என் மலர்
சென்னை
- 26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது.
- அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. இந்த பட்டியல் தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது. அந்த தொகுதிகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் பா.ஜ.க. கட்சிக்கு வாக்குகள் கிடைத்து உள்ளன.
அதனை மையமாக வைத்தே சென்னை முதல் குமரி வரை 50 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கர், மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, வடசென்னையில் கொளத்தூர், தென்சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.
கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், தர்மபுரி தொகுதியில் பாலக்கோடு, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், ஈரோட்டில் பவானி, கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.
கரூரில் குளித்தலை, கிருஷ்ணகிரியில் ஓசூர், தளி, மதுரையில் மதுரை தெற்கு, நாமக்கல்லில் ராசிபுரம், நீலகிரியில் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளும் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கிணத்துகடவு, தொண்டா முத்தூர், வால்பாறை, ராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி, தென்காசி எம்.பி. தொகுதியில் தென்காசி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போடி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட ஒட்டபிடாரம், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வேலூரில் ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. கட்சி தயாரித்து வைத்துள்ளது.
மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி 50 தொகுதிகளில் களம் இறங்கும் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அமித்ஷா வியூகம் வகுத்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
வருகிற 15-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
- திருவண்ணாமலையில் நாளை மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது.
- நாளை திருவண்ணாமலைக்கு வரும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!
திருவண்ணாமலையில் நாளை மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, "I belong to the Dravidian Stock" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.
நாளை திருவண்ணாமலைக்கு வரும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 15-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர்.
- அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர். மக்கள் பணிகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அவரது வலதுகரமாகத் திகழ்ந்தவர்.
அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது அரசியல் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்!
- தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை!
* பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல்.
* கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி!
* 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி!
* நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்!
* தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி!
* 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி! என்று கூறியுள்ளார்.
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
- தற்பொழுது 30 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது. தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணை பிரச்சனையில் மெத்தனப் போக்காக இருக்கிறது.
இரு மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பங்கீடு செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கபட்டு அவை விடுத்த ஆணையை கர்நாடகா அரசு இதுவரை செயல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. அதோடு தற்பொழுது 30 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மேகதாது அணை கட்ட அனுமதித்தால் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு இனிமேலும் தாமதிக்காமல் மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
- ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.
சென்னை:
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வருகிற 15-ந்தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க.வில் தன்னை சேர்க்க மறுப்பதால் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா? என்று ஆலோசித்ததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பிறகு இப்போது டெல்லி சென்றுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது.
எந்த கூட்டணியில் சேருவது என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 15-ந்தேதியன்று நடத்த இருந்த மாவட்டச்செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை தற்போது ஒத்திவைத்துள்ளார்.
இந்த கூட்டத்தை அவர் டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர். நினைவு நாளில் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது.
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
டிட்வா புயல் (Cyclone Detwah) கடந்த நவம்பர் மாதம் (2025) இலங்கை அருகே உருவாகி, தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று, தமிழகம் உட்பட கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த புயல் ஆகும்.
ஒவ்வொரு புயலும் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டப்படுவது வழக்கம். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டது.
டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது. ஏமனுக்கு அருகில் உள்ள 'சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராகக் கூட இது இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. அரபு மொழியில் டிட்வா என்பதற்கு 'அழகான மலர்' என்றும் கூறப்படுகிறது.
டிட்வா புயல் இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தியது.

இலங்கையில் கடந்த நவம்பர் 16-ந்தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 638 பேர் பலியாகி விட்டனர். 190-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார் 700 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்தியா மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது.

டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு ரூ.316 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவற்றால் பெய்து வருகிறது.

இலங்கையில் 'டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந்தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.
'டிட்வா' புயல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நாகையில் வீடுகளில் புகுந்த மழை வெள்ளம்
சில மாவட்டங்களில் கனமழை, வேறு சில மாவட்டங்களில் அதிகனமழை என கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.
டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின. தோட்டக்கலை பயிர்களும் கடும் சேதத்துக்கு உள்ளாகின.

டிட்வா புயல் காரணமாக நவம்பர் இறுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உட்பட) கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
'டிட்வா' புயல் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழையை கொடுத்தாலும், வடமாவட்டங்கள், உள்மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் இயல்பு அளவான 17.7 செ.மீ.-ல், 14.9 செ.மீ. மழைதான் பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு ஆகும். இது நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 3-வது மோசமான மழைப்பதிவாக ஆகிவிட்டது.
இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு 12.5 செ.மீ., 2024-ம் ஆண்டு 14 செ.மீ. பெய்தது இதற்கு முன்பு மோசமான மழைப்பொழிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களை சேர்த்து பார்க்கும்போது, இயல்பான மழை அளவான 35.3 செ.மீ.-ஐ விட 8 சதவீதம் அதிகமாக அதாவது, 38.3 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
சென்னையிலும் நவம்பரில் மோசமான மழைப்பதிவு இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டு புள்ளி விவரங்களுடன் பார்க்கையில், இது 5-வது மோசமான மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.
- தமிழகத்தில் எஸ்ஐஆர் களப்பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின.
- எஸ்ஐஆர் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, இந்த பணிகளுக்கான கால அளவை தேர்தல் ஆணையம் மேலும் நீட்டித்தது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) நடந்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த பணி நடக்கிறது. 1.1.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இறந்த வாக்காளர்களின் பெயர்கள், இரட்டை பதிவில் உள்ளவர்களை நீக்கவும் தேர்தல் கமிஷன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் களப்பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இந்த பணியின்போது வீடுவீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இந்தப்பணிகள் கடந்த 4-ந் தேதி முடிவடைவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தேதியை 11-ந் தேதி வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.
எஸ்ஐஆர் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, இந்த பணிகளுக்கான கால அளவை தேர்தல் ஆணையம் மேலும் நீட்டித்தது.
அதன்படி தமிழகத்தில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கி பதிவேற்றம் செய்யும் பணிக்கான கால அளவை 14-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பான எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.
கடைசி நாளான நாளை எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
- பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- தமிழகம் முழுவதும் வருகிற 15-ந்தேதி 1,500 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சுப முகூர்த்த தினமான வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளன.
எனவே, கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சுபமுகூர்த்த தினமான வருகிற 15-ந்தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.
அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு, ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் வருகிற 15-ந்தேதி 1,500 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த 1,500 டோக்கன்களும் பத்திரப்பதிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு அதிக அளவில் வருவார்கள் என்பதால் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் பொதுமக்கள் அமருவதற்கு கூடுதல் நாற்காலிகள் போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை ‘கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது.
- இந்த ஆண்டு இறுதிக்குள் ஏன், ஓரிரு நாட்களிலேயே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத காளையாய் துள்ளிக்குதித்து எகிறி வருகிறது. கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் ஒரு சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டியதும், 'என்னது 50 ஆயிரம் ரூபாயை தங்கம் தொட்டுவிட்டதா?' என திகைக்கும் அளவுக்கு விலை உயர்ந்து இருந்தது. அதன்பிறகு விலை கொஞ்சம்கூட குறையவில்லை.
அவ்வாறு விலை உயர்ந்து வந்து, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது.
கடந்த ஆண்டில் இருந்த உயர்வை காட்டிலும், நடப்பாண்டில் தங்கம் விலை, ராக்கெட், ஜெட் என இன்னும் நொடிப்பொழுதில் வேகம் எடுக்கக்கூடிய எதனுடனும் ஒப்பிடும் அளவுக்கு இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. அந்தநேரத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை விரைவில் தாண்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் அதன் விலையில் இடையில் சற்று சரிவு ஏற்பட்டது. அவ்வாறு விலை குறைந்து வந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கு கடந்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி விற்பனை ஆனது. இப்படியே விலை குறைந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்த நேரத்தில், மீண்டும் விலை ஏறத்தொடங்கியது.
அதிலும் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை 'கிடுகிடு'வென உயர ஆரம்பித்தது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.96 ஆயிரத்தையும் தாண்டியது. தொடர்ச்சியாக ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனை ஆனது.
நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம், பிற்பகல் நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதே நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஏன், ஓரிரு நாட்களிலேயே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தநிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆக விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.98,960
11-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,400
10-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,240
09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-12-2025- ஒரு கிராம் ரூ.216
11-12-2025- ஒரு கிராம் ரூ.209
10-12-2025- ஒரு கிராம் ரூ.207
09-12-2025- ஒரு கிராம் ரூ.199
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
- எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு செல்லும் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சலை தலை வெளியீட்டு விழாவிலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார்.






