என் மலர்tooltip icon

    சென்னை

    • முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு
    • நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை 7 மணியளவில் அருகில் உள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளின் பேச்சால் முதலமைச்சருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    எல்லோருக்கும் வணக்கம். நேற்று கேள்விப்பட்ட ஒரு செய்தியால் மனது சரியில்லை. அது என்னவென்றால் நமது முதல்வர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கேள்விப்பட்டதும் மனசே சரியில்லை. கூடிய விரைவில் அவர் குணமாகி வீட்டிற்கு வந்துவிடுவார். என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். அதுபோல அண்ணியின் பிரார்த்தனை நமது முதலமைச்சரை குணப்படுத்தி வீட்டிற்கு கொண்டு சென்று விடும்.

    என்னதான் நாம் மருத்துவமனையில் இருந்தாலும், நமக்கு ட்ரீப்ஸ் ஏறினாலும், மருத்துவர் நம்மை பார்த்துக்கொண்டாலும், மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அதைவிட பூரணமாக குணம் அடைந்து வரவேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி இருக்கு. அது என்ன என்று கேட்டால்...

    முதலமைச்சர் ஒரு நிகழ்வில் பேசும்போது , காலையில் நான் கண்விழித்து எழுந்திருக்கும்போது நம்மவர்கள் யாராவது எதையாவது பண்ணிடக்கூடாது என்று எழுந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு மனஉளைச்சல் இருக்கு பாருங்க. இதுல கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் செய்கின்ற செயல்கள், நீங்கள் பேசும் வார்த்தைகள் இதையெல்லாம் உங்களை பாதிக்கிறதோ இல்லையோ... தலைவரை போய் பாதிக்கும். முதலமைச்சரை பாதிக்கும். அதுக்காகத்தான் அவர் அந்த வார்த்தை சொல்கிறார். தயவு செய்து இனிமேல் நீங்கள் பேசும் பேச்சிலோ, செயலிலோ கொஞ்சம் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால்? நம்ம முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு. நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.

    த.வெ.க.வில் இருந்து சமீபத்தில் விலகிய சகோதரி வைஷ்ணவி ஒரு புகார் கொடுத்துள்ளார். தலைவர் அறிக்கை விடுகிறார் என்பதை தாண்டி, ஒரு கட்சியில இருக்கோம், ஒரு புது கட்சி தொடங்கியிருக்கிறது, எந்தவித பாதிப்பும், அவமானமும் நம்ம கட்சிக்கும், தலைமைக்கும், தலைவருக்கும் வரக்கூடாது என்பது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ரொம்ப முக்கியது. அப்படிப்பட்டவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி முடிக்க பார்க்க வேண்டும் என்றார்.


    • தமிழகத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் 3 பேரின் பெயர் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ள 10 பேர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் சங்கர் ஜிவால், அடுத்த மாதம் 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து அடுத்த டி.ஜி.பி.யை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்காக தமிழகத்தின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் தற்போதைய டி.ஜி.பி. ஆகியோர் அடுத்த மாதம் டெல்லி செல்ல உள்ளனர்.

    டெல்லியில் யூ.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகளும் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் 3 பேரின் பெயர் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ள 10 பேர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளனர்.

    இவர்களில் மத்திய அயல் பணியில் டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள சஞ்சய் அரோரா இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இவரை தவிர்த்து சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.

    6 மாதத்திற்குள் ஓய்வு பெறும் அதிகாரிகளை டி. ஜி.பி. பட்டியலில் சேர்க்க முடியாது என்பது யூபிஎஸ்சி விதிகளில் ஒன்றாகும்.

    இதனால் விரைவில் ஓய்வு பெற உள்ள அபய்குமார் சிங்கின் பெயர் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பும் பட்டியலில் இடம்பெறு வதற்கு வாய்ப்பு இல்லை.

    மீதமுள்ள 8 பேரில் 1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சீமா அகர்வால், 1992 பேட்ச் அதிகாரிகள் ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் உட்பட 8 அதிகாரிகள் பட்டியல் விரைவில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    இதற்கு முன்பு, 30 ஆண்டுகள் காவல் துறையில் பணி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் இந்தப் பட்டியலில் சேர்வதற்குத் தகுதியுடையவர்களாக இருந்தனர். அதன்படி சீனியர்கள் மட்டுமே இறுதி பட்டியலில் இடம் பெற்று வந்தனர்.

    ஆனால் மத்திய உள்துறையின் புதிய விதிகளின் படி, 16-வது ஊதிய குழு அட்டவணையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அனைவருமே டி.ஜி.பி. பணியிடத்திற்கு தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள விதிகளின் படி, மாநில அரசு கொடுக்கும் பட்டியலில், சீனியாரிட்டி அடிப்படையில் 3 அதிகாரிகளை யூ.பி.எஸ்.சி. தேர்ந்தெடுத்து மாநில அரசிடம் வழங்கும். அவர்களில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி.யாக தேர்வு செய்யும்.

    இதன்படி தமிழக புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வரும் சீமா அகர்வால் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன்மூலம் டி.ஜி.பி. அந்தஸ்தை எட்டிப் பிடிக்கும் 2-வது பெண் அதிகாரியாக சீமா அகர்வால் திகழ்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பெண் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் ஏற்கனவே பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
    • குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4-ல் உள்ள 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த 12-ந்தேதி தேர்வு நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

    தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்.

    குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் தேர்வில் அளித்த விடை சரியானதா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக Answer Key வெளியாகியுள்ளது.

    குரூப் 4 தேர்வுக்கான Answer Key தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

    • 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது
    • QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

    ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " மெட்ரோ இரயில் நிலையங்களில் CMRL பயண அட்டை (Travel Card) பயன்பாட்டிலிருந்து தேசியபொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC Card - சிங்கார சென்னை அட்டை) மாற்றப்படவுள்ளது.

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க CMRL பயணஅட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC Card -சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது. 01.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

    பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசியபொது போக்குவரத்து அட்டையை (NCMC) எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுபோக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.

    • நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனையானது.
    • நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,285 ரூபாய்க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74,280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.



    நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 128 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440

    20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360

    18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880

    17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-07-2025- ஒரு கிராம் ரூ.126

    20-07-2025- ஒரு கிராம் ரூ.126

    19-07-2025- ஒரு கிராம் ரூ.126

    18-07-2025- ஒரு கிராம் ரூ.125

    17-07-2025- ஒரு கிராம் ரூ.124

    • ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட உட்கட்டமைப்பையும் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

    தென் மாநிலங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு 5 இடங்களை தேர்வு செய்து நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடங்கியது.

    ராமநாதபுரம் மாவட்ட உட்கட்டமைப்பையும் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள 5 இடங்களில் விமான நிலைய ஆணையம் விரைவில் ஆய்வு செய்து இடத்தை முடிவு செய்ய உள்ளது.

    • வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் மற்றும் பெங்களூருவில் இருந்தும் பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணிய தலமான ராமேசுவரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதன்படி வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    எனவே நாளை (புதன்கிழமை) அன்று சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்திற்கும், வருகிற 24-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • இந்த நூல் உருவான வகையில் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டியது என் கணவருக்குதான்.
    • இந்த நூல் என் கணவர் பற்றியும், என்னை பற்றியும், எங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பற்றியும் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் 'அவரும், நானும்' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். இதை அவர், புத்தகமாக வெளியிட விரும்பினார். அதன்படி 'அவரும், நானும்' புத்தகத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது.

    இந்த புத்தகத்தின் 2-ம் பாகத்தை கடந்த 19-ந்தேதி அன்று வெளியிடுவதற்கு துர்கா ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க.முத்து மரணம் அடைந்ததால் இந்த விழா நேற்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் இந்த விழா திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்று கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவை ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் என்று துர்கா ஸ்டாலினிடம் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' 2-ம் பாகம் புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

     


    2-ம் பாகத்தின் முதல் பிரதியை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட்டார். அதனை 'டாபே' குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதியை துர்கா ஸ்டாலினின் பேரன்கள் இன்பநிதி, நலன் சபரீசன், பேத்திகள் தன்மயா, நிலானி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டு ஆணைய தலைவருமான பவானி சுப்பராயன், கோவை சந்திரா, ஜி.ஆர்.ஜி.நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    துர்கா ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:-

    பத்திரிகையில் வெளிவந்த 2 பாகங்களுக்கு பிறகு, என்னுடைய கணவர் முதலமைச்சரான பிறகான நிகழ்வுகளை புதிய அத்தியாயங்களாக இதில் சேர்த்துள்ளோம்.

    இந்த நூல் உருவான வகையில் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டியது என் கணவருக்குதான். மனப்பூர்வமாக, முழுமையாக எனக்கு ஆதரவு அளித்து, 'நீ எழுது துர்கா' என சொல்லி உற்சாகப்படுத்திய எனது கணவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்த நூல் என் கணவர் பற்றியும், என்னை பற்றியும், எங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பற்றியும் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல்.

    சிறப்பாக விழா நடக்கட்டும் என என்னை வாழ்த்தி அனுப்பியதே, மருத்துவமனையில் இருந்து விழாவை பார்த்துக்கொண்டு இருக்கும் என் கணவர் தான்.

    எப்போதும் என்னுடைய கணவர் உங்களில் ஒருவன் நான் என்று சொல்லுவார். நூலும் அதே தலைப்பில் வெளியிட்டார். அதேபோல், நானும் உங்களில் ஒருத்தியாக இருக்கவே எப்போதும் ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வரவேற்று பேசினார். 'உயிர்மை' நிர்வாக ஆசிரியர் செல்வி ராமச்சந்திரன் நன்றி கூறினார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களும், தி.மு.க. வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், நக்கீரன் கோபால், கிருத்திகா உதயநிதி, லோகநாயகி, புத்தகத்தின் பதிப்பாளர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் மற்றும் துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வரிசையாக வந்து துர்கா ஸ்டாலினிடம் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.

    • அடுத்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும்.
    • தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2026 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சி தான் அமையும். கட்சியினரை குஷிப்படுத்த கூட்டணி ஆட்சி என்று பேசுவதை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

    அடுத்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும். தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    சீமான், விஜய் தரப்புடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த மனமுடைய அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், விஜய், சீமான் தரப்பும் அடங்கும் என்றார்.

    இதனிடையே, பா.ஜ.க. கூட்டணி உடையுமா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உடைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று கூறினார். 

    • தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதலமைச்சருக்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
    • முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், வழக்கம் போல் காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்றார்.

    அங்கு தி.மு.க.வில் இணைய வந்திருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவை இன்முகத்துடன் வரவேற்றார்.

    அதன் பிறகு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவாலயம் வந்திருந்தார். அவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் கொளத்தூர் தொகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு உட லில் வியர்க்க தொடங்கியது. சோர்வாகவும் காணப்பட்டார்.

    இதனால் உடனே ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு போகுமாறு கூறினார். உடனே அவரது கார் 'கான்வாய்' அப்பல்லோ ஆஸ்பத்திரி நோக்கி சென்றது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றதும் நேற்று காலை 10.40 மணியளவில் அவருக்கு டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் பெரிய அளவில் அவருக்கு பிரச்சனை ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் முதலமைச்சரின் நேற்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன் திருப்பூர், கோவை செல்ல இருந்த பயணமும் ஒத்தி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்து விட்டு சென்றனர்.

    அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்களும் ஆஸ்பத்திரிக்கு பார்க்க சென்றனர். அப்போது துரைமுருகன் கூறுகையில், 'முதலமைச்சர் நலமாக இருப்பதாக கூறினார்.

    இந்த நிலையில் நேற்று முழுவதும் ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை 7 மணியளவில் அருகில் உள்ள தேனாம் பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

    'முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு காலை 9.30 மணியளவில் திரும்பினார். அங்கு முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர்.

    • ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர்.
    • இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா (வயது 32). இவர், நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார்.

    அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து சினேகா கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து டிரைவர் பிரசாத்துக்கும், சினேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும் இருவரும் தாக்குதலை கைவிடவில்லை.

    சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சினேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சினேகா மற்றும் அவரது தோழியுமே ஆட்டோ டிரைவர் பிரசாத்தை முதலில் ஒருமையில் திட்டி அவதூறாக பேசினர் என்பதும், அதன் பேரில் பிரசாத் அவர்களை ஆட்டோவிலிருந்து இறங்க சொன்னதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஆட்டோ டிரைவர் பிரசாத்திடம் புகார் பெறப்பட்டு சினேகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • சர்தார் படேல் ரோடு, தரமணி, ஸ்ரீராம்நகர் 1 முதல் 4 -வது தெரு வரை.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தரமணி: வி.எச்.எஸ். மருத்துவமனை, சர்தார் படேல் ரோடு, தரமணி, ஸ்ரீராம்நகர் 1 முதல் 4 -வது தெரு வரை, பள்ளிபேட்டை, ஸ்ரீராம்நகர் மெயின் ரோடு மற்றும் காலனி, பள்ளிபேட்டை மெயின் ரோடு, பஜனை கோவில் தெரு, யோகி தோட்டம், புதிய தெரு, கந்தசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    சிறுசேரி: சிறுசேரி சிப்காட் நவலூர், தாழம்பூர் பகுதி, சிறுசேரி மற்றம் காரணை கிராமம், ஏகாட்டூர், ஓஎம்ஆர் நாவலூர், படுபாக்கம், எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், ஒலிம்பியா, சாந்தியா கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    ×