என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தொடங்கியது அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம்
- மாவிலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு வளைவும் அமைக்கப்பட்டிருந்தது.
- செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு 3 நுழைவு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் அ.தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி எந்தவித முக்கியத்துவமும் அளிக்காமல் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனாலும் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்துகொண்டே இருக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, டி.டி.வி. தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இது அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டு இருப்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் இன்று அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களிலும் வருங்கால முதல்வர் என்கிற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. மாவிலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு வளைவும் அமைக்கப்பட்டிருந்தது.
காலை முதலே மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து கொண்டிருந்தன. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை வெளியே இருந்து பார்வையிடும் வகையில் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இருந்தது.
மண்டபத்தின் முகப்பு வாயில் தென்னை ஓலை, குருத்துக்களால் இரட்டை இலை சின்னத்துடன் அழகுற அமைக்கப்பட்டு இருந்தது. முகப்பில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கரும்பு தோரணங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
2026 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் என்பதை காட்டும் வகையில் மண்டபத்தின் நுழைவு வாயில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வடிவில் அமைக் கப்பட்டு இருந்தது. மண்ட பத்தின் உள்ளே வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. குடிநீர் வசதி, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டி ருந்தது. தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு 3 நுழைவு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன. செயற்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், பொதுக்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி பாதையும் அமைக்கப்பட்டு இருந்தன.
செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வந்தவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து உறுப்பினர்கள் கார்களில் வந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், திரண்டு நின்று அவருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.






