என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சருக்கு மருத்துவ பரிசோதனை
- தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதலமைச்சருக்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
- முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், வழக்கம் போல் காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்றார்.
அங்கு தி.மு.க.வில் இணைய வந்திருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவை இன்முகத்துடன் வரவேற்றார்.
அதன் பிறகு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவாலயம் வந்திருந்தார். அவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் கொளத்தூர் தொகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு உட லில் வியர்க்க தொடங்கியது. சோர்வாகவும் காணப்பட்டார்.
இதனால் உடனே ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு போகுமாறு கூறினார். உடனே அவரது கார் 'கான்வாய்' அப்பல்லோ ஆஸ்பத்திரி நோக்கி சென்றது.
அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றதும் நேற்று காலை 10.40 மணியளவில் அவருக்கு டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் பெரிய அளவில் அவருக்கு பிரச்சனை ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் முதலமைச்சரின் நேற்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன் திருப்பூர், கோவை செல்ல இருந்த பயணமும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்து விட்டு சென்றனர்.
அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்களும் ஆஸ்பத்திரிக்கு பார்க்க சென்றனர். அப்போது துரைமுருகன் கூறுகையில், 'முதலமைச்சர் நலமாக இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று முழுவதும் ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை 7 மணியளவில் அருகில் உள்ள தேனாம் பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
'முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு காலை 9.30 மணியளவில் திரும்பினார். அங்கு முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர்.






