என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாளைக்கே முதலமைச்சர் ஆகிவிடுவது போல பேசுகிறார் - விஜய் மீது அமைச்சர் கே.என்.நேரு மறைமுக தாக்கு
- பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தவுடன், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் சோர்ந்து விட்டனர்.
- நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவை தொகுதி தி.மு.க. பாக நிலை முகவர்கள், டிஜிட்டல் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார்.
அமைச்சர் சசிவ சங்கர்,ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று வருவதை திண்ணை பிரச்சாரம் செய்வது, தோழமை கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது, கட்சிக்கு எதிரான பொய், அவதூறுகளை முறியடிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து களமாடுவது, புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது, 2 மாதங்களுககு முன்பு வரை நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் சவால் நிறைந்ததாக இருக்கும் என நினைத்தோம்.
தற்போது நமது கூட்டணியில் எந்தவித சஞ்சலமும், சலசலப்பும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஆனால் எதிரணியினர் அப்படி அல்ல. பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தவுடன், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் சோர்ந்துவிட்டனர். ஆட்சி அமைந்தால், அந்த அமைச்சரவையில் பா.ஜ.க.வும் பங்கு பெறும் என்று கூறி வருகின்றனர்.
ஆகையால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. பா.ம.க.-வினருக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நமக்கு ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது அரியலூர், பெரம்பலூரில் நமக்கு கூடுதல் பலம்.
பா.ஜ.க.-வினர் தாங்கள் தேர்தலில் வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க. வெல்லக்கூடாது என நினைக்கின்றனர். அதனால்தான் நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர். நாளையே முதல்வராவது போல் நான் உங்களோடு வரவில்லை, அவர்களோடு செல்லவில்லை என கூறிக் கொண்டுள்ளார்.
அதற்கெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. இளைஞரணியினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவது நமது கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.






