என் மலர்tooltip icon

    சென்னை

    • கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
    • கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை!

    சென்னை :

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில்,

    காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!

    எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது.

    இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்!

    மனிதம் காப்போம்! என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவை மேற்கொள்காட்டி, பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

    உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா?

    பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்?

    கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை! என்று கூறியுள்ளார். 



    • காவல் துறையினர் உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டு உள்ளார்.
    • த.வெ.க. முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் வெளியில் வராமல் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வருகிறார்.

    கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    தமிழக வெற்றிக்கழகத்தின் முன்னணி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தமிழக போலீஸ் டி.ஜி.பி., மற்றும் மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதால் மத்திய பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கரூர் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக திட்டமிட்டு உள்ளேன். இதற்கு காவல் துறையினர் உரிய அனுமதியையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இந்நிலையில் கரூர் செல்ல உள்ள விஜய்க்கு பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

    டி.ஜி.பி.யிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க. வழக்கறிஞர்கள், பாதுகாப்பு கோரியதாக கூறி விட்டு சென்றனர்.

    த.வெ.க. குறித்தும், விஜய் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.

    எதுவுமே கூறாமல் செல்கிறீர்களே என செய்தியாளர்கள் கேட்டபோது, சாரி சார் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    • ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
    • த.வெ.க தரப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு முறையீடு செய்யப்பட்டது

    சென்னை:

    கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று த.வெ.க தரப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு முறையீடு செய்யப்பட்டது

    இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி த.வெ.க வினரின் மனுவை நாளை மறுநாள் (10-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு இணைத்து விசாரிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
    • குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள்.

    சென்னை:

    போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அன்புமணி கண்டம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எந்த அளவுக்கு வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு வேதனையான எடுத்துக்காட்டு ஆகும்.

    வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன், தடயங்களை அழிக்கும் நோக்குடன் சிறுமியின் உடலையும் எரித்ததாக அதேபகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் பிணையில் வந்த தஷ்வந்த் தமது தாயையும் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் மும்பையில் கைது செய்யப்பட்ட அவருக்கு குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனையும், மொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் செங்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்தத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட காணொலி மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானவை அல்ல, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று கூறி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்!

    தாயை கொலை செய்த வழக்கிலும் பிறழ்சாட்சியத்தை பயன்படுத்தி கடந்த மாதம் தஷ்வந்த் விடுதலையான நிலையில், இப்போது இந்த வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளார். இந்த வழக்கில் தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? என்ற வினா எழுகிறது. இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை. 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தஷ்வந்துக்கு பிணை கிடைத்தது. அப்போதிலிருந்தே இந்த வழக்கு தடம் மாறத் தொடங்கி விட்டது.

    தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் வலிமையான ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்திருக்க வேண்டும். டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் கூட ஒத்துப்போகும் வகையில் இல்லாததால் தான் தண்டிக்கப்பட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். குழந்தைகள் தான் வாழும் தெய்வங்கள். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனித மிருகத்துக்குக் கூட தண்டனை பெற்றுத்தர முடியவில்லை என்றால் நமது சட்ட செயலாக்க அமைப்பும், வழக்கு நடத்துவதற்கான கட்டமைப்பும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம். இதற்காக அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும்.

    இனிவரும் காலங்களிலாவது இது போன்ற கொடிய வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • மோடியின் சாதனைப் பயணம் 2001-ம் ஆண்டு தொடங்கியது.
    • பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நரேந்திர மோடியின் இந்த சாதனைப் பயணம் 2001-ம் ஆண்டு புஜ் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் தடுமாறி கொண்டிருந்த நிலையில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் தொடங்கியது. அதன்பின் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் 135 நாள்கள் அந்தப் பதவியில் தொடர்வதன் மூலம், ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக அந்த பதவியில் நீடிக்கும் 2-வது தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமாவளவன் வந்த கார் தனது பைக் மீது மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீது சனாதன ஆதரவு வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்திய முயற்சியை கண்டித்து நேற்று விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த தனது பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த விசிகவினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீசார் விசாரணையில், பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீலான ராஜீவ் காந்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "எனது வண்டியின் முன்னாள் இருசக்கர வண்டியின் ஒரு இளைஞர் போய் கொண்டிருந்தார். அந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் எனது வண்டியை கவனித்து திடீரென வாகனத்தை நிறுத்தி விட்டு எனது வாகனத்தை நோக்கி வந்து சத்தம் போட்டார்.

    நான் நமது வையை நிறுத்தாமல் செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் வாகனம் செல்லமுடியாதபடி அந்த இளைஞர் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.

    இதை அறிந்து எனது பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அந்த இளைஞரை தள்ளிபோகுமாறு கூறினர். ஆனால் நான் காருக்குள் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டே அந்த இளைஞர் சத்தம் போட்டு பேசிக்கொண்டே இருந்தார்.

    நமது கட்சியை சேர்ந்த தோழர்கள் அவரிடம் தள்ளிபோகுமாறு கூறியுள்ளனர். அனால் அவர்களிடமும் அவர் முறைத்து பேசியிருக்கிறார். அப்போது அந்த இளைஞருக்கும் கட்சி தோழர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவப்பட்ட கட்சி தோழர்கள் அந்த இளைஞரை அடிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் அந்த இளைஞரை கூட்டி கொண்டு சென்றனர். இது தான் நடந்தது.

    பிரச்னை செய்தது அந்தத் தம்பிதான். இருசக்கர வாகனம் மீது எனது கார் மோதியதாக வெளியான தகவல் தவறு. ஆனால் ஊடகங்கள் இதை பெருக்கி, நாம் திட்டமிட்டே அந்த இளைஞரை அடித்தது போல அவதூறு செய்திகளை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞரின் பைக் மீது மோதவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை விசிக தியூனை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்திருக்கிறார்கள்.
    • காசாவில் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், இஸ்ரேல் அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * காசாவில் நடைபெறும் இனப்படுகொலை மனதை உலுக்கிறது.

    * 11 ஆயிரம் பெண்கள், 17 ஆயிரம் குழந்தைகள், 175 பத்திரிகையாளர்கள், 125 ஐ.நா. ஊழியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    * 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்திருக்கிறார்கள்.

    * உணவுப்பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தபோது 45 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    * உணவு பொருட்கள், மருந்துகள், பால் பவுடர் எடுத்து சென்ற தன்னார்வலர்களை இஸ்ரேல் கைது செய்தது.

    * காசா மீதான தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    * காசாவில் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    * காசா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    * 14-ந்தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    * மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிறநாட்டு விவகாரம் என்று பார்க்கக்கூடாது.

    * காசாவை மறுகட்டமைப்பு செய்து மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    சென்னை:

    காசா மீது இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், இஸ்ரேல் அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஐ.யு.எம்.எல். பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி துணை பொதுச்செயலாளர் நித்யானந்தன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
    • ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நேரில் சென்று உடல்நலம் விசாரித்தனர். இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தகவல், இமயமலையில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ரஜினிகாந்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

    இதனை தொடர்ந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், "எனக்கு எப்போதும் ஓய்வே கிடையாது" என கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில், டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். 

    • பிரதமர் மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது.

    சென்னை:

    பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    25 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக, மாண்புமிகு பிரதமர் மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது என்று கூறியுள்ளார். 



    • கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
    • நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் ஆறுதல் கூறாமல் இருந்து வந்தார்.

    இதுகுறித்து சமூக வலைதளங்களில் விஜய் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன.

    இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை 'வீடியோ கால்' மூலம் தொடர்பு கொண்டு நேற்று முன்தினமும், நேற்றும் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

    கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.

    அப்போது, இது ஈடு செய்ய முடியாத இழப்பு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக்கழகம் செய்து தரும். நான் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என கூறினார்.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் கரூர் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நேரில் ஆறுதல் கூற த.வெ.க. தலைவர் விஜய் செல்ல உள்ளார். கரூர் செல்லும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க.வினர் இன்று மனு அளிக்க உள்ளதாக கட்சியின் கொ.ப.செ. அருண்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார்.

    ஏற்கனவே நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் அடாவடி முடிவுகளால் உலக நாடுகள் வர்த்தகப் போரை சந்தித்து வருகின்றன. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600

    06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000

    05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-10-2025- ஒரு கிராம் ரூ.167

    06-10-2025- ஒரு கிராம் ரூ.167

    05-10-2025- ஒரு கிராம் ரூ.165

    04-10-2025- ஒரு கிராம் ரூ.165

    03-10-2025- ஒரு கிராம் ரூ.162

    ×