search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி ரெயில் நிலையத்திற்கு வந்த புதிய ரெயிலை ரவீந்திரநாத் எம்.பி. தலைமையில் மக்கள் வரவேற்றனர்
    X
    தேனி ரெயில் நிலையத்திற்கு வந்த புதிய ரெயிலை ரவீந்திரநாத் எம்.பி. தலைமையில் மக்கள் வரவேற்றனர்

    மதுரை - தேனி ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

    மதுரையிலிருந்து தேனி வரை இயக்கப்பட்ட புதிய ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    தேனி:

    மதுரை-போடி இடையேயான அகல ரயில்பாதை திட்டத்தில் மதுரை-தேனி வரை ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி தேனி ரயில் நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் எம்.பி., தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ‌ சரவணக்குமார், தேனி - அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், பெரியகுளம் அ.தி.மு.க. நகர்மன்ற வழிகாட்டுதல் குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌

    90.4 கி.மீ தூரமுள்ள மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்ட வழித்தடத்தில் தற்போது தேனி வரையில் உள்ள 75 கி.மீ தூரம் பணிகள்
    நிறைவடைந்துள்ளது.‌ இதனை பிரதமர் நரேந்திர மோடி  சென்னையில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதனைத்தொடர்ந்து மதுரையில் இருந்து தேனி வரை சிறப்பு ரயில் வந்தது.
    12 ஆண்டுகளுக்கு பிறகு  மதுரையில் இருந்து புறப்பட்டு தேனி வந்தடைந்த ரயிலை தேனி மாவட்ட மக்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். விழாவில் பங்கேற்ற ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்டோர் மலர் தூவி தேனி வந்த ரயிலை வரவேற்றனர்.

    இதன் பின்னர் ரவீந்திரநாத் எம்.பி., நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
    மதுரை - தேனி வரையில் ரயில் சேவை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் தேனியில் இருந்து போடி இடையிலான 15 கிலோமீட்டர் தூர ரயில் பாதையும் 3 மாதத்தில் நிறைவு பெறும். அதனைத்தொடர்ந்து போடியில் இருந்து சென்னை வரையிலான ரயில் சேவை தொடங்கி விடும்.

    கடந்த 2018-ம் ஆண்டு வரை சுமார் ரூ.48 கோடி மட்டும் நிதி ஒதுக்கப்பட்ட போடிநாயக்கனூர் - மதுரை அகல ரயில் பாதை திட்டத்திற்கு 2019-ம் ஆண்டிற்கு பின் ஏறக்குறைய ரூ.400கோடி வரையில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவுப் படுத்தப்பட்டது. 3 ஆண்டுகளில் துரிதமாக நடைபெற்ற பணிகள் தற்போது நிறைவடைந்து பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ‌தேனியில் இருந்து மதுரை வரை தற்போது தொடங்கப்படும் ரயில் சேவை விரைவில், சென்னை வரை நீட்டிக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வாரத்தில் 3 நாட்கள் விரைவு ரயில் இயக்கப்படும்.

    தேனி மாவட்ட கனவாக இருந்த போடிநாயக்கனூர் - மதுரை அகல ரயில் பாதை திட்டம் தற்போது நிறைவேற்ற–ப்பட்டிருக்கிறது. அதேபோல் தேனி மாவட்ட மக்களின் மற்றொரு கனவான திண்டுக்கல் - சபரிமலை அகல ரயில் பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இதில் திண்டுக்கல் -  லோயர்கேம்ப் இடையிலான ரயில் சேவை திட்டத்திற்காக கடந்த குளிர் கால கூட்டத்தொடரில் நான் எடுத்துரைத்துள்ளேன்.  அதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கான டி.பி.ஆர் ரிப்போர்ட் தயார் செய்வதற்கு ரயில்வே துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி பிரதமர் மோடியிடம் இந்த திட்டத்திற்கான விளக்க உரையை எடுத்துரைத்து தேனி மாவட்டத்திற்கு இத்திட்டத்தை விரைவில் கொண்டு வருவேன்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×