண்கள் மனு கொடுத்து உள்ளனர்.
அதில் 25-வது வார்டில் 856 பேர்களும், வார்டு 38-ல் 1432 பேர், வார்டு 76-ல் 822 பேர், வார்டு 109-ல் 1435 பேர், வார்டு 114-ல் 905 பேர், வார்டு 143-ல் 1230 பேர், வார்டு 168-ல் 838 பேர் என மொத்தம் 7518 பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னையில் இன்று வார்டு 1, 20, 79, 94, 167, 179 ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் வாங்கப்பட்டது. காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.
எண்ணூர் விநாயகர் கோவில் அருகில், மணலி மண்டப அலுவலகம், அம் பத்தூர் விஜயலட்சுமிபுரம், வில்லிவாக்கம் சிட்கோ நகர், நங்கநல்லூர் ஸ்கேட்டிங் மையம், திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மனுக்களை வாங்கும் அதிகாரிகள் 45 நாட்களில் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொறுமையுடன் பொது மக்களுக்கு பதில் அளித்தனர்.
- அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார்.
- சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னை:
அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, பொதுச்செயலாளர் ராதிகா ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசும்போது, பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இப்பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல், எங்கே போய் படுத்து கிடக்கிறார்கள்? கஞ்சா, கொகைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கிடக்கிறார்களா? என அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசி உள்ளார்.
எனவே சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வரும் 18-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- வரும் 20-ந்தேதி தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 18-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 19, 20 ஆகிய தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 20-ந்தேதி தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குறள் 123 லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல்.
- போலிச் சித்திரம், போலிக் குறள்... இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்?
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
13-7-2025 அன்று 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூலைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது.
அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி 'குறள்' பொறிக்கப்பட்டிருந்தது என்பது தான் அதிர்ச்சிச் செய்தி.
'குறள் 944' என்று பொறிக்கப்பட்ட 'குறள்' திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது
குறள் 123 லிருந்து திருடி, திருத்தி இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது ஒரு தரம் தாழ்ந்த செயல்.
காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை 'குறள்' என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல்.
போலிச் சித்திரம், போலிக் குறள்... இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என்று பதிவிட்டுள்ளார்.
- திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு பெற்றார்.
- வருகிற 25ஆம் தேதி எம்.பி.யாக தவி ஏற்க உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வருகிற 25ஆம் மாநிலங்களை எம்.பி.யாக பதவி ஏற்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இது தொடர்பாக கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் "புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்" எனப் பதிவிட்டு, படங்களையும் பதிவிட்டுள்ளார்.
2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பிடித்தது. மக்களவை தொகுதி ஏதும் பெறாமல் தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டது. இதற்குப் பதிலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. அதன்படி ஒரு இடத்தை வழங்கியது.






