search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள பனியன் விற்பனை கடைகள்.
    X
    திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள பனியன் விற்பனை கடைகள்.

    ஆயத்த ஆடைகள் விலை 30 சதவீதம் உயர்வு- விற்பனை பாதிப்பால் வியாபாரிகள் கவலை

    நூல் விலை உயர்வு காரணமாக ஆயத்த ஆடைகளின் விலை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கான டீ சர்ட் பனியன் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூரில் பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் 20ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இந்நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் மகாராஷ்டிரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.56ஆயிரம் கோடி அளவுக்கு ஆடை வர்த்தகம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் மாதந்தோறும் நூல் விலை உயர்ந்து வருவது பின்னலாடை தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ நூல் ரூ. 360 முதல் ரூ.430 வரை விற்கப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ. 400 முதல் ரூ. 470 வரை உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் நூல் விலை ரூ.40 வரை உயர்த்தப்பட்டது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நூல் விலை உயர்வை கண்டித்து கடந்த 16,17-ந்தேதி திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 22-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே நூல் விலை உயர்வு காரணமாக ஆயத்த ஆடைகளின் விலை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கான டீ சர்ட் பனியன் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான டீ சர்ட் பனியன் ரூ.120ல் இருந்து ரூ.160ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான லெக்கிங்ஸ் ரூ.130ல் இருந்து 160ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் 10 எண்ணம் கொண்ட சிறியவர்களுக்கான பேக் ரூ.300ல் இருந்து ரூ.420ஆகவும், பெரியவர்களுக்கான பேக் ரூ.800ல் இருந்து ரூ.1100ஆகவும் உயர்ந்துள்ளது. பெரியவர்கள் அணியும் ஒரு பனியன் ரூ.80ல் இருந்து ரூ.110ஆக உயர்ந்துள்ளது.

    நூலால் தயாரிக்கப்பட்ட டிராக் பேண்ட் ரூ.200 முதல் ரூ.250க்கும், பஞ்சால் தயாரிக்கப்பட்டது ரூ.100 முதல் ரூ.130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆயத்த ஆடைகள் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் விற்பனை முன்பு போல் இல்லாததால் வியாபாரிகள் சற்று கவலையடைந்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் 2-ம் தர பனியன் விற்பனையாளர்கள் சங்க துணை தலைவர் எம்.ஜி.குமார் கூறியதாவது:-

    நூல் விலை உயர்வால் அனைத்து ஆயத்த ஆடைகளின் விலை 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் முன்பு போல் வாங்காமல் குறைந்த அளவே ஆயத்த ஆடைகளை வாங்குகின்றனர். 10 பனியன் வாங்குகிறவர்கள் தற்போது 2 குறைத்து 8 பனியன் வாங்குகின்றனர். விலை உயர்வே இதற்கு காரணம். ஆயத்த ஆடைகள் விலை உயர்வு காரணமாக வெளி மாநில வியாபாரிகள் திருப்பூரில் ஆடைகள் வாங்குவதை குறைத்து வருகின்றனர் என்றார்.

    திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்-ஏற்றுமதியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், நூல் உள்ளிட்ட ஆடைகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வந்த 400-க்கும் மேற்பட்ட சிறு, குறு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆடை உற்பத்திக்கான கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை இந்தியாவிலேயே தயாரித்தால் மூலப்பொருட்களின் விலை குறையும். மேலும் பஞ்சு வியாபாரிகள் ஆன்லைன் மூலம் பஞ்சுகளை வாங்கி பதுக்குகின்றனர். விலை ஏறும் போது அதனை விற்கின்றனர்.

    எனவே பஞ்சு பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் திருப்பூருக்கு கிடைக்கும் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் போட்டி நாடுகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

    கரைப்புதூா் நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் கரைப்புதூா் ராஜேந்திரன் கூறியதாவது:-

    துணி உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை விலை உயரவில்லை. 20 கவுண்ட் ரக நூல் கிலோ ரூ.160 ஆக இருந்தது. தற்போது ரூ.240 ஆக விலை உயா்ந்துள்ளது. பொருளாதாரம் பாதிப்படைந்து மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் வட மாநில ஜவுளி வியாபாரிகள் துணி கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டவில்லை.

    இதன் காரணமாக துணி விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இருப்பு வைக்கப்பட்ட துணிகளை நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலை பாதுகாக்க அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. திரும்ப பெறும் தொகைகளை உடனே வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள் தொழில் மேம்பாட்டுக்காக கடன் வாங்கி திணறி வருகின்றனா். சிலர் திவால் ஆகும் நிலையில் உள்ளனர். அவர்கள் வாங்கிய கடன்களுக்கு வட்டி சலுகை வழங்கிட வேண்டும். மேலும் தொழில்துறை வளர்ச்சி பெற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். பஞ்சு, நூல் பதுக்கலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைதரகர் இன்றி ஜவுளி உற்பத்தியாளர்கள் நேரடியாக துணிகளை விற்பனை செய்ய திருப்பூா், கோவை மாவட்டத்தின் மத்தியில் பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×