என் மலர்tooltip icon

    சென்னை

    • பூத் கமிட்டியினர் வாக்காளர் விவரங்களை சேகரித்து நிரப்ப தலைமையில் இருந்து படிவமும் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் விசாரிக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை தீவிரமாக கண்காணிக்க தி.மு.க.வில் 8 மண்டல பொறுப்பாளர்களுக்கு கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி மண்டல பொறுப்பாளர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, செந்தில்பாலாஜி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. இவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதற்காக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுக்கு சென்னையிலும், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர் குழுவினரால் ஒவ்வொரு தொகுதியிலும் எஸ்ஐஆர் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பூத் கமிட்டியினர் வாக்காளர் விவரங்களை சேகரித்து நிரப்ப தலைமையில் இருந்து படிவமும் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.

    மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக 8 வழக்கறிஞர் குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் விசாரிக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு பக்கம் எஸ்ஐஆருக்கு எதிராக தி.மு.க. சட்டப் போராட்டம் நடத்தினாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து அதில் நடைபெறும் தவறுகளை கண்டறிய வேண்டும் என்று முன்னணி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

    • நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர்.
    • ஆசிரியர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டியது அவசியம் ஆகும். 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், முனைவர் பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குதல், ஆசிரியர்களுக்கான (சி.ஏ.எஸ்.) பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கல், அயற்பணியிட ஆசிரியர்களை உள்ளெடுப்பு செய்தல் உள்ளிட்ட ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, போராடி பெற்ற சட்டப்படியான உரிமைகளும் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இவைகள் அவர்களது உரிமைக்கு எதிரானது.

    நீண்ட காலமாக தகுதிக்கு ஏற்ற உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். ஆகவே ஆசிரியர்கள், ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட பல்கலைக் கழக நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மகர விளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக காக்கி நாடா, கோட்டயம் சிறப்பு ரெயில் உள்பட 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, காக்கி நாடா, கோட்டயம் சிறப்பு ரெயில் உள்பட 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி காக்கிநாடா டவுனில் இருந்து வருகிற 17 -ந்தேதி மற்றும் டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 18-ந் தேதி மற்றும் டிசம்பர் 2, 9, 16, 23, 30 ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரெயில் (07110) இயக்கப்படும். இந்த ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

    மகாராஷ்டிரா ஹசூர் சாஹிப் நாந்தேட்-கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரெயிலும், தெலுங்கானா சார்பள்ளி-கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
    • ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

    சென்னை:

    நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

    அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக

    இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
    • ஸ்ரீகாந்த் வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.

    சென்னை:

    போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்தை கடந்த ஜூன் 23-ந்தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் போதை பொருள் பயன்படுத்தியதாக மற்றொரு நடிகரான கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்தனர்.

    நடிகர் ஸ்ரீகாந்த் அடிக்கடி கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரிடம் அதிகளவில் பணம் கொடுத்து போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனால் சட்டவிரோத பணம் அதிகளவில் பரிமாற்றம் செய்து இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணை மூலம் உறுதியானது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்டமாக கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    அந்த சம்மனை ஏற்று கிருஷ்ணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரி முன்பு நேரில் ஆஜரானார்.

    இதற்கிடையே கடந்த 28-ந்தேதி உடல் நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராக முடியவில்லை என்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கத்துறைக்கு தெரிவித்திருந்தார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வரும் 11-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்த் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்.

    அவரிடம் எந்தந்த நடிகைகளுக்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவிலேயே SIR-ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.
    • இ.பி.எஸ். தனது கட்சியை அடமானம் வைத்தது மட்டுமின்றி, தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்க முயல்கிறார்.

    இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சரியான வாக்காளர் பட்டியலுடன் முறைகேடுகள் இல்லாத தேர்தலை நடத்தவும், அதற்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதிலும் தி.மு.க.வுக்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், போதுமான கால அவகாசம் தராமல், அவசர அவசரமாக SIR பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதாலேயே தி.மு.க. எதிர்க்கிறது.

    பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்காளர்களை நீக்கம் செய்யும் சதியைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கவும், SIR-க்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நடத்தியிருக்கிறது தி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, ஜனநாயகத்தின் அடிப்படையான வாக்குரிமையைப் பறிக்கும் SIR -ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

    ஆரியம், திராவிடம் பற்றிக் கேட்டால், "அதற்கெல்லாம் புராணம் படிக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும்" எனச் சொன்ன பழனிசாமிக்கு, ஜனநாயகம் பற்றி மட்டும் தெரிந்துவிடுமா? ஜனநாயகத்தின் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாத அ.தி.மு.க., தமிழர்களின் வாக்குரிமையைப் பற்றியா கவலைப்படும்? தமிழர்களின் வாக்குரிமை காப்பாற்றப்பட வேண்டும் எனத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடங்கி, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவது வரை திமுக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க.வோ SIR-ஐ ஆதரித்து வழக்கு தொடருந்திருக்கிறது.

    'உங்க ஓட்டு உங்களுக்கு இல்லை' எனச் சொல்லி வாக்குரிமையைப் பறிப்பதற்குத் துணை போகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். பா.ஜ.க. கூட SIR-ஐ ஆதரித்து வழக்கு போடாத நிலையில், பா.ஜ.க.வின் கிளைக் கழகமாகவே செயல்படும் அ.தி.மு.க.வும் அதன் 'சிறந்த அடிமை'யான பழனிசாமியும் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். ''இந்தியாவிலேயே கார் வைத்திருக்கும் கரகாட்டக் கோஷ்டி நாம்தான்'' என்ற காமெடி போல, இந்தியாவிலேயே SIR-ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

    தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற உண்மை தெரிந்துவிட்டதால், SIR மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என பா.ஜ.க.வை நம்பி, சித்து விளையாட்டில் இறங்கியிருக்கிறார் துரோகம் செய்வதில் முனைவர் பட்டம் பெற்ற பழனிசாமி. கூவத்தூரில் 'ஊர்ந்தெடுக்கப்பட்டு' முதல்வர் ஆனது போல, SIR மூலம் கொள்ளைப்புற முதலமைச்சராகத் துடிக்கிறார். பா.ஜ.க.வின் வாக்கு திருட்டு வியூகம் அ.தி.மு.க.வுக்குப் பயன்படும் என்ற நப்பாசையில் SIR-ஐ ஆதரிக்கிறார் பழனிசாமி.

    முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை ஆதரித்துவிட்டு, ''முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" எனப் பச்சைப் பொய் சொன்ன பழனிசாமிதான், அந்த CAA சட்டத்தை SIR வழியாக அமல்படுத்தத் துடிக்கும் பா.ஜ.க.வுக்குத் துணை போகிறார். SIR நடவடிக்கையால் தமிழர்களின் வாக்குரிமைக்கு மட்டுமல்ல; அவர்களின் குடியுரிமைக்கே ஆபத்து ஏற்படலாம் என்கிற பேராபத்து சூழ்ந்திருக்கிறது.

    வேளாண் சட்டம், உதய் மின் திட்டம், மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினைக்கு காரணமான MINES AND MINERALS திருத்தச் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பா.ஜ.க. ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டங்களையும் திட்டங்களைக் கண்களை மூடி ஆதரித்து, சிறந்த அடிமையாக விளங்கி வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது SIR-லும் 'ஆலம்பனா நான் உங்கள் அடிமை' என முன்னுக்கு வந்து நிற்கிறார்.

    பீகாரில் SIR பணி நடைபெற்ற போது, பா.ஜ.க.வின் கூட்டணியில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் வழக்கு தாக்கல் செய்யவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி SIR நடவடிக்கையை ஆதரித்து வழக்கு போடவில்லை. மாறாக, இஸ்லாமியர்களின் குடியுரிமையைச் சோதிக்கும் வகையில் SIR நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தக் கூடாது என்று கவலை தெரிவித்துள்ளது. ஆனால், 'அடிமை சேவை செய்வதே என் தவ வாழ்க்கை' என வாழ்ந்து கொண்டிருக்கும் பழனிசாமி, SIR-ஐ ஆதரித்தோடு வழக்கு போட்டு ராஜ விஸ்வாசத்தைக் காட்டுவது வெட்கக்கேடு.

    மக்களைப் பற்றியும் மக்கள் நலனைப் பற்றியும் துளியும் கவலையில்லாமல் டெல்லி எஜமானர்களின் மனம் குளிர மட்டுமே அடிமை சேவகம் செய்து வரும் பழனிசாமி தனது கட்சியை அடமானம் வைத்தது மட்டுமின்றி, தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்க முயல்கிறார். இந்த அற்ப செயலுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி அளிப்பார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!
    • தொடர்ந்து செயலாற்றுவோம்!

    சென்னை:

    தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், #SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் -

    மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline -

    களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!

    தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்! என்று கூறியுள்ளார். 



    • கோவில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க.
    • மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு கண்டனம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோவில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    கோவில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?

    பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு.

    ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கோவில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் திமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    • வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான்.
    • ஒரே நேரத்தில் பல மாங்காய்களை அடிக்கக்கூடிய வேலைகளை RSS செய்கிறது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை மிண்ட் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

    * SIR குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய முதல் மாநிலம் தமிழ்நாடு.

    * வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவ்வப்போது நடந்து கொண்டிருக்கும் ஒன்று தான்.

    * SIR என்பது தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலைதிட்டம் அல்ல.

    * SIR என்பது நமது குடியுரிமையை ஆய்வு செய்யும் செயல் நடவடிக்கை, இது ஒரு மறைமுக செயல் திட்டம்.

    * தற்போது செயல்படுத்துவது பா.ஜ.க.வின் திட்டம் அல்ல, RSS-ன் செயல் திட்டம்.

    * ஒரே நேரத்தில் பல மாங்காய்களை அடிக்கக்கூடிய வேலைகளை RSS செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.
    • ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை மிண்ட் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:

    * பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.

    * தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைத்தடியாக நடந்து கொள்வதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.

    * மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒத்து ஊதும் நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

    * ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

    * தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வினரை களத்தில் இறக்கிவிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை அரங்கேற்றச் செய்து வருகிறார்.
    • ஒருபுறம் ஒப்பாரி வைத்துக் கொண்டு இன்னொரு புறம் மோசடிகளை அரங்கேற்றுவதுதான் காலம் காலமாக தி.மு.க.வினரின் முழுநேரத் தொழில்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் அரசு ஊழியர்களுக்கு பதிலாக தி.மு.க.வினரே கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுத்து திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெறக்கூடும் என்று முகாரி ராகம் பாடிக் கொண்டு, இன்னொருபுறம் இத்தகைய முறைகேடுகளில் தி.மு.க.வினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டின் பல ஊர்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பதிலாக தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு, இளைஞரணி ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளே வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கீட்டு விவரங்களை நிரப்பி வாங்குகின்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு மட்டுமே படிவங்களைக் கொடுக்கும் இவர்கள், மற்றவர்களின் வீடுகளுக்கு இதுவரை படிவங்களைத் தரவில்லை. கடைசி நேரம் வரை அவர்களுக்கு படிவங்களைத் தராமல் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தான் தி.மு.க.வின் மறைமுகச் செயல் திட்டமாகும்.

    வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதை எதிர்ப்பதாகவும், இது தி.மு.க. ஆதரவு வாக்காளர்களை நீக்குவதற்கான சதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாரி ராகம் பாடி வருகிறார். இன்னொரு பக்கம் தி.மு.க.வினரை களத்தில் இறக்கிவிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை அரங்கேற்றச் செய்து வருகிறார்.

    ஒருபுறம் ஒப்பாரி வைத்துக் கொண்டு இன்னொரு புறம் மோசடிகளை அரங்கேற்றுவதுதான் காலம் காலமாக தி.மு.க.வினரின் முழுநேரத் தொழில். அந்த வழக்கத்திற்கு இந்தத் தேர்தலும் தப்பவில்லை. இன்னும் கேட்டால் களத்தில் தாங்கள் செய்யும் முறைகேடுகள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது போல தி.மு.க. தொடர் நாடகங்களை நடத்துகிறது.

    தமிழ்நாட்டில் இதே சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அவை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு வெளிமாநில ஐ.எ.எஸ்.அதிகாரியை பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் சட்ட விரோதமான முறையில் ஈடுபடுத்தப்பட்ட தி.மு.க.வினர் மீது சட்டப்படியாக குற்றவியல் நடவடிக்கைகளும், அதற்கு இடம் கொடுத்தவாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளும் உடனே மேற்கொள்ளப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

    ×