என் மலர்
சென்னை
- இந்தியா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை.
- பா.ம.க. உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 77 ஊராட்சி ஒன்றியங்கள், 498 கிராம பஞ்சாயத்துக்களையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
மாவட்ட பஞ்சாயத்துக்களில் வெற்றி பெற்றது 3 மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. இதில் ஆளும் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைப் போல, 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்லில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது.
இந்தியா கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணியில் சேர முன்வரவில்லை. பா.ம.க. உள்கட்சி மோதலால் பிளவுபட்டிருக்கிறது. அ.தி.மு.க.விலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வாங்கிய வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் உறுதியாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நம்பிக்கைக்கு ஊக்கம் தருகிற வகையில் கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபார வெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற்றதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன், வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார்.
- முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
திருச்செங்கோட்டில் த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில் வேட்பாளர்களை விஜயே அறிவிப்பார் என்று த.வெ.க. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக த.வெ.க. ஐ.டி. விங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை, வெற்றித் தலைவர் மட்டுமே அறிவிப்பார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களைக் களமிறக்குவார் தலைவர். அதுவரை களத்தைத் தயார்படுத்துவோம். மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
- தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்.
இந்நிலையில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மலை நகரில் மாலை சந்திப்போம்!
Young Dravidians! Prepare for Glory!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா.
- ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும்.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதாகும்.
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளானது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப வரையறை செய்யப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள் வெறுமனே மக்கள்தொகையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை தடுத்து நிறுத்தினர்.
ஆனால், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பை 2026-ம் ஆண்டு நிகழ்த்த உள்ளது.
1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2026 வரை மாற்றக்கூடாது என்ற திருத்தத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார். இதனால், மக்கள்தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன்பின், 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இன்று வரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் செயல்பாடு இருந்துள்ளது. தற்போது 25 ஆண்டு காலம் நிறைவுபெறும் தருணத்தில் பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் இந்த பிரசாரம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். போதுமான கல்வி மற்றும் பகுத்தறிவு இல்லாத சமூகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது.
மக்களிடையே 'நாம் இருவர் - நமக்கு ஒருவர்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள்தொகை பெருக்க அளவை குறைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. இதனால் மனித வளக் குறியீடுகளிலும், தனிமனித பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் சராசரி கருவள விகிதம் 2.1% ஆக இருந்து தற்போது 1.4% என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதிர்வரும் 2031-36-ஆம் கால கட்டங்களில் இது மேலும் குறையும் என்று இந்திய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. கருவள விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார விகிதத்தில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
தொகுதி மறுசீரமைப்பு என்பதை பற்றி பா.ஜ.க. பேசவே இல்லை என்றும், தி.மு.க. தலைவர் வேண்டுமென்றே இது குறித்த வீண் வாதத்தை கிளப்புகிறார் என்றும், மத்திய அரசின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பேசி வருகின்றனர்.
19-9-2023 அன்று பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். அரசியல் சாசனத்தின் 128-வது திருத்த மசோதா-2023 என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று விளக்கம் அளித்தார்.
அடுத்தாக, 28.05.2023 அன்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பில் 543 மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில் 848 இருக்கைகளுடன் பாராளுமன்றத்தை அமைப்பதன் பின்னணி என்ன? இதற்கு வலுசேர்க்கும் விதமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டு தனி பெரும்பான்மையோடு நிலைபெற்ற ஆட்சியை தொடர வேண்டும் என்பதன் அடிப்படை தான் தொகுதி மறுசீரமைப்பின் முழு நோக்கம் ஆகும். இது எப்படி சாத்தியமெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31 என குறையும், அதே வேளையில் பா.ஜ.க. ஆளும் பீகார், உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும்.
2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டால் தென்னிந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதிலிருந்து 103 என குறையும். மக்களவையில் 23.74% உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97% ஆக குறையும். தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இடங்கள் 42ல் இருந்து 34 ஆகும். அதேசமயம், அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

இதை வலியுறுத்தி கடந்த மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் என 63 அமைப்புகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாமல் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.
இதில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, தமிழகத்தின் 7.18 சதவிகிதத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22-ந்தேதி பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021-ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.
1971-2011 இடைபட்ட காலத்தில் உத்தரபிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளாவில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரபிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு நிச்சயம் தீர்வு காணப்படத்தான் வேண்டும். ஆனால், 1952, 1963, 1973-ல் நடைபெற்ற மறுசீரமைப்புபோல அது சுலபமாக இருக்காது என்பது நிச்சயம்.
- வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
- ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு 1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
அமலாக்கத்துறையின் அக்கடிதத்தில், கே.என்.நேரு அமைச்சராக இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டட நிர்மாணம், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங், NABARD (வேளாண்மை வங்கி மற்றும் கிராம வளர்ச்சி வங்கி) திட்டங்கள், தூய்மைப்பணியாளர்கள் பணிக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புத் திட்டங்கள், நீர்/குளம் வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் முன்பே யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை வேலைக்கு பணம் பெற்றதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்படி அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கடிதம் அனுப்பி உள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்து காயமடைந்தார்.
- திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்து காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர் சிகிச்சைக்குப்பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அக்.10-ந்தேதி அவர் வீடு திரும்பினார்.
இதையடுத்து, வயிற்றுப் பகுதியில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (100) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிசிச்சை அளித்து வருகின்றனர்.
- உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது.
- 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன.
சென்னை:
இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 146 கோடியாக உயர்ந்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஆண்டுக்கு 1.5 சதவீதம் என்ற அடிப்படையில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இருக்கிறது.
உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. நாட்டில் இறப்பு விகிதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதே மக்கள்தொகை உயர்வுக்கான முக்கிய காரணமாக உள்ளது.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இங்கு பிறப்பு விகிதம் ஆண்டுக்கு, ஆண்டு கடும் சரிவை சந்தித்து வருகிறது.
பிறப்பு விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். அதாவது தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 591 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு, நேற்று வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக இருக்கிறது. அதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 138 குழந்தைகள்தான் பிறந்துள்ளனர்.
இன்னும் டிசம்பர் மாதம் முடிய 18 நாட்கள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும் 8 லட்சத்தை தாண்டுவது சற்று சிரமம்தான் என்று தெரிகிறது.
இந்த எண்ணிக்கையை கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதாவது 6 ஆண்டுகளில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 1.5 சதவீதம் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டு களில் சராசரியாக ஆண்டுக்கு 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 788 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். 2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 875 ஆக குறைந்தது. தொடர்ந்து 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 361 குழந்தைகளும், 2023-ம் ஆண்டில் 9 லட்சத்து 2 ஆயிரத்து 329 குழந்தைகளும் பிறந்து இருக்கிறார்கள்.
ஆனால் மிக குறைவாக தொடர்ந்து 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டுடன், இந்தாண்டு இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் சுமார் 67 ஆயிரத்து 715 குழந்தைகள் குறைவாக பிறந்து இருக்கிறது. இது 8 சதவீதம் சரிவு ஆகும்.
ரிசர்வ் வங்கியும், தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருவதை தனது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவலாக சுட்டிக்காட்டி உள்ளது.
அந்த அறிக்கையில் 'கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தில் 1,000 மக்களுக்கு 17 குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த 2024-ம் ஆண்டில் இது 12 என்று கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.
தமிழகத்தில் இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறைந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சி தடைபடும். அதேபோல மக்கள்தொகையின் அடிப்படையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதால், தமிழகத்திற்கான பங்கீட்டு தொகை குறையும். ஆனால் அதே நேரத்தில், சரியான கொள்கை திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டால், குறைந்த மக்கள்தொகையுடன் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கும் வாய்ப்பாக இது இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் முதியோர் விகிதம் அதிகரித்தால் சமூக பாதுகாப்பு செலவுகள் உயர்வு, முதியோர் நலத்திட்டங்களுக்கு கூடுதல் அழுத்தம் போன்ற சவால்களை தமிழக அரசு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.
- பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
- முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.
முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
நிகழ்ச்சியையொட்டி மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் கட்சி கொடிகளால் அலங்காரங்களும், மின்னொளி அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்ச்சிக்காக பிரமாண்ட அளவில் மேடை அலங்காரம் செய்யப்பட்டு இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சி திடலுக்கு செல்லும் வழியில் பிரமாண்டமாக வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மண்டலங்கள் வாரியாக நடைபெறும் இந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்பட்டு அதுவும் திருவண்ணாமலையில் முதலில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
- எஸ்ஐஆர் களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.
- பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4-ந் தேதி தொடங்கின. இந்தப் பணியின்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
எஸ்ஐஆர் களப்பணிகள் முடிவடையும் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் 2 முறை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி இந்த பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகின்றன. வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெற்று, அவை முழுவதையும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.
இந்த பதிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படுகிறது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
- நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான எகிப்துடன் இந்திய அணி மோதியது.
- இதில் 3-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எகிப்தை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் 7-1, 7-3, 7-6 என்ற நேர் செட்டில் வென்றார்.
மற்றொரு ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 3-1 என்ற செட் கணக்கில் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 6-7, 7-5, 7-3, 3-7, 7-3 என 3-2 என்ற செட் கணக்கில் வென்றார்.
இந்திய அணி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.
- ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
- மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான நிதியை விடுவிக்காததால் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தத்தங்குடியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன் என்பவரை மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
வயதான தாய், தந்தை மற்றும் கைக் குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்திற்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும்
பராமரிக்க முடியாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் குறிப்பிட்டு உடனடியாக தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் அவரது கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் வராததாலும், பணக் கஷ்டத்தினாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்ததினாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, மூன்று நாட்களுக்கு முன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடரவில்லை.
மேலும், ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது என்று, எனது பல
அறிக்கைகளிலும், பேட்டிகளிலும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்துள்ளேன்.
எனினும், தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று வானளாவிய விளம்பரம்
செய்கிறதே தவிர, உண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் படியைக்கூட பல மாதங்களாக முழுமையாக
வழங்காததால், ஆதிதிராவிட நல மாணவர் விடுதிக் காப்பாளர்களே சொந்தப் பணத்தை செலவு செய்து, மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.
எனது முந்தைய அறிக்கைகளில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வெளியாட்கள் தங்குவதையும், தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத நிலையையும்; தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 5.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், குடிநீர் வழங்காமல் காலம் தாழ்த்தியதையும்; புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து, இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்; ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை
முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் திமுக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது
முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.
விடியா திமுக அரசின் ஆதிதிராவிட நலத்துறை தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு உணவுப் படிகளை முழுமையாக வழங்காததால், விடுதிக் காப்பாளர்களே பல மாதங்களாக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக, விடுதிப் காப்பாளர்கள் மிகந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசு, திமுக அரசு என்று எப்போதும் கூறிக்கொள்ளும் மு.க. ஸ்டாலினின் 55 மாதகால விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்களைச் செய்வதாக விளம்பரம் மட்டும் வருகிறதே தவிர, எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலதில் நிதியை விடுவிக்காத விடியா திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறும், விடுதிக் காப்பாளர் மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும், பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது.
- அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. இந்த பட்டியல் தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது. அந்த தொகுதிகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் பா.ஜ.க. கட்சிக்கு வாக்குகள் கிடைத்து உள்ளன.
அதனை மையமாக வைத்தே சென்னை முதல் குமரி வரை 50 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கர், மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, வடசென்னையில் கொளத்தூர், தென்சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.
கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், தர்மபுரி தொகுதியில் பாலக்கோடு, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், ஈரோட்டில் பவானி, கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.
கரூரில் குளித்தலை, கிருஷ்ணகிரியில் ஓசூர், தளி, மதுரையில் மதுரை தெற்கு, நாமக்கல்லில் ராசிபுரம், நீலகிரியில் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளும் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கிணத்துகடவு, தொண்டா முத்தூர், வால்பாறை, ராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி, தென்காசி எம்.பி. தொகுதியில் தென்காசி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போடி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட ஒட்டபிடாரம், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வேலூரில் ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. கட்சி தயாரித்து வைத்துள்ளது.
மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி 50 தொகுதிகளில் களம் இறங்கும் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அமித்ஷா வியூகம் வகுத்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
வருகிற 15-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.






