என் மலர்tooltip icon

    சென்னை

    • கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளே, செய்தி தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
    • பொம்மை முதல்வரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா?

    அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தினமும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளே, செய்தி தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

    இவை அனைத்தையும் பார்க்கும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் எழக் கூடிய கேள்வி ஒன்றுதான்,

    பொம்மை முதல்வரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா?

    எங்கே இருக்கிறது சட்டம் - ஒழுங்கு?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்றால் அது பரந்தூர் விமான நிலையம் தான்.
    • தேவைப்படும் மீதமுள்ள இடத்தை கூடிய விரைவில் கையகப்படுத்தி புதிய விமான நிலையம் கட்டப்படும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையம் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று விமான நிலைய இயக்குனர் ராஜ கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்ட சேர்மன் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம் உட்பட விமான நிலைய அதிகாரிகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை விமான நிலையத்திற்குள் தற்பொழுது பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் விமான பயணம் செய்யும் பயணிகள் மிக எளிதாக விமான நிலையத்தில் இருந்து தங்களுடைய இருப்பிடங்களுக்கு செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

    விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் இயக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பது உறுதி.

    விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலைய முனையம் வருவதற்கு ஏறக்குறைய 40 நிமிடங்கள் ஆகிறது என்று பல பயணிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விவாதித்தோம். அந்த நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    தற்போது மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் உள்ள பகுதியைச் சுற்றி உள்ள கவுல் பஜார், பொழிச்சலூர், அனகாபுத்தூர் போன்ற இடங்களை கையகப்படுத்தும் பணி இல்லை. சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்றால் அது பரந்தூர் விமான நிலையம் தான்.

    சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுகிறது.

    அதற்காக சுமார் 5700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 2000 ஏக்கர் அரசு நிலம். 3700 ஏக்கர் தனியார் நிலம். தனியார் இடமிருந்து சுமார் 1300 ஏக்கர் தற்பொழுது வாங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மீதமுள்ள இடத்தை கூடிய விரைவில் கையகப்படுத்தி புதிய விமான நிலையம் கட்டப்படும்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது குறித்து கேட்டறிந்தோம். இனிவரும் காலங்களில் தமிழில் முறையாக அறிவிப்பு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
    • சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர்நீதிமன்றக் கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.

    தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

    தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.

    தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதி திராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலேஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
    • வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.

    மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

    தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன்கோவில், கூனிபஜார், லாசன்ஸ்சாலை, வண்ணாரப்பேட்டை.

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை (29.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    திருச்சி:

    வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான வையம்பட்டி, கருங்குளம், ஆசாத் ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பப்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, ஏ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்குடி), என்.புதூர், தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, இளங்காகுறிச்சி, ஆவாரம்பட்டி, ஆலத்தூர், ம.குரும்பப்பட்டி, வலையபட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலகல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி (வடக்கு) பகுதி, இனாம்ரெட்டியபட்டி, பி.குரும்பப்பட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூர், சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னனியாறுடேம் ஆகிய பகுதிகள்.

    இதேபோல் திருச்சி கோர்ட்டு வளாகம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புதுரெட்டித்தெரு, பொன்விழாநகர், கிருஷ்ணன் கோவில் தெரு, பக்காளிதெரு, மத்திய பஸ்நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன்சாலை, ராயல்சாலை, அலெக்ஸ் சாண்டிரியா சாலை, எஸ்.பி.ஐ. காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ்சாலை, அண்ணாநகர், குத்பிஷாநகர், உழவர்சந்தை, ஜெனரல்பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன்சாலை, புத்தூர், அருணாதியேட்டர், கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ்சாலை, சோனாமீனா தியேட்டர், கோர்ட்டு பகுதி, அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன்கோவில், கூனிபஜார், ரெனால்ட்ஸ்சாலை, லாசன்ஸ்சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன்காலனி, ஈ.வெ.ரா.சாலை, வயலூர்சாலை, பாரதிநகர் ஆகிய இடங்கள்.

    கோவை:

    கோவை டாடாபாத் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோவில், மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில், என்.எஸ்.ஆர். ரோடு, பாரதி பார்க் 1, 2, 3 வீதிகள், ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான் பகதூர் ரோடு பகுதி, பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபிள்யூ. மில்ஸ், ராம்நகர், அவினாசி ரோடு, காந்திபுரம் பஸ் நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர், ஆவாரம்பாளையம் பகுதி, டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி ரோடு, சிவானந்த காலனி, ஹட்கோ காலனி, அலமு நகர் ஆகிய இடங்கள்.

    திண்டுக்கல்:

    பழனி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி பழனி டவுன், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், தும்பலப்பட்டி, புளியம்பட்டி, பாறைப்பட்டி, கே.ஜி.வலசு, சின்னக்கலையம்புத்தூர் ஆகிய பகுதிகள்.

    இதேபோல் கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கொடைக்கானல், பூம்பாறை, கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுப்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, கீழ் மலைப்பகுதிகளான பண்ணைக்காடு, ஊத்து, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், கடைசிக்காடு ஆகிய பகுதிகள்.

    • தந்தையின் வழியிலே மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.
    • எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இன்று மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:-

    2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி முத்தமிழறிஞர் கலைஞர் நம்மை விட்டு மறைந்து விட்டார். அதே 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி கோவை இந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்தில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    திரைப்படத் துறையில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மேடையிலே பேசிய நான் நமது இன்றைய முதலமைச்சரை பார்த்து இன்று மஞ்சள் துண்டு போர்த்தப்பட்டு நாளை தமிழக முதலமைச்சராக போகின்ற அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்களே என்று குறிப்பிட்டு பேசினேன்.

    அந்த வாழ்த்து பொய்யாகவில்லை. அடுத்த 3 ஆண்டுக்குள் 2021 ஏப்ரல் 7-ந்தேதி இதோ இங்கு முதலமைச்சராக நம்மிடையே வந்து அமர்ந்துள்ளார்.

    தந்தையின் வழியிலே மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு உங்கள் சார்பில் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த விருதை எனக்கு வழங்கிய இந்த பல்கலைக்கழகத்துக்கு இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் சிறுவயதில் இருந்து அதிகமாக சினிமாக்கள் பார்த்ததில்லை. 14 வயது வரை நான் பார்த்த மொத்த படங்கள் வெறும் 14 தான். அதில் மறக்க முடியாத படங்கள் பராசக்தி, மனோ கரா, இல்லறம், இல்லற ஜோதி, ராஜாராணி போன்ற படங்கள். அந்த படங்களில் கலைஞர் வசனங்களை 15 வயதிலே மனப்பாடம் செய்து விட்டேன்.

    கலைஞர் என்னிடம் நான் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதவில்லை தம்பி. எழுதி பாஸ் செய்தால் ஐ.ஏ.எஸ். போகச் சொல்வார்கள். எனக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. அதனால் பரீட்சை எழுதாமல் தவிர்த்தேன் என்று என்னிடம் சொன்னார்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாத ஒரு இளைஞன், சங்க இலக்கிய பாட்டுக்கு உரை எழுதி உள்ளார். அவரது வசனம் கற்பனையே பண்ண முடியாது. அந்த அளவுக்கு அமைந்துள்ளது.

    அந்த இலக்கிய தாத்தாவுக்கு மகனாக பிறந்து இதோ மேடையில் இருக்கிற அவரது வாரிசு, இன்றைக்கு திறம்பட ஆட்சி செய்து காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், வீடுதேடி மருத்துவம் என்று எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இன்று மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். இவர் மீண்டும் இந்த பதவியிலே நீடிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.

    இவ்வாறு சிவக்குமார் பேசினார்.

    • சென்னையிலும் அதிகமாக மழை பெய்வதற்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.
    • அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மீட்பு குழுக்களை அனுப்பி உள்ளோம்.

    டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:

    * சென்னையிலும் அதிகமாக மழை பெய்வதற்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.

    * டிட்வா புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து நடவடிக்கைளும் எடுத்துள்ளோம்.

    * கடந்த கனமழையின்போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

    * அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மீட்பு குழுக்களை அனுப்பி உள்ளோம்.

    * தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்காக முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. உணவுப்பொருட்களும் கையிருப்பில் உள்ளது.

    * டெல்டா மாவட்ட மக்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வஞ்சிக்காமல் இருந்தால் சரி. அவர் எப்போதும் அப்படி தான் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
    • அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார்.

    • விஜயுடன் கலந்து பேசி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவர் கருத்தை கேட்டுச் சொல்கிறேன்.
    • இன்று மக்கள் இருக்கின்ற மனநிலையில் அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்சனை உருவாகும். நேற்று தான் கட்சியில் இணைந்துள்ளேன். இனிதான் பிரசாரம் செய்ய வேண்டும். இன்று சொந்த நிகழ்வுக்காக கோவை செல்கிறேன்.

    அதில் கலந்துகொண்டு வந்த பின், விஜயுடன் கலந்து பேசி என்ன முடிவுகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவர் கருத்தை கேட்டுச் சொல்கிறேன்.

    நான் எப்படி செயல்பட்டு இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எந்த நிலையில் நின்று பாடுபடுவேன் என்று நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகத்தில் வெற்றி நடை போடுவதற்கு அயராது உழைப்பேன்.

    விஜயுடன் இணைந்து கோபி செட்டிபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வது தொடர்பாக விரைவில் அவருடன் கலந்து பேசி எப்படி பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்வேன்.

    இன்று மக்கள் இருக்கின்ற மனநிலையில் அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. மக்களால் நேசிக்கப்படுகிற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

    2026-ம் ஆண்டு மக்கள் சக்தியால் விஜய் ஆட்சி பீடத்தில் அமருகிற காலம் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செங்கோட்டையன் இன்று தனது வீட்டை விட்டு வெளியே சென்றபோது தனது வாகனத்தில் த.வெ.க. கட்சிக்கொடி கட்டி இருந்தார்.

    • சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது.
    • சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.

    ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் ரூ.94,160 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே கடந்த ஒரு வாரமாக நீடிக்கிறது. கடந்த 21-ந் தேதி விலை குறைந்திருந்த நிலையில், 22-ந் தேதி விலை அதிகரித்தது.

    கடந்த 25-ந்தேதி ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. 26-ந்தேதி கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ.94 ஆயிரத்தை தாண்டியது.

    நேற்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.94,160-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,840-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,720 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 183 ரூபாய்க்கும் கிலோவுக்கு 3 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,160

    26-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    25-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,760

    24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160

    23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-11-2025- ஒரு கிராம் ரூ.180

    26-11-2025- ஒரு கிராம் ரூ.176

    25-11-2025- ஒரு கிராம் ரூ.174

    24-11-2025- ஒரு கிராம் ரூ.171

    23-11-2025- ஒரு கிராம் ரூ.172

    • டிட்வா புயல் சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் டிட்வா புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. தொலைவில் நகர்ந்த நிலையில் தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியை நோக்கி டிட்வா புயல் நாளை மறுதினம் காலை வரும்.

    டிட்வாக புயல் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் புதுச்சேரிக்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

    ×