என் மலர்tooltip icon

    சென்னை

    • புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பொதுமக்கள் பலர் விண்ணப்பித்தனர்.
    • சில மாதங்களாக ரேஷன் கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. அதில் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பொதுமக்கள் பலர் விண்ணப்பித்தனர்.

    அந்த மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் விண்ணப்பித்த, தகுதியான அனைவருக்கும் விரைவில் ரேசன் அட்டைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதன் மூலம் தகுதியான சுமார் 55 ஆயிரம் நபர்களுக்கு விரைவில் முழுமையாக ரேஷன் அட்டைகள் விநியோ கிக்கப்பட உள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரிய 1,07,910 விண்ணப்பங்கள் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சில மாதங்களாக ரேஷன் கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் ரேஷன் அட்டை விநியோகிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகை மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    11 மற்றும் 12-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • நேற்று சற்று குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

    கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    நேற்று சற்று குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000

    04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-12-2025- ஒரு கிராம் ரூ.198

    07-12-2025- ஒரு கிராம் ரூ.199

    06-12-2025- ஒரு கிராம் ரூ.199

    05-12-2025- ஒரு கிராம் ரூ.196

    04-12-2025- ஒரு கிராம் ரூ.200

    • மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம்.
    • ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது

    தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணிகள் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த பணியை தலைமை கழக மேலாளர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து செல்லும் பாதை கழக நிர்வாகிகள் உணவருந்தும் இடம் உணவு தயாரிப்பு கூடம் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அமருமிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    செயற்குழு மற்றும் பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது:-

    கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த கழகத்தின் செயற்குழு பொதுக்குழு ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று இல்லாமல் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திடும் வகையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் எல்லையான கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம். சாலை எங்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகள் மாஇலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்படுகிறது.

    கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .

    இதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது.

    இவ்வாறு பெஞ்சமின் தெரிவித்தார்.

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டம் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
    • 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் என புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.

    • கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?
    • தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கடந்த வாரம் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக, முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில், விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என்று ராகுல்காந்தியின் வியூக அமைப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரவீன் சக்ரவர்த்தி கூறியிருப்பதாவது:-

    * எல்லா சந்திப்புகளுக்கும் பின்னால் ஒரு திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

    * இட்லி, வடை, தோசை சாப்பிடுவது ஒரு சாதாரண சந்திப்பாகவோ அல்லது திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதற்கான சந்திப்பாகவோ கூட இருந்திருக்கலாம்.

    * த.வெ.க தலைவர் விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை.

    * த.வெ.க.வில் இணையும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.

    * விஜயுடனான தனது சந்திப்பால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் என்பது தவறு.

    * கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?

    * தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    * த.வெ.க- காங்கிரஸ் கூட்டணி என ஊடகங்கள் மட்டுமே பேசி வருவதாக கூறினார்.

    • சோனியா காந்திக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • சோனியா காந்திக்கான கொள்கை பாதை இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தட்டும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,

    காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கை தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம், மதச்சார்ப்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான உறுதியான உறுதியை பிரதிபலிக்கிறது.

    சோனியா காந்திக்கான கொள்கை பாதை இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தட்டும் என்று கூறியுள்ளார். 

    • ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார்.
    • அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

    கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. இவர் பா.ஜ.க. மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

    இதனால் பா.ஜ.க. தமிழக மாநில துணைத்தலைவராக 2020-ம் ஆண்டு பதவியேற்றார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு தலைவராக பதவியேற்றார். இதன் பிறகு தமிழக பா.ஜ.க. அரசியல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வந்தது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெறாததே காரணம். அதற்கு அண்ணாமலையே காரணம் என ஒரு சாரார் குற்றம்சாட்டினர்.

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பல திடுக்கிடும் சம்பவங்களை செய்து அண்ணாமலை பேசும்பொருளானார். அதில் ஒன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் கூறி, தமிழக அரசை கண்டித்து அண்ணாமலை ஒரு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் முதல்முறை எனக் கூறப்படும் ஒரு நூதன முறையாக இருந்ததுடன், பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

     

    மேலும், தி.மு.க. ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலணி அணியாமல் வெறும் காலுடன் நடப்பேன் என்று சபதம் எடுத்த அண்ணாமலை சில மாதங்கள் செருப்பு அணியாமல் நடந்து வந்தார். இதன்பின் ஏப்ரல் 12-ந்தேதி அன்று தனது சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணியத் தொடங்கினார்.

    இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை போல் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி ஏற்படக்கூடாது என்று கருதிய டெல்லி மேலிடம் அ.தி.மு.க.வை அணுகியது. அதற்கு அ.தி.மு.க. தரப்பில் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிக்கும் வரை கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார். அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே, அண்ணாமலை பதவியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் மட்டுமே காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது.

     

    அதாவது, கோயம்புத்தூரில் அண்ணாமலை வாங்கிய நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என்றும், அது சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாகவும், மாதத்திற்கு ரூ. 6 லட்சம் வாடகை செலுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு நிலத்தை வாங்குவதற்கு நிதி எப்படி வந்தது என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இதற்கு அண்ணாமலை தரப்பில், ஜூலை 12, 2025 அன்று விவசாய நிலம் வாங்கியது உண்மைதான். அனைத்து நடைமுறைகளும் சட்டப்பூர்வமாகப் பின்பற்றப்பட்டன. நிலத்தை வாங்கத் தனது மற்றும் தனது மனைவியின் சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

    நிலப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வைக்காக ரூ. 40.59 லட்சம் மாநில அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் மற்றும் பால் பண்ணை அமைப்பதற்காகவே நிலம் வாங்கப்பட்டது என்றும், இதற்காக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுவே தான் வாங்கிய முதல் அசையா சொத்து என்றும், அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கையில் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார்.

     

    முன்னதாக, அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்த போது ஆளும் கட்சிக்கு எதிரான கண்டனங்களையும், போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். மேலும், பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் புதிய பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் சில மாதங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் நீடிக்கிறார். ஆனால் 2026-ம் ஆண்டிலும் அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் இருப்பாரா? அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா? இல்லை அதிருப்தியில் தனிக்கட்சி தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.
    • சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்தியாவின் விமான போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. அந்த நிறுவனத்திடம் 434 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மட்டும் 55 சதவீதம் முதல் 68 சதவீதம் வரை உள்ளது.

    இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.

    இதனால், நாடு முழுவதும் இன்று 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 7-வது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை:

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 14-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை.

    சட்டமன்ற தேர்தலுக்காக புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பாஜகவிற்கு திமுகவின் சாதனைகள் தூக்கத்தை கலைத்துவிட்டது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு- அதை ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இன்னும் 77 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்புத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது- அதில் ஒன்று சமீபத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கோவை செம்மொழிப் பூங்கா! சென்னை என்றால் தொல்காப்பிய பூங்கா, கோவை என்றால் செம்மொழிப் பூங்கா என்பதோடு மக்கள் கண்டுகளிக்க- தங்களது பொழுது போக்கிற்கா ஏற்ற பூங்காக்களை திராவிட மாடல் அரசு போல் தமிழ்நாட்டில் அதிமுக அரசும் செய்யவில்லை.

    மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆளும் அரசுகளும் செய்யவில்லை. அதனால்தான் எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது.

    பேருந்து நிலையங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை 158 பேருந்து நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடப் பயணத்திற்கு மட்டுமல்ல- அத்தியாவசியப் போக்குவரத்து தேவைக்கான அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் எனது துறை வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளைச் செய்திருக்கிறது.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். சென்னையில் அதிமுக ஆட்சியில் சாலைகளும்- சப்வேக்களும் ஒரு மழைக்கே வெள்ளக்காடாக காட்சியளித்ததை அனைவரும் அறிவர். ஆனால் இன்று சென்னையில் உள்ள சப்வேக்களில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

    செம்பரம்பாக்கம் என்றாலே அதிமுக ஆட்சிதான் நினைவுக்கு வரும்! அந்த நிலையை மாற்றி எத்தகையை மழை வெள்ளத்திலும்- எத்தனை முறை செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்தாலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து- இன்னலின்றி மழை வெள்ளத் துயரங்களில் இருந்து சென்னை மக்களை காப்பாற்றியிருக்கிறோம்.

    அந்த வகையில் சென்னை மாநகாராட்சியில் மட்டும் 1519 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் பணிகளை செய்துள்ள அரசு இந்த திராவிட மாடல் அரசு மட்டும்தான். இந்த சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத –சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன.

    குறிப்பாக பா.ஜ.க.வினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டு பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல்! எனவே எத தின்னால் பித்தம் தெளியும் என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத்துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள்.

    ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள். தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பா.ஜ.க.வின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரர் மீது 2013ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் "எந்த குற்றமும் நடக்கவில்லை" என ரத்து செய்துவிட்டது.

    அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அமலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி ஒன்றிய பா.ஜ.க. அரசு நிர்பந்திக்கிறது என்றால்- அவர்களுக்குப் பயம் நானல்ல! இந்த துறை செய்துள்ள சாதனைகள்!

    எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும்- எங்கும் "சாதனை- சாதனை- சாதனை" என்றுதான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே ஒன்றிய பா.ஜ.க. அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது! அப்பட்டமான அரசியல் செய்யத் தூண்டிவிடப்படுகிறது.

    மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளைப் பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நான் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனது நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்குதல் நிர்வாகத்துறையைப் பொறுத்தமட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்குதல், மழை நீர் வடிகால் பணிகளை நிறைவேற்றுதல், தலை சிறந்த பூங்காக்களை அமைத்தல் ஆகியவையே முதன்மையான பணிகள்! முழுமையான சாதனைகள்! மற்றபடி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ- அல்லது "அதிமுக- பா.ஜ.க." கூட்டணியினர் "பொய்யையும், புரட்டையும்" மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் கடிதம்.
    • 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவின் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணப்போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ரூ. 1,020,00,00,000 !!!

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் கே.என்.நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.

    கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    மேலும், இதெல்லாம் "Tip of the Iceberg" தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது.

    வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் "கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்" தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

    ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது.

    திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,

    -மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம்.

    -ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம்.

    -பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.

    அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம்.

    இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்?

    காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி.

    உண்மையிலேயே திரு. ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×