என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    13-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    14-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமமைபெய்யவாய்ப்புள்ளது

    17-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதனிடையே இன்று முதல் 16-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் படிப்படியாக குறையக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
    • நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார்.

    அவரது மரணம் தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மாதவரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு தீபா விசாரணை நடத்தினார். இதன்பிறகு நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி எஸ்.எம்.நகரில் உள்ள வீட்டுக்கு நாகேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியவுடன் கொடுங்கையூர் முல்லை நகர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், ரவுடி நாகேந்திரன் உடல் முன்னே அவரது 2ஆவது மகன் அஜித் திருமணம் செய்துகொண்டார். அஜித் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஷகினா என்ற பெண்ணுக்கு தாலி கட்டப்பட்டு மாலை மாற்றி கொண்டனர். துக்க நிகழ்வில் இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    அவர் தாலி கட்டிய அந்த சமயம் அருகாமையில் இருந்து அவரது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் சோகத்தில் கண்கலங்கியப்படி அர்ச்சனையை தூவினர்.

    • மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.
    • நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு இன்று அல்லது நாளை மீண்டும் கரூர் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கரூர்:

    கரூரில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினர்.

    த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. கடந்த 3, 4-ம் தேதிகளில் த.வெ.க. உள்ளூர் நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதன்பின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் த.வெ.க. கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் மூலம், த.வெ.க. தலைவர் விஜய் காணொலிக் காட்சி (வீடியோ கால்) மூலம் பேசி ஆறுதல் கூறினார். அப்போது, விரைவில் நேரில் வந்து சந்திப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் உறுதியளித்தார்.

    இந்த நிலையில், விஜய் கரூருக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற அனுமதி கேட்டு சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போது, கரூர் எஸ்.பி.யை சந்தித்து தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு மனு அளித்து அனுமதி பெறலாம் என டி.ஜி.பி. அலுவலகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, த.வெ.க. கொள்கை பரப்புச்செயலாளர் அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் நேற்று கரூர் எஸ்.பி. ஜோஷ் தங்கையாவை நேரில் சந்தித்து, வருகிற 17-ந்தேதி விஜய் கரூர் வர அனுமதி கேட்டு கடிதம் அளித்தனர்.

    அதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூர்-ஈரோடு சாலையில் உள்ள 'கேஆர்வி மெரிடியன் ஹோட்டலுக்கு' வரவழைத்து சந்திப்பதற்கு அனுமதி கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்துக்கு மிக அருகில் அந்த ஹோட்டல் உள்ளதால், அங்கு நிகழ்ச்சி நடத்த காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும், வேறு ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    இதையடுத்து மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர். சேலம் பைபாஸ் சாலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி அட்லஸ் அரங்கம், ஆட்டம் பரப்பு ஜெயராம் கல்லூரி கலையரங்கம் ஆகிய 2 இடங்களை த.வெ.க. நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் அட்லஸ் அரங்கத்தை நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த அரங்கம் வாகன நிறுத்தங்களுடன் விசாலமாக உள்ளதால் இதை நிர்வாகிகள் தேந்தெடுத்துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு இன்று அல்லது நாளை மீண்டும் கரூர் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்ளிட்டோர் தவிர வேறு யாரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று கட்சியினர் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் த.வெ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    • தமிழக அரசு உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.
    • கூட்டுறவு சங்கங்களில் உள்ள உரங்களை உழவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டத்திலும் யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உரம் வைக்க முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர்.

    உரத்தட்டுப்பாட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சரி செய்ய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து வேளாண்மை தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் உள்ள உரங்களை உழவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு தேவையான உரங்களின் விவரம் ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த உரங்களை பெற்று உழவர்களுக்கு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
    • பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்.

    சென்னை:

    பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.

    காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.

    சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து நெல்கைக்கு வழக்கமாக இருந்த கட்டணமான ரூ.1,800 தற்போது ரூ.5,000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கும் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    எனவே பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். விசேஷ நாட்களை பயன்படுத்தி இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

    மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்கினால் ஆம்னி பஸ்களின் பயன்பாடு குறையும். கட்டணத்தையும் குறைக்க வழியுண்டு. எனவே தென் மாவட்டங்களுக்கு பகல் நேர ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். முன்பதிவு இல்லாத ரெயில் சேவையை அதிகரித்தால் ஏழை, நடுத்தர மக்கள் பயணம் செய்ய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • பத்மாவதி நகர், தென்றல் நகர், மூர்த்தி நகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அம்பத்தூர்: சோழபுரம் மெயின் ரோடு, விவேக் நகர், நேரு நகர், இந்திரா நகர், கணபதி நகர், கிருஷ்ணாபுரம் விரிவாக்கம், மாந்தோப்பு பகுதி, மருத்துவமனை ரோடு, அர்ஜூனா நகர், எம்டிஎச் சாலை.

    அலமதி : வன்னியன்சத்திரம், காஞ்சி காமகோடி நகர், ராமாபுரம், கல்லிக்குப்பம், கன்னிகாபுரம், புதுக்குப்பம்.

    பல்லாவரம் மேற்கு: சாவடி தெரு, ஐஎச்எஃப்டி காலனி, ஜிஎஸ்டி சாலை, பல்லாவரம் பேருந்து நிலையம், பான்ட்ஸ் பாலம், அருந்ததிபுரம், வள்ளுவர்பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐஜி சாலை சிக்னல்.

    திருமுல்லைவாயல்: பத்மாவதி நகர், தென்றல் நகர், மூர்த்தி நகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு, வள்ளலார் நகர், முல்லை நகர்.

    • கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    • நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதாளர்ளுக்கு கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இயல், இசை, நாடகக்கலையில் பல ஆண்டுகளாக சேவை செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிலையில், கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில்," என் மேல் ஏன் இவ்வளவு பாசம்? என இசைஞானி இளையராஜா கேட்டார்.

    அவர் மீது நமக்கு இருப்பது கலைப்பாசம், தமிழ்ப்பாசம், தமிழர் என்கிற பாசம். அதனால்தான் பாராட்டு விழா நடத்தினோம்" என்றார்.

    • கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    • நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தலைசிறந்த காலைஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டக்கூடிய வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

    3 ஆண்டுகளுக்கும் சேர்த்து கலைமாமணி விருது வழங்கியதில் எனக்கும் பெருமை. கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். நலிந்த கலைஞர்களுக்கு மாந்தோறும் ரூ.3000 உதவித் தொகை வழங்கி வருகிறோம்.

    ராக்கெட் வேகத்தில் ஒரே நாளில் 2 முறை ஏறுகிறது தங்கம் விலை. தங்கப் பதக்கத்தை விட கலைமாமணி என புகழ் சேர்க்கும் பட்டத்திற்குதான் மதிப்பு அதிகம். ஏனென்றால் இது தமிழ்நாடு தருகிற பட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் விலை காலை, மாலை என இரு வேளையும் உயர்ந்து வருகிறது.
    • காலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.

    இன்று காலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், இன்று மாலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.

    இன்று காலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் தற்போது மேலும், ரூ.600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும்.
    • அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டும்.

    திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 7-ந் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த வி.சி.க.வினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பைக் மீது எனது கார் மோதவில்லை. பிரச்சனை செய்தது அந்த தம்பிதான் என்று கூறி இருந்தார். மேலும் எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' எனவும் கூறினார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து திருமாவளவனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்நிலையில் திருமாவளவின் சந்தேகம் நியாயமானது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    • 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
    • டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளின் பொதுமக்களுக்கு சிறப்புரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இணையத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    வணக்கம். எல்லாரும் நல்லா இருக்கீங்களா?

    நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது, கிராமங்கள்தான். உங்கள் ஆதரவோடு முதலமைச்சரான பிறகு, இப்போது 3-வது முறையாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். வேறெந்த முதலமைச்சரும் இப்படி கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை.

    உங்களில் நிறைய பேர் சுய உதவிக்குழுக்களால் பயனடைந்திருப்பார்கள். துணை முதலமைச்சராக இருந்தபோது, நானே பல மணிநேரம் மேடைகளில் நின்று சுழல்நிதி வழங்கியிருக்கிறேன்.

    இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகதான், மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறோம். நீங்கள் எல்லோரும் கட்டணமில்லாமல் பஸ்சில் செல்கிறீர்களே, அந்த விடியல் பயணத் திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வளவு பெரிய பங்களிப்பை செலுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள்…

    நீங்கள் காலையில், சீக்கிரம் வேலைக்கு போக வேண்டும் என்று அவசர அவசரமாக கிளம்புவீர்கள்.. அதற்கு நடுவில் சமையல் செய்யவேண்டும்.. ஆனால், அந்த சுமையை குறைக்க – அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற நம்முடைய குழந்தைகளுக்கு சத்தாகவும் – சுவையாகவும் காலை உணவு வழங்குகிறோம்.

    நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் காலேஜ் முடித்துவிட்டு வேலைக்குப் செல்வதற்கு தயாராக இருக்கின்ற அளவுக்கு – நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குகிறோம்.

    நம்முடைய பிள்ளைகள் படித்து முன்னேறி வர வேண்டும் என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்படி, ஒவ்வொரு துறையிலும், பல திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

    இவையெல்லாம் முத்திரைத் திட்டங்கள். இதே போல, கிராம வளர்ச்சிக்கு என்று பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். கிராம மக்கள் தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சிப் பாதையில், கிராம ஊராட்சியை கொண்டு செல்லவும், உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம்.

    அதற்காக, ஆண்டுதோறும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தக் கிராம சபைக் கூட்டங்கள்தான், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கின்ற முக்கிய தருணம்.

    நம்முடைய கிராமங்களின் தற்போதைய தேவைகள், வளர்ச்சி இலக்குகள் மற்றும் நலன்கள் குறித்து நேரடியாக விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

    நம்முடைய திராவிட மாடல் அரசு - சமூகநீதி, சமத்துவத்தை நிலைநாட்ட, சுயமரியாதை அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகதான், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் இழிவான தன்மையோடு சாதிப் பெயர்கள் இருந்தால், அதை மாற்றி பொதுப் பெயர்களை சூட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    மேலும், 'நம்ம ஊர், நம்ம அரசு' என்ற பெயரில், கிராம சபையில் மக்கள் கலந்தாலோசித்து, 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

    அப்படி கண்டறியப்படும் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

    குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிவிடும் வகையில், 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற புரட்சிகரத் திட்டம் துவங்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முடிவெடுத்து, 2024-25-ல் இதுவரை, 99 ஆயிரத்து 453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    2025-26-ல், இன்றைய நிலையில், 78 ஆயிரத்து 312 வீடுகள் கூரை மட்டம் நிலைக்கு மேல் முன்னேற்றத்தில் இருக்கிறது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட் டத்தின்கீழ், கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள், நூலக வசதிகள் போன்ற சேவைகள் விரிவாக்கப்படுகிறது.

    தாயுமானவர் திட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    நம்முடைய வீடு குப்பைக் கூளமாக இருந்தால், சும்மாவா இருப்போம்? நம் எல்லோருடைய வீடும் சேர்ந்ததுதான் நம்முடைய கிராமம்… அதை சுத்தமாக வைத்துக் கொள்கின்ற பொறுப்பு நமக்குதான் இருக்கிறது. முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்… குப்பைகள் – ஊராட்சிகளில் வரு கின்ற பேட்டரி வண்டிகளில், மக்கும் குப்பை - மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துப் போடவேண்டும். கண்ட இடத்தில் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    ஊராட்சி நிர்வாகங்களை சேர்ந்தவர்கள் குப்பைகளை பிரிப்பது, கழிவுநீர் மேலாண்மை பற்றியெல் லாம், மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    என்னடா, இதையெல்லாம் சிறிய சிறிய விஷயம் தானே, இதையெல்லாம் முதலமைச்சர் சொல்ல வேண்டுமா என்று நினைக்கிறீர்களா? சிறிய சிறிய விஷயங்களை நாம் கரெக்டாக செய்தாலே, பெரிய பெரிய நன்மைகள் நிச்சயம் உண்டாகும். நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம் என்று எல்லோருக்குமே தெரியும். இந்த நோயற்ற வாழ்வுக்கு சுகாதாரம்தான் அடிப்படை.

    அடுத்து, மக்களுடைய முக்கிய பிரச்சனையாக இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை. "பணத்தைத் தண்ணியாக செலவழிக்கிறார்கள்" என்று சில பேர் சொல்லுவார்கள்… உண்மையில், "தண்ணியைத் தான் பணம் போல பார்த்து, பார்த்து செலவழிக்க வேண்டும்".

    தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருப்பதற்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமானது. இதனால் தான், நிலத்தடி நீர்வளம் மேம்பட்டு, கிராமங்களுக்கு நீண்டகால நீர்ப் பாதுகாப்பு ஏற்படும். இதற்கான பொறுப்பு, நம்முடைய எல்லோரிடமும் தான் இருக்கிறது.

    எனவே, இதற்காக அரசும், ஊராட்சிகளும் எடுக்கின்ற முயற்சிகளுக்கு நீங்கள் எல்லோரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்து, மழைக்காலம் தொடங்கப் போகிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைத் தடுக்கின்ற சுகாதார நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வீதிகள், குடிநீர், மின்சாரம், வடிகால் போன்ற அடிப்படை சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, அவசரத் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்புக் குழுக்களை அமைத்து, அவசர கால நடவடிக்கைகளை திட்டமிடவேண்டும். இதனால், பேரிடர் நேரங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கலாம்.

    அடுத்து, நான் முக்கியமாக சொல்ல விரும்புவது - கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், நிதி மேலாண்மை வெளிப்படையாக இருக்க வேண்டும். கிராம சபை மூலம் வரவு – செலவு கணக்குகள் மக்களிடம் விளக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலோடு செயல்பட வேண்டும்.

    ஒவ்வொரு ஊராட்சியும் எப்போது, எவ்வளவு செலவிட்டது என்று மக்கள் தெரிந்து கொள்கின்ற வகையில் தகவல்கள் பகிரப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறை வேற்றப்படும்.

    நம்முடைய கிராமங்கள்தான் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரைக்கும், மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதி செய்கின்ற அரசு இது.

    "கிராமத்தின் வலிமை தான் மாநிலத்தின் வலிமை" என்று நம்முடைய செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    ×