என் மலர்tooltip icon

    சென்னை

    • தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
    • கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன.

    பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத் துறை அமல்படுத்தி உள்ளது.

    பட்டாசு கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறை இயக்குநரும், டி.ஜி.பி.யுமான சீமா அகர்வால் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பினார்.

    அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடிப்பொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

    தற்காலிக பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

    இந்த ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தீயணைப்புத் துறைக்கு 9,549 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.

    இதில் 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2,499 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

    போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.

    கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால் பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகள் வைக்க தடையில்லா சான்றிதழ் கேட்டு சுமார் 9,177 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன.

    அதில் தகுதியான சுமார் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டன. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    • சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • தமிழகத்தில் ஏ.பிளஸ், ஏ.பி.சி. என 4 வகைகளாக ரவுடிகள் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இதுபோன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரவுடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வழிப்பறி திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுப்பதற்கு போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. வெங்கட்ராமன், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை உள்பட அனைத்து மாநகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் ஏ.பிளஸ், ஏ.பி.சி. என 4 வகைகளாக ரவுடிகள் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இவர்களில் ஏ.பிளஸ் ரவுடிகள் தங்களுக்கு கீழே அடியாட்களை வைத்துக்கொண்டு தாதாக்கள் போல செயல்பட்டு வருபவர்கள் ஆவர். இவர்கள்தான் இருந்த இடத்தில் இருந்த படியே போனில் பேசி மிரட்டி மாமூல் வசூலிப்பது உள்பட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள்.

    சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பெரு நகரங்களில் இதுபோன்ற ஏ.பிளஸ் ரவுடிகளும், ஏ.வகை ரவுடிகளும் தீபாவளி நேரத்தில் வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்களை மிரட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவார்கள்.

    இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் யார்- யார் என்பதை கண்டறிந்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    இதையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறையில் இருந்து விடுதலையாகி சுற்றி திரியும் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் உள்ளிட்டோரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ரவுடிகளோடு கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளையும், பிக்பாக்கெட் திருடர்களையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சுமார் 6 ஆயிரம் ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். 4 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள் ஆகியோர் சென்னை மாநகர் முழுவதும் தங்களது பகுதியில் உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளனர்.

    இப்படி குற்ற செயல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, 'தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் அமைதியான முறையில் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    இது போன்ற பண்டிகை காலங்களில் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மூலமாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

    இதன்படி சென்னை முதல் குமரி வரையில் தலைமறைவு ரவுடிகள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டு உள்ளனர்.

    • தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.
    • பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை.

    சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

    * தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.

    * தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான்.

    * யாருடனும் கூட்டணி கிடையாது. எந்த காலத்திலும் தனித்தே போட்டியிடுவோம்.

    * இறைமகன் இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது.

    * பிறர் தோள் மீது ஏறி நின்று எங்கள் உயரத்தை காட்ட நாங்கள் விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்கள் முன்னேற்றத்தில் மிகப்பெரிய அளவில் விடியல் பயணம் பங்காற்றுகிறது.
    • கிராம ஊராட்சிகளில் நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

     

    எல்லோரும் நல்லா இருக்கீங்களா என பொதுமக்களிடம் கேட்டு தனது உரையை முதலமைச்சர் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான், இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என கூறினார் காந்தியடிகள்.

    * மக்களுடன் மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா.

    * அண்ணா காட்டிய பாதையில் கலைஞர் கருணாநிதி உயர்ந்த லட்சியங்களை செயல்படுத்தினார்.

    * தமிழக வரலாற்றில் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்து கிராம சபை கூட்டங்களை நடத்துவது இதுவே முதல்முறை.

    * பெண்கள் முன்னேற்றத்தில் மிகப்பெரிய அளவில் விடியல் பயணம் பங்காற்றுகிறது.

    * மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * குழந்தைகள் அனைவரும் படிப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

    * நாம் தான் நமது கிராமத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    * 100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    * பல்வேறு திட்டங்களின் கீழ் 21 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தி உள்ளோம்.

    * சமத்துவம், சமதர்மம், சமூகநீதியை நிலையாட்டி வருகிறது திராவிட மாடல் அரசு.

    * கிராமங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

    * சின்ன சின்ன விஷயங்களை செய்தால் பெரிய பெரிய நன்மைகள் வந்து சேரும்.

    * கிராமங்களை சுத்தமாக வைத்திருப்பதில் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

    * தண்ணீரை பணம் போன்று பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும்.

    * மழை நீரை சேமிக்கும் பொறுப்பு நாம் அனைவரிடம் உள்ளது.

    * இழிவான தன்மையுடன் சாலை பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * கிராம ஊராட்சிகளில் நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

    * மக்கள் முன்வைக்கும் குறைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    • தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
    • அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க.வினர் கொடிகளுடன் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.

    இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.

    அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.

    இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அ.தி.மு.க. பலவீனமாகி விட்டது.

    * அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்.

    * த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணி வருவார் என்றால் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார்.

    * எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கி உள்ளார்.

    * அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது. இந்த கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 நாட்களுக்கு பிறகு, நேற்று தங்கம் விலை குறைந்தது.
    • தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

    2 நாட்களுக்கு பிறகு, நேற்று தங்கம் விலை குறைந்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து இருந்தது. ஆனால் பிற்பகலில் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 187 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720

    09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400

    08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080

    07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600

    06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-10-2025- ஒரு கிராம் ரூ.184

    09-10-2025- ஒரு கிராம் ரூ.177

    08-10-2025- ஒரு கிராம் ரூ.170

    07-10-2025- ஒரு கிராம் ரூ.167

    06-10-2025- ஒரு கிராம் ரூ.167

    • கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
    • ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும்.

    தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.

    கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும். சிறப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இது கிராமப்புறங்களிலும் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்புகள் கிடைத்துள்ளன என்பதற்கு சான்றாகும். 11 ஆயிரத்து 100 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் இணைப்புகள் இருந்தாலும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் பேசி முடிந்த பிறகு கிராம சபைகளில் தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவது, மழைநீர் சேகரிப்பு, கொசு - டெங்கு ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் நிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்-அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.

    • புரோ கபடி லீக் ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது.
    • புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மூன்றாவது கட்டமாக சென்னையில் நடைபெற்றது.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடந்த 75-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்சை எதிர்கொண்டது.

    திரில்லிங்கான இந்த மோதலில் டெல்லி அணி 39-33 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, 12-வது வெற்றியை ருசித்தது. அத்துடன், நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இத்துடன் சென்னையில் லீக் சுற்று முடிவுக்கு வந்தன. அடுத்தகட்ட ஆட்டங்கள் டெல்லியில் இன்று தொடங்குகிறது.

    இந்நிலையில், பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடக்கும் இடத்தை புரோ கபடி லீக் நிர்வாகம் நேற்று அறிவித்தது.

    இதன்படி வரும் 25-ம் தேதி தொடங்கும் பிளே-ஆப் சுற்று மற்றும் 31-ம் தேதி அரங்கேறும் இறுதிப்போட்டி டெல்லியில் நடக்கிறது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

    மற்றொரு போட்டியில் யு மும்பா அணி அதிரடியாக ஆடி 48-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

    • உச்சநீதிமன்றத்தில் இரண்டு முறையீடு வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக உத்தரவு.
    • ஒரே நாளில் டெல்லி முதல் மதுரை வரை திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன.

    1) திமுக எம்எல்ஏ-வுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சிறுநீரக திருட்டு குறித்து விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த தமிழக அரசு ஏற்றுள்ளது, ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள அதிகாரிகளை அரசு பரிந்துரைக்கும் என்ற நிபந்தனையை விதித்தது.

    எவ்வளவு வெட்கக்கேடானது!

    2) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் அஞ்சுகிறது?

    3) விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசின் மீது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    4) திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்களில் பிளவுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதியான நீதிபதி விஜய் குமார், நீதிபதி ஸ்ரீமதியின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில் விலங்குகளை பலியிடுவதை தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்று அழைக்க வேண்டும்.

    டெல்லி முதல் மதுரை வரை, நீதி அதன் சொந்த மனசாட்சியை விட வேகமாக திமுக அரசாங்கத்தைத் துரத்துவது போல் தெரிகிறது.

    இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

    • வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
    • வியாசர்பாடி பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று காலை உயிரிழந்தார்.

    அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இன்று காலை 11.30 மணியளவில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதன்பிறகு நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    இதையொட்டி வியாசர்பாடி பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வியாசர்பாடி வீட்டிலிருந்து முல்லை நகர் மயானம் வரையில் நாகேந்திரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வழியிலும் இன்று மாலையில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக நாகேந்திரனின் மகன்கள் அஸ்வத்தாமன், அஜித் ஆகியோர் சிறையில் இருந்து பரோலில் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் இன்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்த ஐகோர்ட்டு, அதற்கென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பிரேத பரிசோதனை செய்வார்கள் என்று தெரிவித்தது. இருப்பினும் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதி சதிஷ்குமார் தெரிவித்தார்.

    • பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு அழைப்பு.
    • ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை உத்தண்டியில் பேசும்போது தெரிவித்ததாவது:-

    * மருத்துவர் ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.

    * ஐயா அவர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். இது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு மருத்துவ பரிசோதனைதான். பரிசோதனை முடிந்து நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.

    * பரிசோதனையை வைத்துக் கொண்டு அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என போன்மேல் போன் போட்டு., இதெல்லாம் அசிங்கமாக உள்ளது.

    * யார் யாரோ வந்து பார்த்துக் கொண்டு போய் கொண்டிருந்தார்கள். வந்து பாருங்க., வந்து பாருங்க.. எனச் சொல்லிக்கிட்டு.., அவர் என எக்சிபிஷனா?

    * ஐயா பாதுகாப்பிற்கான, அருகில் யாரையும் விடமாட்டேன். இவர்கள் கதவை தட்டி நேராக சென்று., ஐயாவை தூங்க விடவில்லை.

    * ஐயாவுக்கு ஏதாவது ஒன்று ஆட்சினா., தொலைச்சிப் போட்டுருவேன். சும்மா விடமாட்டேன்.

    * வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?.

    * ஐயாவை வைத்து டிராமா செய்து, நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    ×