என் மலர்
அரியலூர்
- உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
- அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார்.
அரியலூர்:
கோவையில் கொடீசியா வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரின் மூலமாக அரியலூர் நோக்கி புறப்பட்டார்.
அப்போது அமைச்சர் சிவசங்கர் கரூர்-மாயனூர் இடையே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி டீ குடித்தார். அந்த உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர்களிடம் உணவு மற்றும் காபி, டீ ஆகியவற்றை உண்பதற்கு உங்களுக்கென்று குறிப்பிட்ட இடத்தினை அரசு ஒதுக்கி இருக்கிறது. அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள். உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது என்று வினவியுள்ளார்.
அமைச்சர் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாத அப்போது அவர்கள் சற்று புலம்பியவாறு ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க? உங்க வேலையை பருங்க என்பது போல பதில் அளித்துள்ளனர். உடனே அமைச்சர் சிரித்தவாறு, நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? என கேட்டார்.
நீங்கா யாருன்னு தெரியலையே என டிரைவர், கண்டக்டர் கூறினார்கள். அதற்கு அமைச்சர் சிவசங்கர், நான் தான்பா உங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என கூறியதும் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் அவரிடம் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தனர். உடனே அமைச்சர் சிவசங்கர், இனி இதுபோன்று நடக்காமல் உங்களுக்கு உரிய இடங்களில் மட்டும் பேருந்தை நிறுத்தி உணவருந்தி விட்டு எடுத்து செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத டிரைவர், கண்டக்டர் இருவரும் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று கூறினர். பின்னர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு அரியலூர் நோக்கி சென்றார்.
- வெள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பணியின்போது மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. வெள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பணியின்போது மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் விழுப்புரத்தில் இருந்து அரியலூர் வழியாக திருச்சி சென்ற பயணிகள் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 45 மணிநேரமாக நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மவுன சாட்சியாக அமர்ந்திருந்தார்.
- கீழடி விவகாரத்தில் தமிழரின் தொன்மையை, பெருமையை நிலைநாட்டக் கூடாது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் பா.ஜ.க., இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சிக்கும்போது, முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்தது அவமானகரமாக உள்ளது.
அண்ணா பெயரை கொண்ட அ.தி.மு.க. என்பது அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அ.தி.மு.க.வாக மாறிவிட்டது. திராவிட இயக்கத்தினர் என்று சொல்லிக் கொள்பவர்கள்,
இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட ஒரு மேடையில் அவரை பேச விடாது, அமித்ஷா மட்டும் பேசி கூட்டணியை அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மவுன சாட்சியாக அமர்ந்திருந்தார். இது மெல்ல மெல்ல அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறி வருவதை காட்டுகிறது.
கீழடி விவகாரத்தில் தமிழரின் தொன்மையை, பெருமையை நிலைநாட்டக் கூடாது.
அப்படி ஒப்புக்கொண்டால் இந்தியை திணிக்க முடியாது என பா.ஜ.க. எண்ணுகிறது. அதே சமயத்தில் மக்களை பிளவுபடுத்தி மத ரீதியாக பிரித்து வட இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது போல, இங்கேயும் செயல்பட அவர்கள் எண்ணுகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அப்படி கிடையாது. அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள். பெரியார், அண்ணா திராவிட இயக்க தலைவர்கள் வழியில் வந்த கொள்கைகளை பார்ப்பவர்கள். அவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய மந்திரி அமித்ஷா, தமிழகத்துக்கு ஒரு முறைக்கு இருமுறை வந்தார்.
- இந்த நொடி வரை தி.மு.க. கூட்டணி தான் ஒரு கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது. வலுவாகவும் உள்ளது.
அரியலூர்:
அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டப் பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் சண்முகம் கூறியதை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் அப்படி தான் சிந்திக்க முடியும். நாங்களும் அப்படித்தான். தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கு முயற்சிப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், பேச்சுவார்த்தையின் போது இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம்.
அவர்களுடைய தேவைகளை கூட்டணி தலைவர் என்கிற முறையில் அவர்கள் உருவாக்கக்கூடிய குழுவிடம் தான் பேசுவோம். அவர்களுக்கு எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. எல்லாருக்கும் இடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கூறிய வாக்குறுதிகளை 100 விழுக்காடு நிறைவேற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. ஆகவே நானும் சொல்லுகிறேன் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். நாங்கள் கூடுதலாக மதுக்கடைகளை மூட வேண்டும். படிப்படியாக மூட வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக அதிலே ஒரு நிலைப்பாட்டை தி.மு.க. எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறோம்.
தி.மு.க. கூட்டணிக்கு சவாலாக அ.தி.மு.க. கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, இதுவரை எந்த சவாலும் ஏற்படும் சூழல் கனியவில்லை. தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக வலுவாக உள்ளது. அ.தி.மு.க கூட்டணி இன்னும் ஒரு வடிவமே பெறவில்லை.
மத்திய மந்திரி அமித்ஷா, தமிழகத்துக்கு ஒரு முறைக்கு இருமுறை வந்தார். கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொன்னார். ஆனால் பா.ஜ.க. எதிர்பார்த்ததற்கு மாறாக ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளே அந்த கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.
குறிப்பாக தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை. ஆகவே அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளைத் தவிர என்னென்ன கட்சிகள் அந்த கூட்டணியில் உள்ளன என்பதை இன்னும் நம்மால் முடிவுக்கு வர முடியவில்லை. இந்த சூழலில் அ.தி.மு.க.,பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லுவது ஒரு வகையான பில்டப் என்று சொல்ல வேண்டி உள்ளது. இந்த நொடி வரை தி.மு.க. கூட்டணி தான் ஒரு கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது. வலுவாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
- நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.
அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.
* அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.
* பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு விரும்பவில்லை.
* பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
* நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.
* தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கருத்து கேட்டு நீதிமன்றத்திடம் விவரம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கழிவறைக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டு அங்கு நின்றவர்கள் திரண்டனர்.
- மருத்துவமனை போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டிராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் லாரா.
நிறைமாத கர்ப்பிணியான இவர் இன்று காலை அரியலூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தார்.
அரசு மருத்துவமனை வார்டு பகுதிக்கு வந்ததும் லாராவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்த கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. உடனே அவர் குழந்தையை கழிவறைக்குள் வைத்து அமுக்கியுள்ளார்.
கழிவறைக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டு அங்கு நின்றவர்கள் திரண்டனர்.
அங்கு கதவை திறந்ததும் உள்ளே கழிவறை குழிக்குள் இறந்த நிலையில் குழந்தை கிடந்தது. உடனே லாரா அங்கிருந்து தப்ப முயன்றார். இதையடுத்து அப்பகுதியினர் அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவமனை போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தையை லாரா துடிக்க துடிக்க கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக லாராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை லாரா கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.
- பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி அடுத்து குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (வயது 39). இவர் பாப்பாபிடி தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி சுகுமார் (52) என்பவர் தனது நிலத்தின் பட்டா மாறுதல் செய்வதற்காக கேட்டுள்ளார். அதற்கு அவர் பட்டா மாற்றுவதற்கு ரூ.8 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.
அலுவலகத்திற்கு சென்ற குமார் பணத்தை வி.ஏ.ஓ. செல்வராசிடம் கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் செல்வராசுவை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரத்தை பறிமுதல் செய்து அலுவலகத்தில் தீவிர சோதனையும் நடத்தினார்கள். அப்பொழுது பட்டா மாற்றம் செய்வதற்காக நீண்ட நாட்களாக வைத்திருந்த சில ஆவணங்கள் மற்றும் மறைத்து வைத்திருந்த ரூ.11 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி னர்.
கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. செல்வராசு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
- காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (வயது 35). இவர் அப்பகுதி ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(27). இவர்களுக்கு 1 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் இவர்களது வீட்டு அருகே கடந்த 7-ந்தேதி எரிக்கப்பட்ட குப்பையில் ஆண் குழந்தை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
செந்துறை போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.
குழந்தை அன்று இரவு பிறந்த நிலையில் இறந்து கிடந்ததால் அந்த குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து சம்பவ இடம் அருகே உள்ள வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.
திவ்யாவிடம் விசாரணை செய்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. முதலில் போலீசாரிடம் திவ்யா கூறுகையில், தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும் ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும் இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்தது .
திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் எனது உறவினர் ஒருவர் குப்பையை எரித்து கொண்டு இருந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக நாடகம் ஆடினார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார்.
அப்போது குழந்தையை எரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினர். இதையடுத்து கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கைதான மதிவண்ணன் போலீசில் அளித்து ள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திவ்யா 3-வதாக கர்ப்பம் ஆனார். தான் கர்ப்பம் ஆனதை திவ்யா மறைத்து வந்தார். மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டது. அது குறித்து கேட்டதற்கு வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் கூறினார்.
இந்த நிலையில் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன். இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன். இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார்.
இதனால் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்த நிலையில் காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான மதிவண்ணன், திவ்யா ஆகிய 2 பேரும் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா திவ்யாவை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கவும் மதிவண்ணனை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
- கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
- கைதான 5 பேரும் செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கட்சிபெருமாள் கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. கடந்த 14-ந்தேதி இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்றார்.
மதியம் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டடு அதில் இருந்த 48 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், மேலும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர் பட்டப்பகலிலேயே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.
இதுகுறித்து வசந்தா உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்தார். இதனை அடுத்து கொள்ளையர்களை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உத்தரவின் படி, ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. சீராளன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களூக்கு சென்று கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன்(வயது 27), மணிக்காளை(29), சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த அழகு பாண்டி(24), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனசிங்(22), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(24) ஆகிய 5 பேர் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கொள்ளையர்கள் 5 பேரும் மதுரையில் பதுங்கி இருப்பதும் தெரிவந்தது. இதையடுத்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மதுரை சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 37 பவுன் தங்க நகைகள், 430 கிராம் வெள்ளி, 40 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் திருட்டுக்கு உபயோகித்த கார் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரும் செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போராடியும் அன்பழகனை மீட்க முடியவில்லை.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இன்று அதிகாலையில் சாலை தடுப்பில் மோதிய கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி மளமளவென எரிந்ததில் வெளியேற முடியாமல் காரை ஓட்டி வந்த ஹோட்டல் உரிமையாளரான அன்பழகன் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போராடியும் அன்பழகனை மீட்க முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து காருக்குள் இருந்து அன்பழகனின் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.
- சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொண்டாயிருப்பு காலனி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி சங்கீதா(வயது 24). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சங்கீதா, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரசவத்திற்காக கடந்த 26-ந் தேதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சங்கீதா அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரத்தப்போக்கு இருந்ததால், அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து கர்ப்பப்பையையும் அகற்றி உள்ளனர். தொடர்ந்து ரத்தப்போக்கு நிற்காத நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் சங்கீதா உயிரிழந்ததாக குற்றம்சாட்டி ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சூழலில் டாக்டர்களின் கவனக்குறைவே சங்கீதா சாவுக்கு காரணம் என்று குற்றம்சாட்டி குமார் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சங்கீதாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை.
- 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல் தரமற்ற விதைகளால் குறுகிய காலத்தில் கதிர் வந்து இழப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் தரமற்ற விதைகளால் 10 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்களும் பாதிப்பு அடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்து அதிகளவில் பயிரிடும் பயிராக மக்காச்சோளம் முக்கிய பயிராக உள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் தனியார் விதை நிறுவனங்களிடம் மக்காச்சோளப் பயிருக்கான விதைகளையும் தனியார் விதை நிறுவனங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயற்கை விவசாயிகள் ஒருபுறம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் அதிக மகசூல் கிடைக்கும் என ஆசை காட்டி அதிகளவில் மருந்து செலவு மகசூல் இழப்பு, படைப்புழுத்தாக்குதல், வேரழுகல் உள்ளிட்ட நோய்களும் மேலும் அதிகப்படியான வெப்பம் மழை இவற்றால் மரபணு மாற்றம் செய்து விற்பனை செய்யப்படும் விதைகளால் விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிப்பதும் உரிய இழப்பீடு கேட்டு போராடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையை போக்க விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 மூட்டைகளே பாரம்பரிய மக்காச்சோளப் பயிரில் விளைச்சல் வந்தாலும் எந்தவித ரசாயன மருந்துகளுமின்றி எரு மட்டும் பயன்படுத்தி மகசூல் இழப்பு வராமல் தடுக்க இயலும் என்கின்றனர் இயற்கை விவசாயிகள்.
இதற்கு தமிழக வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்காச்சோளப் பயிர்சாகுபடி செய்துள்ள பரப்பில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்து உள்ள விவசாய நிலப்பரப்புகள் புள்ளிவிவரத்துடன் சன்னாவூரில் 750 எக்டேர் கோக்குடி, பூண்டி, மலத்தாங்குளம், ஆங்கியனூர், கொரத்தக்குடி, விளாகம், பளிங்காநத்தம், வெங்கனூர், கீழக்காவட்டாங்குறிச்சி, தட்டான்சாவடி, எரக்குடி, வேட்டைக்குடி, அயன்சுத்தமல்லி, கீழப்பழுவூர், வெற்றியூர், சாத்தமங்கலம், கள்ளூர் விரகாலூர் திருப்பெயர் வண்ணம் புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் 4 ஆயிரம் எக்டேர் வீதம் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயிர்க்காப்பீட்டு மூலம் நிவாரணத்தொகையும் பயிர்க்காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ30 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் வங்கி மூலம் கடனாக ரூ23 ஆயிரம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் மக்காச்சோளப் பயிருக்கு அரசு ஏக்கருக்கு ரூ.2500 வழங்கியது. காப்பீட்டு நிறுவனத்திற்கு 2021, 2022, 2023 காப்பீட்டுத்தொகை 350 செலுத்தியும் இழப்பீடு தொகைக்கான புள்ளிவிவரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கொடுக்காத காரணத்தால் பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க இயலவில்லை என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் கூறுகையில், தங்க சண்முக சுந்தரம் மரபணு மாற்றம் செய்து வழங்கப்படும் மக்காச்சோள விதைகளால் பயிர் சாகுபடியின்போது விவசாயிகள் தொடர்ந்து கடனாளிகாக ஆக்கப்படுகின்றனர்.
எனவே தற்போதைய நிலையில் தரமற்ற விதைகளை வழங்கி மகசூல் இழப்புக்கு காரணமான நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் உடனடியாக மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்யவும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய விதைகளை வழங்கிட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் என்றார்.






