search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சியில் சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைத்து காட்டியது அம்பலம்
    X

    அ.தி.மு.க. ஆட்சியில் சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைத்து காட்டியது அம்பலம்

    • 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 12 சதவீதத்தில் இருந்து 83 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
    • பலி தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த தரவுகளில் பிழைகள் காணப்பட்டன.

    சென்னை

    சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தமிழக அரசுக்கு சிறப்பு விருது கிடைத்தது. ஆனால் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்தவர்கள் தொடர்பான தரவுகளை மீண்டும் ஆய்வு செய்தபோது, அந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஏற்கனவே காட்டப்பட்டுள்ள விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கையை விடவும் 22 ஆயிரத்து 18 பேர் கூடுதலாக மரணம் அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    கோர விபத்து காரணமாக 2017-ம் ஆண்டு 16 ஆயிரத்து 157 மரணம் காட்டப்பட்டிருந்த நிலையில், அது 17 ஆயிரத்து 926 ஆகவும், 2018-ம் ஆண்டு 12 ஆயிரத்து 216 நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அது 18 ஆயிரத்து 394 ஆகவும், 2019-ம் ஆண்டு 10 ஆயிரத்து 525 அரங்கேறியதாக கூறிய நிலையில், அது 18 ஆயிரத்து 129 ஆகவும், 2020-ம் ஆண்டு கடுமையான ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் 8 ஆயிரத்து 60 என பதிவாகியதாக கூறப்பட்டிருந்த நிலையில் அது 14 ஆயிரத்து 527 ஆகவும் பலி எண்ணிக்கை புதிய ஆய்வின்படி அதிகரித்துள்ளது.

    இதேபோல தமிழகத்தில் 2017-ம் ஆண்டு 15 ஆயிரத்து 61 ஆக இருந்த கோர விபத்துகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 911 ஆகவும், 2018-ம் ஆண்டு 11 ஆயிரத்து 375 ஆக இருந்த விபத்துகள் 17 ஆயிரத்து 388 ஆகவும், 2019-ம் ஆண்டு 9 ஆயிரத்து 813 ஆக இருந்த விபத்துகள் 17 ஆயிரத்து 196 ஆகவும், 2020-ம் ஆண்டு 7 ஆயிரத்து 560 ஆக இருந்த விபத்துகள் 13 ஆயிரத்து 868 ஆகவும் உயர்ந்திருப்பது மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்தமாக சாலை விபத்துகள் மட்டும் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 12 சதவீதத்தில் இருந்து 83 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது தெரியவந்து இருக்கிறது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட பலி தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த தரவுகளில் பிழைகள் காணப்பட்டன. அந்த தவறை சரிசெய்து பார்த்தபோது, விபத்துகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தரவுகளில் வேறுபாடு காண்பிப்பதற்காக நாங்கள் வழக்கமாக ஆய்வு செய்து பார்த்தபோது இந்த தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    வழக்கமான நடைமுறைப்படி, ஒவ்வொரு வழக்கையும் நாங்கள் ஆய்வு செய்தபோது இந்த வேறுபாடு தெரியவந்துள்ளது. சாலை விபத்துகள் மற்றும் அதனால் நிகழ்ந்த மரணம் தொடர்பான புதிய தரவுகள் மாநில அரசுக்கும், தேசிய குற்ற ஆவண காப்பகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலை விபத்துகள் மற்றும் அதனால் நிகழ்ந்த மரணத்தை கணிசமாக குறைத்தது தொடர்பாக, சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு தேசிய அளவில் 2 விருதுகளை பெற்றிருந்தது. சாலை விபத்துகளை குறைத்ததற்காக உலக வங்கிகூட தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போதைய ஆய்வின் மூலம் பெறப்பட்ட சாலை விபத்துகள் மற்றும் விபத்துகளில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை தொடர்பான புதிய தரவுகளால் அதற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால், சாலை விபத்துகள் மற்றும் அதனால் நிகழ்ந்த இறப்புகளை கணிசமாக குறைத்ததற்காக தமிழக அரசுக்கு 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தேசிய அளவில் வழங்கப்பட்ட விருதுகள் திரும்பப் பெறப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    Next Story
    ×