என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
- உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
- அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார்.
அரியலூர்:
கோவையில் கொடீசியா வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரின் மூலமாக அரியலூர் நோக்கி புறப்பட்டார்.
அப்போது அமைச்சர் சிவசங்கர் கரூர்-மாயனூர் இடையே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி டீ குடித்தார். அந்த உணவகத்தில் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர்களிடம் உணவு மற்றும் காபி, டீ ஆகியவற்றை உண்பதற்கு உங்களுக்கென்று குறிப்பிட்ட இடத்தினை அரசு ஒதுக்கி இருக்கிறது. அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள். உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது என்று வினவியுள்ளார்.
அமைச்சர் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாத அப்போது அவர்கள் சற்று புலம்பியவாறு ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க? உங்க வேலையை பருங்க என்பது போல பதில் அளித்துள்ளனர். உடனே அமைச்சர் சிரித்தவாறு, நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? என கேட்டார்.
நீங்கா யாருன்னு தெரியலையே என டிரைவர், கண்டக்டர் கூறினார்கள். அதற்கு அமைச்சர் சிவசங்கர், நான் தான்பா உங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் என கூறியதும் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரும் அவரிடம் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தனர். உடனே அமைச்சர் சிவசங்கர், இனி இதுபோன்று நடக்காமல் உங்களுக்கு உரிய இடங்களில் மட்டும் பேருந்தை நிறுத்தி உணவருந்தி விட்டு எடுத்து செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத டிரைவர், கண்டக்டர் இருவரும் இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று கூறினர். பின்னர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு அரியலூர் நோக்கி சென்றார்.